1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Updated : சனி, 24 பிப்ரவரி 2024 (21:21 IST)

சீனா தயாரிக்கும் கிரேன்களைக் கண்டு அமெரிக்கா பயப்படுவது ஏன்?

crane
சீனாவில் தயாரிக்கப்படும் எடைதூக்கும் கருவிகளான கிரேன்கள் தொடர்பாக அமெரிக்கா சமீபத்தில் எடுத்த முடிவை சீனா விமர்சித்துள்ளது. தங்கள் நாட்டில் தயாரிக்கப்படும் கிரேன்கள் தொடர்பாக அமெரிக்கா கூறும் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரம் இல்லாதவை என்றும் சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 
கடந்த வெள்ளியன்று (பிப்ரவரி 23) செய்தியாளர் சந்திப்பின்போது எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவோ நிங், “சீனாவில் தயாரிக்கப்பட்ட கிரேன்கள் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்ற அமெரிக்காவின் கூற்று முற்றிலும் ஆதாரமற்றது,” என்றார்.
 
இதற்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான், அமெரிக்காவின் பைடன் அரசாங்கம், உள்நாட்டிலேயே கிரேன்களை தயாரிக்க அடுத்த ஐந்து ஆண்டுகளில் 20 பில்லியன் டாலர்களை (இந்திய மதிப்பில் சுமார் 1.65 லட்சம் கோடி ரூபாய்) செலவிடவுள்ளதாக கூறியது.
 
மேலும், சீனாவில் தயாரிக்கப்பட்ட கிரேன்கள் தொடர்பான சைபர் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு, அமெரிக்க கடலோர காவல்படை புதிய அறிவுறுத்தல்களை வெளியிடும் என்றும் அமெரிக்க அரசு தெரிவித்தது.
 
கட்டடங்களின் கட்டுமானப் பணிகள், துறைமுகங்களில் கொள்கலன்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டுசெல்வது, கப்பல்களில் அவற்றை ஏற்றி இறக்குவது போன்ற பணிகளுக்கு கிரேன்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை 'டவர் கிரேன்கள்' என்றும் அழைக்கப்படுகின்றன.
 
சர்வதேச வர்த்தகத்தில் பணிகளை விரைவுபடுத்த இத்தகைய ராட்சத கிரேன்களுக்கான இடம் இன்றியமையாதது. சமீப காலங்களில், தானியங்கி கிரேன்களும் தயாரிக்கப்படுகின்றன. இவை தங்களின் வேலையை விரைவாக செய்து முடிக்கின்றன.
 
ஸ்டேடிஸ்டா அறிக்கையின்படி, 2022-ஆம் ஆண்டில் உலக சந்தையில் கிரேன்களை அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் நாடாக சீனா இருந்தது. ஜெர்மனி இரண்டாவது இடத்திலும், ஸ்பெயின் மூன்றாவது இடத்திலும் இருந்தன.
 
பிப்ரவரி 23-ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்த, சீன வெளியுறவு அமைச்சகச் செய்தித் தொடர்பாளர் மாவோ நிங்கிடம் சீனாவில் தயாரிக்கப்படும் கிரேன்கள் தேச பாதுகாப்புக்கு அச்சறுத்தலாக இருப்பதாக லாஸ் ஏஞ்சல்ஸ் துறைமுகத்தின் நிர்வாக இயக்குநர் கூறியது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
 
 
"தேசிய பாதுகாப்பு என்ற கருத்தை அமெரிக்கா மிகைப்படுத்துவதையும், சீன தயாரிப்புகள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக அரச அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதையும் நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்," என்றார்.
 
"பொருளாதார மற்றும் வர்த்தக பிரச்னைகளை ஆயுதமாக பயன்படுத்துவது என்பது சர்வதேச அளவில் தொழில்துறை மற்றும் விநியோகச் சங்கிலிகளுக்கு ஆபத்தானது என்பதோடு பின்விளைவுகளை ஏற்படுத்தும்," என்று கூறிய அவர், சந்தை பொருளாதாரத்தின் கோட்பாடுகளையும் நியாயமான போட்டிகளையும் அமெரிக்கா மதிக்க வேண்டும். சீன நிறுவனங்கள் செயல்பட நியாயமான, பாரபட்சமற்ற சூழலை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
 
சீன நிறுவனங்களின் நலன்களுக்காகவும் அவற்றின் சட்டப்பூர்வமான உரிமைகளை பாதுகாக்கவும் சீன தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளும் என்றும் மாவோ நிங் கூறியுள்ளார்.
 
ராட்சத கிரேன்களை உற்பத்தி செய்யும் நாடுகளில் சீனா முன்னணியில் இருந்தாலும், சீன கிரேன்களின் பயன்பாட்டை நிறுத்துவது உலக வர்த்தகம் மற்றும் உலகப் பொருளாதாரத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்.
 
 
சமீபத்தில், வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்ட செய்தி ஒன்றில், பைடன் நிர்வாகம் உள்நாட்டிலேயே கிரேன்கள் தயாரிக்கப் பல பில்லியன் டாலர்களை (பல நூறு கோடி ரூபாய்கள்) முதலீடு செய்யத் தயாராக உள்ளது என்று கூறியிருந்தது.
 
இதற்கிடையே, அமெரிக்கத் துறைமுகங்களில் இணைய பாதுகாப்பை அதிகரிப்பதற்கான முன்னெடுப்புகளை கடந்த பிப்ரவரி 21-ஆம் தேதியன்று பைடன் நிர்வாகம் அறிவித்தது. இந்த வாரம், பிப்ரவரி 21 அன்று, பைடென் நிர்வாகம் அமெரிக்கத் துறைமுகங்களில் இணைய பாதுகாப்பை அதிகரிப்பதற்கான பிரச்சாரத்தை அறிவித்தது. அடுத்த ஐந்தாண்டுகளில் அமெரிக்க துறைமுகங்களின் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக அரசாங்கம் 20 பில்லியன் டாலர்களை (1.65 லட்சம் கோடி ரூபாய்) முதலீடு செய்யும் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டது.
 
அமெரிக்காவில் உள்ள புவிசார் அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகங்களுக்கு பொருட்களை எடுத்துச் செல்ல பயன்படுத்தப்படும் சீன கிரேன்கள் தொடர்பான சைபர் பாதுகாப்பு குறித்த கடல் பாதுகாப்பு தொடர்பான வழிமுறைகளை அமெரிக்க கடலோர காவல்படை வெளியிடும் என்றும் வெள்ளை மாளிகை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
 
இத்தகைய கிரேன்களின் உரிமையாளர்களும் அதனை இயக்குபவர்களும் புதிதாக வெளியிடப்படும் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் அதற்கேற்ப கிரேன்களில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள் தொடர்பாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 
சீனாவில் தயாரிக்கப்பட்ட கிரேன்களில் தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான நவீன மென்பொருட்கள் பொருத்தப்பட்டுள்ளதாகக் கூறும் அமெரிக்கா அவற்றுக்கு பதிலாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கிரேன்களைப் பயன்படுத்த விரும்புவதாக சீனாவின் அரச ஊடகமான குளோபல் டைம்ஸ் ஒரு செய்தியை வெளியிட்டது.
 
கடந்த ஜனவரி மாதம் சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாள வாங் வென்பின் செய்தியாளர் சந்திப்பின்போது, 'சீனாவால் அச்சுறுத்தல் என்று சில அரசியல்வாதிகள் பூதாகரமாக கூறி வருகிறார்கள். அவர்களின் உண்மையான நோக்கம் தேச பாதுகாப்பு என்ற பெயரில் சீனாவில் வளர்ச்சியை மட்டுப்படுத்துவதே' என்று கூறியதாகவும் குளோபல் டைம்ஸ் குறிப்பிட்டிருந்தது.
 
இசட்.பி.எம்.சி. நிறுவனத்தால் தயாரிக்கப்படும் கிரேன்களை ட்ரோஜன் ஹார்ஸ் உடன் ஒப்பிட்டு அவற்றில் கொள்கலன்களின் சேருமிடத்தை பதிவு செய்து கண்காணிக்கும் அதிநவீன சென்சார்கள் உள்ளதாக தேசிய பாதுகாப்பு மற்றும் பெண்டகன் அதிகாரிகள் சிலர் கூறியதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் குறிப்பிட்டதாகவும் தனது செய்தியில் குளோபல் டைம்ஸ் மேற்கோள் காட்டியிருந்தது.
 
ஷாங்காய் ஜினஹாவ் ஹெவி இண்டஸ்ட்ரீஸ் (ZPMC) என்பது துறைமுகங்களுக்கான கிரேன்களை உற்பத்தி செய்யும் உலகின் மிகப்பெரிய கிரேன் உற்பத்தி நிறுவனமாகும். இந்த சீன நிறுவனம் சுவிஸ் நிறுவனமான எபிபி உடன் நெருக்கமாக செயல்படுகிறது. இது அமெரிக்காவிற்கு அனுப்பப்படும் கிரேன்களில் எபிபி நிறுவனத்தின் கருவுகளை பொருத்தி அனுப்புகிறது.
 
கிரேட் நிகோபார்: சீனாவுக்கு சவால் தரும் இந்தியாவின் ரூ.74,000 கோடி திட்டம் என்ன? 
ஆனால் இந்த ஒப்பந்தம் தொடர்பாக சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாக விசாரிக்க அமெரிக்க நாடாளுமன்றத்தில் இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன, அவை இந்த இரண்டு நிறுவனங்களின் பணியின் பாதுகாப்பு குறித்து விசாரித்து வருகின்றன.
 
சீ ட்ரேட் மேரிடைம் நியூஸ் (Seatrade Maritime News) பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியின்படி, 'நாங்கள் பல நாடுகளுக்கு கிரேன்களுக்கான மென்பொருளை வழங்குகிறோம், சீனா உட்பட உலகின் பல நாடுகளின் நிறுவனங்கள் தங்கள் கிரேன்களில் அவற்றை நிறுவுகின்றன. அனைவருக்கும் ஒரேமாதிரிதான் வேலை செய்கிறோம்' என எபிபி நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
கடந்த ஆண்டு ஜூலை மாதம், ஜப்பானின் மிகப்பெரிய துறைமுகமான நகோயாவில் பணம் பறிக்கும் நோக்குடன் ஒரு இணைய தாக்குதல் நடத்தப்பட்டது. இதன் காரணமாக துறைமுகத்தின் பணிகள் 48 மணி நேரம் நிறுத்தப்பட்டது. ஆண்டுக்கு சுமார் 20 லட்சம் கன்டெய்னர்கள் இந்த துறைமுகம் வழியாக செல்கின்றன.
 
இந்த சைபர் தாக்குதலுக்குப் பிறகு, கடல்சார் பாதுகாப்பு தொடர்பான வல்லுநர்கள் கடல்சார் தொழில் குறித்து கவலை தெரிவித்ததோடு, சைபர் தாக்குதலை எதிர்கொள்ள இந்தத் தொழில் முழுமையாக தயாராக இல்லை என்று கூறினர்.
 
வெள்ளை மாளிகையின் கூற்றுப்படி சீனாவில் தயாரிக்கப்பட்ட 200 கிரேன்கள் அமெரிக்காவில் உள்ளதாகவும் இது அமெரிக்காவில் உள்ள மொத்த கிரேன்களின் எண்ணிக்கையில் 80% என்றும் என்.பி.ஆர் ஊடகம் கூறுகிறது.
 
கடலோர காவல்படை சைபர் செக்யூரிட்டி கமாண்டின் தலைவரான அட்மிரல் ஜே வான் கருத்துப்படி, தொலைதூரத்தில் இருந்து இயக்க முடியும் என்பதால், அவற்றின் பாதுகாப்பு குறித்து சந்தேகம் எழுப்பப்படுகிறது. கடலோர காவல்படை அவற்றின் பாதுகாப்பை சரிபார்த்து வருகிறது, மேலும் அவை தொடர்பாக சில விதிகளை உருவாக்க வேண்டும் என்கிறார்.
 
சி.என்.என் வெளியிட்ட செய்தி ஒன்றில், அமெரிக்க உளவுத்துறை நிறுவனமான எஃப்.பி.ஐ.யின் இயக்குநர் கிறிஸ்டோபர் வ்ரே, அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒரு குழுவிடம், 'சீன ஹேக்கர்கள் அமெரிக்க உள்கட்டமைப்பில் வலுவான பிடிப்பை கொண்டிருக்கிறார்கள், எனவே, அவர்கள் சீனாவுக்கு ஆதரவாக அமெரிக்க குடிமக்களுக்கு அழிவையும் தீங்கையும் ஏற்படுத்தக்கூடும்' என்று கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
கோவிட் தொற்றுநோய்க்குப் பிறகு, விநியோகச் சங்கிலி சீரானது, கட்டுமானத் துறையில் ஏற்றம் மற்றும் சர்வதேச வர்த்தகத்தின் அதிகரிப்பு போன்றவை காரணமாக கிரேன்களின் தேவை அதிகரித்தது. ஜப்பான், சீனா மற்றும் ஜெர்மனி ஆகியவை உலகின் மிகப்பெரிய கிரேன் ஏற்றுமதியாளர்களாக உள்ளன. 2022-இன் தரவுகளின்படி, கிரேன்கள் இறக்குமதியில் அமெரிக்கா முன்னணியில் உள்ளது. சுரங்கத் தொழில் மற்றும் நகரமயமாக்கல் அதிகரிப்பு போன்றவை காரணமாக அந்நாட்டில் கிரேன்களுக்கான தேவை அதிகரித்தது. 2022-இல் அமெரிக்கா $1.5 பில்லியன் (இந்திய மதிப்பில் சுமார் 12,000 கோடி ரூபாய் ) மதிப்புள்ள கிரேன்களை வாங்கியது.
 
அதே காலகட்டத்தில் இந்தியா 700 மில்லியன் டாலர் (சுமார் 5,800 கோடி ரூபாய்) மதிப்புள்ள கிரேன்களையும், ஜெர்மனி 600 மில்லியன் டாலர் ( சுமார் 4,900 கோடி ரூபாய் ) மதிப்பிலான கிரேன்களையும் வாங்கியது.
 
எனினும் 2021-ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது கிரேன் இறக்குமதியில் ஜெர்மனி, ஸ்பெயின் மற்றும் தென் கொரியாவுக்கு அடுத்தபடியாக அமெரிக்கா உள்ளது.