செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: சனி, 8 பிப்ரவரி 2020 (16:37 IST)

நரேந்திர மோதி காஷ்மீர் அரசியலை ஏன் வெறுக்கிறார்?

இந்திய நிர்வாகத்தின் கீழ் உள்ள காஷ்மீரில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள ஜம்மு - காஷ்மீரின் முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா மற்றும் மெஹபூபா முஃப்தியின் மீதும் இந்திய அரசால் புதிதாக சில குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள அவர்களின் உறவுகள் மற்றும் பிரதிநிதிகளால் சமூகத்திற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்பு உமர் அப்துல்லாவின் தந்தை ஃபரூக் அப்துல்லாவும் சமூக பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவர் என்று குற்றம் சாட்டப்பட்டது. இதனை சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான அம்னெஸ்டி இன்டர்நேஷனல் சட்டவிரோதமானது என விவரித்தது.

உமர் அப்துல்லா மற்றும் மெஹபூபா முஃப்தி இருவரையும் குற்றம் சாட்டும் அரசாணையில் பிரதமர் நரேந்திர மோதி நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய நாடு மீது பற்று கொண்ட எந்த அரசியல் தலைவரும் உமர் மற்றும் மெஹபூபா போல நாட்டையே அழித்துவிடுவோம் என மன்னிக்க முடியாத வகையில் பேச மாட்டார்கள் என பிரதமர் நரேந்திர மோதி குற்றம் சாட்டினார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய இந்திய அரசமைப்பு சட்டத்தின் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு ஜம்மு - காஷ்மீரின் முன்னாள் முதல்வர்கள் இருவரும் இதற்கான மோசமான விளைவுகளை இந்திய நாடு எதிர்கொள்ளும் என தங்கள் உரையில் எச்சரிக்கை விடுத்தனர்.

உமர் மற்றும் மெஹபூபாவுக்கு எதிரான புதிய தடுப்புக்காவல் உத்தரவு அரசியல் முன்னேற்றத்தின் நம்பிக்கையை மட்டும் சீர் குலைக்கவில்லை, காஷ்மீரின் அரசியல் கட்சி தொண்டர்களையும் முடங்கியுள்ளது.

"நாங்கள் அதிர்ச்சியில் மூழ்கிப் போயுள்ளோம். எங்கள் தலைவர், துணைத்தலைவர், பொது செயலாளர் என அனைவரும் மாநிலத்தின் எதிரிகள் என அறிவித்துள்ளார்கள். அடுத்து என்ன நடக்கும் என தெரியவில்லை, ஆனால் இங்கு நிலைமை அசாதாரணமாக உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்," என தேசிய மாநாட்டு கட்சியின் செய்தி தொடர்பாளர் இம்ரான் நபி தார் பிபிசியிடம் தெரிவித்தார்.

"நாட்டின் ஒருமைப்பாடுக்காகவும் ஒற்றுமைக்காகவும் தங்கள் வாழ்க்கை குறித்துகூட கவலைப்படாமல் துணிந்து செயல்பட்டவர்கள் இன்று சிறையில் உள்ளனர். இது அதிர்ச்சியாக மட்டுமல்ல வினோதமாக இருக்கிறது," என இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் குலாம் நபி ஆசாத் கூறினார்.

மோதி ஏன் காஷ்மீரின் பாரம்பரிய இந்திய சார்பு அரசியலை முற்றிலும் வெறுக்கிறார் என்பதுதான் இங்கு எழுப்பப்படும் முக்கிய கேள்வி.

இது குறித்து அரசியல் விமர்சகர் இஜாஸ் ஆயூப் கூறுகையில், ''பல தசாப்தங்களாக காஷ்மீரின் அரசியல் சூழலை காங்கிரஸ் அரசாங்கம் பொறுத்துக்கொண்டது போல, பா.ஜ.க பொறுத்துக்கொள்ள விரும்பவில்லை. உமரும் மெஹபூபாவும் ஒரு பிராந்திய தேசியவாத சிந்தாந்தக்கு இடமளிப்பார்கள். இது பிரிவினைவாதத்தையும் பாகிஸ்தான் சார்பு உணர்வை வளர்ப்பதாகவும் மோதியும் அவரது ஆலோசகர்களும் கருதுகின்றனர்.

''மோதி அரசாங்கம் பாகிஸ்தானுக்கு எதிராக போரை அறிவிக்கிறது. ஆனால் உண்மையில் பாகிஸ்தானுடன் பாரம்பரியமாக தொடர்பு கொண்டுள்ள காஷ்மீர் மீதுதான் போர் தொடுக்கப்படுகிறது. காஷ்மீர் மீது இந்திய மேற்கொள்ளும் சில நடவடிக்கைகள் தங்களின் அரசியல் நோக்கங்களை நிறைவேற்றலாம். ஆனால் நீண்ட நாட்களுக்கு இந்த நடவடிக்கைகள் இந்தியாவிற்கு நன்மை அளிக்காது,'' என்று மெஹபூபாவின் கட்சியுடன் இணைந்து செயல்படும் பெயர் சொல்ல விரும்பாத மூத்த செயற்பாட்டாளர் ஒருவர் கூறினார்.

மேலும் மோதி அரசாங்கத்திற்கு ஏதேனும் கவலை எழுந்தால், உடனடியாக காஷ்மீர் குறிவைக்கப்படுவதாகவும், ஒருவேளை டெல்லி சட்டமன்றத் தேர்தலில் கேஜ்ரிவால் வெற்றிபெற்றால் கூட அந்த கோபம் எங்கள் மீது திரும்ப வாய்ப்புள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

அரசியல் கட்சியினர் பொது மக்கள் உட்பட 400 பேரை தடுப்புக்காவலில் வைத்துள்ளதாக இந்தியாவின் உள்துறை அமைச்சகம் உறுதிப்படுத்துகிறது.

வேற்றுமைகளை வெளிப்படுத்தாமல், அத்தியாவச தேவைகள் மற்றும் அடிப்படை அரசியலுக்கு மட்டும் முக்கியத்துவம் அளித்து காஷ்மீரில் தங்களின் புதிய முத்திரையை பதிக்க மோதி அரசாங்கம் விரும்புகிறது என்றும் பலர் கருதுகின்றனர்.

வரலாற்றை திரும்பி பார்த்தால், 22 ஆண்டுகளுக்கு ஷேக் அப்துல்லாவை இந்திய அரசாங்கம் சிறையில் அடைத்தது. அவர் சிறையில் இருந்து வெளிவந்ததும், இந்திராகாந்தி அரசாங்கத்தின் அனைத்து சட்ட வரையறைகளுக்கு அவர் கட்டுப்பட்டார். அவர் இறந்து ஏழு ஆண்டுகளுக்கு பிறகுதான் காஷ்மீரில் ஆயுதப் போராட்டம் துவங்கியது, என்கிறார் அரசியல் விமர்சகர் இஜாஸ்.