அதானி குழுமத்தின் எஃப்பிஓ ரத்தால் இந்தியாவுக்கு பாதிப்பா? நிர்மலா சீதாராமன் கூறியது என்ன?
அதானி என்டர்பிரைசர்ஸின் FPO பங்கு வெளியீடு ரத்து செய்யப்பட்டது, சர்வதேச சந்தையில் இந்தியாவின் மீதான பார்வையை பாதிக்காது என்று மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம், அதானி குழுமம் பங்குச்சந்தையில் திருகு வேலை செய்ததாகவும், கணக்கு மோசடிகள் செய்ததாகவும் அறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து அதானி குழுமத்தின் பங்குகள் சரசரவென சரிந்தன.
இந்த சூழலில் அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் எஃப்பிஓ நடந்ததால், சந்தையில் முதலீட்டாளர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், அதை ரத்து செய்ததாகக் கூறிய கௌதம் அதானி, முதலீட்டாளர்களுக்கு பணத்தை திரும்ப அளிக்க உள்ளதாகவும் கூறினார்.
இந்நிலையில், மும்பையில் பட்ஜெட் தொடர்பாக முதலீட்டாளர்களுக்கு விளக்கம் அளித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், "அதானி குழுமத்தின் எப்பிஓ ரத்தால் பாதிப்பு வருமா என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த நிர்மலா சீதாரமன், நம்முடைய மேக்ரோ எக்கனாமிக் எனப்படும் பேரியியல் பொருளாதாராம் அதாவது வேலைவாய்ப்பு, தொழில்வளர்ச்சி, மூலதனம், முதலீடு, சேமிப்பு, தனிநபர் வருமானம், வேளாண்மை ஆகியவை வலுவாக இருக்கிறது. சர்வதேச சந்தையில் நம்முடைய பொருளாதாரத் தோற்றமும் பாதிக்கப்படாது. எப்பிஓ வரலாம், அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பங்குகளை திரும்பப் பெறலாம் இது நம்மை பாதிக்காது," என்றார்.