புதன், 4 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 3 டிசம்பர் 2024 (12:56 IST)

வட தமிழகத்தை புயல்கள் அடிக்கடி தாக்குவது ஏன்? தென் தமிழகம் தப்பிக்க இலங்கை காரணமா?

சென்னை, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களை கொண்ட வட தமிழ்நாடு, அதன் புவியியல் அமைவிடம் மற்றும் வானிலை நிகழ்வுகள் காரணமாக, நீண்ட காலமாக புயல்களால் பாதிக்கப்படக்கூடியதாக உள்ளது. கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஃபெஞ்சல் புயலால் சமீபத்தில் ஏற்பட்ட சேதங்களே அதற்கு உதாரணம்.

 

 

தமிழகத்தின் தென் பகுதி, புயல் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டாலும், வட தமிழ்நாடு பல்வேறு காரணிகளால் அடிக்கடி மற்றும் தீவிரமான தாக்கங்களை எதிர்கொள்கிறது. புயல் அமைப்புகள் பொதுவாக உருவாகி தீவிரமடையும் வங்காள விரிகுடாவின் தாக்கம் மற்றும் வடக்கு கடற்கரையை நோக்கி புயல்களை வழிநடத்தும் காற்று வடிவங்கள் (wind model) இதில் முக்கிய காரணிகள் ஆகும்.

 

கூடுதலாக, வடக்கு கடற்கரையின் நிலப்பரப்பு, அதன் தாழ்வான பகுதிகள் மற்றும் அடர்த்தியான மக்கள்தொகை, இந்த புயல்களால் ஏற்படும் அபாயங்களை அதிகரிக்கிறது. 2024 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தாக்கிய ஃபெஞ்சல் புயல் பலத்த மழை, பலத்த காற்றுடன் சேர்த்து, கடலூர் மற்றும் விழுப்புரத்தில் பரவலான வெள்ளத்தையும் ஏற்படுத்தியது.

 

வட தமிழகம் புயல்களால் அதிகம் பாதிக்கப்படுவது புதிதானது அல்ல. நீண்ட காலமாகவே, வங்கக்கடலில் ஏற்படும் புயல்களில் அதிகமானவை, தமிழ்நாட்டின் வட கடலோரப் பகுதிகளையே தாக்கி வந்துள்ளன என்பதை இந்திய வானிலை ஆய்வு மைய தரவுகள் தெரிவிக்கின்றன.

 

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தரவுகளின் படி, 1819 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை உருவான 98 காற்று சுழற்சி தடங்களை ஆய்வு செய்ததில், அவற்றில் பெரும்பாலானவை வட கடலோர மாவட்டங்களையே அதிகமாக பாதித்துள்ளன. இந்த காலக்கட்டத்தில் ஏற்பட்ட 29 தீவிர புயல்களில் 23 புயல்கள் தமிழ்நாட்டின் வட கடலோரப்பகுதிகளில் கரையை கடந்துள்ளன.

 

அதே நேரம், ஆறு தீவிர புயல்கள் மட்டுமே தென் கடலோரப் பகுதிகளில் கரையை கடந்துள்ளன. மேலும், அப்போது உருவான 25 புயல்களில் 24 புயல்களும், 44 காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்களில் 34 காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்களும் வட தமிழ்நாட்டை பாதித்துள்ளன.

 

அந்த தரவுகள், வட கடலோர மாவட்டங்களிலேயே புயல்களின் தீவிரத்தன்மை அதிகமாக இருப்பதாகவும் குறிப்பிடுகின்றன.

 

பூமத்திய ரேகைக்கு அருகில் புயல்கள் குறைவு?
 

புயல்களின் தீவிரத்தன்மைக்கும் அது உருவாகும் இடத்துக்கும் தொடர்பு உள்ளது. பூமத்திய ரேகைக்கு அருகில் பொதுவாக புயல்கள் உருவாகுவது குறைவாக இருக்கும் என்றும், அதன் தீவிரத்தன்மை குறைவாக இருக்கும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

 

புயல்கள் உருவாகும் போது, அவை துருவமுனையை நோக்கி நகரும். உதாரணமாக, பூமத்திய ரேகைக்கு வடக்கில் அமைந்துள்ள இந்தியாவுக்கு அருகில் உருவாகும் புயல்கள் வடக்கு நோக்கி நகரும். தமிழ்நாட்டில் தென் பகுதி அல்லாமல் வட தமிழகம் புயல்களால் அதிகம் பாதிக்கப்படுவதற்கும் இதுவே காரணமாக அமைந்துள்ளது என்று, பிபிசி தமிழிடம் பேசிய வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

 

“பூமத்திய ரேகைக்கு அருகில் பூமியின் சுழற்சி குறைவாக இருக்கும். எனவே தான் அங்கு புயல் உருவாவதில்லை. பொதுவாக, பூமத்திய ரேகையிலிருந்து 5 டிகிரி தூரத்திலேயே புயல்கள் உருவாகும். விதிவிலக்காக சில புயல்கள் பூமத்திய ரேகைக்கு 2 டிகிரி தொலைவிலும் உருவாகியுள்ளன. ஆனால், அவை அரிதான நிகழ்வு. பூமத்திய ரேகையிலிருந்து மேலே செல்லச் செல்ல (higher latitude) புயல்கள் உருவாகும் வாய்ப்பு அதிகரிக்கும்,” என்று சென்னை வானிலை ஆய்வு மையத்தின் முன்னாள் இயக்குநர் ஒய்.இ.ஏ ராஜ் விளக்குகிறார்.

 

பிபிசி தமிழிடம் பேசிய தனியார் வானிலை ஆய்வாளர் க.ஶ்ரீகாந்த் இதே கருத்தை முன் வைக்கிறார். “அதாவது ஒரு பம்பரம் சுற்றுவது போல தான். சுற்றிக்கொண்டே இருக்கும் போது, பம்பரம் ஒரு திசையில் தனது வேகத்துக்கு ஏற்ப நகர்ந்துக் கொண்டே இருப்பது போலவே, புயலும் நகரும். புயல் தீவிரமடையும் போது, அது துருவமுனையை நோக்கி நகர்வது வழக்கம்.

 

பூமத்திய ரேகைக்கு வடக்கே இருக்கும் பகுதியில் (இந்தியா பூமத்திய ரேகைக்கு வடக்கில் உள்ளது) உருவாகும் புயல் வடக்கு நோக்கி நகர்வது வழக்கம். எனவே தான், தமிழக கடற்கரையை ஒட்டி வரும் புயல்கள் வடக்கு - வட மேற்கு திசையில் நகரும். அதனால் புயல்கள் தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்கம் என, மேலும் வடக்கு நோக்கி செல்கிறது” என்கிறார் .

 

வட இந்தியப் பெருங்கடல் பகுதியில் புயல் உருவாகும் காலமும் தமிழகத்துக்கு மழையை கொடுக்கும் என்றும், வட கிழக்குப் பருவமழை காலமும் அதனுடன் பொருந்திப் போகிறது என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

 

தானே புயல்
 

இதற்கான மிக சரியான உதாரணம், 2011ம் வட தமிழகத்தைத் தாக்கிய தானே புயல். 2011-ம் ஆண்டு தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக உருவாகி, பிறகு புயலாக வலுப்பெற்றது. தானே புயல் தொடர்ந்து மேற்கு வட-மேற்கு திசையில் எந்த விலகலும் இல்லாமல் நகர்ந்து கொண்டே வந்தது. மிக தீவிர புயலாக வகைப்படுத்தப்பட்ட தானே புயல், கடலூர் அருகே மணிக்கு 140 கி.மீ வேக சூரைக்காற்றுடன் கரையை கடந்து, அப்பகுதியில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது.

 

இலங்கை – 'தென் தமிழகத்தின் காவலன்'
 

தென் தமிழகத்துக்கு தீவிர புயல்கள் ஏற்படாமல் இருக்க பூகோள ரீதியான காரணமாக இலங்கை அமைந்துள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

 

திருச்சி என்ஐடி பேராசிரியர் சுப்பராயன் சரவணன் உட்பட ஆய்வாளர்கள் கடந்த 2022-ம் ஆண்டு வெளியிட்ட ஆய்வுக் கட்டுரையில், வங்கக் கடலில் ஏற்படும் புயல்கள் இலங்கை இருப்பதன் காரணமாக, திசை திருப்பப்பட்டு, வட தமிழகத்தை நோக்கி நகர்வதற்கு உதவுகின்றன என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

இலங்கை இல்லாமல் இருந்திருந்தால், புயல்களின் தாக்கம் தென் தமிழகத்தில் அதிகமாக இருந்திருக்கும் என்கிறார், வானிலை ஆய்வாளர் க.ஶ்ரீகாந்த்.

 

“இலங்கைக்கு அப்பால் உருவாகும் புயல், இலங்கையை கடந்து தமிழ்நாட்டின் பக்கம் வரும்போது அவை வலுவிழந்துவிடுகிறது. மேலும், இந்திய துணைக் கண்டத்தில் பூமத்திய ரேகைக்கு மிக அருகில் இருக்கும் பகுதி இலங்கை. அங்கு புயல்களின் தீவிரம் குறைவாக இருக்கும். தமிழ்நாட்டின் தெற்கு பகுதிக்கு அருகே இலங்கை அமைந்திருப்பதால், தென் தமிழ்நாட்டின் பாதுகாவலனாக இலங்கை இருக்கிறது என்று கூறலாம்” என்கிறார்.

 

விதி விலக்கான புயல்கள்
 

இதற்கு விதி விலக்காக, சில புயல்கள் இருந்துள்ளன. 1964ம் ஆண்டு உருவான பாம்பன் புயல், 1992ம் ஆண்டு உருவான தூத்துக்குடி புயல், 2017ம் ஆண்டு உருவான ஒக்கி புயல் ஆகியவை தென் தமிழகத்தை தாக்கிய வலுவலான புயல்கள் ஆகும்.

 

“பொதுவாக இலங்கையை கடந்து ஒரு புயல் வரும் போது அது வலுவிழந்துவிடும். ஆனால், பாம்பன் புயல் இலங்கையை கடந்து மன்னார் வளைகுடாவை தாண்டி தென் தமிழகத்தை வந்தடைந்தது. அதேபோன்று, 1992-ம் ஆண்டில் தூத்துக்குடி புயலும், பூமத்திய ரேகைக்கு மிக அருகில் ஏற்பட்ட புயல்களில் ஒன்றாகும்” என்று வானிலை ஆய்வாளர் க.ஶ்ரீகாந்த் விளக்குகிறார்.

 

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள, 1995ம் ஆண்டு வெளியான புயலின் தாக்கம் குறித்த கட்டுரையில், “இந்த புயலால் இலங்கையை விட தென் தமிழகத்திலேயே அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காரணம், கிழக்குத் தொடர்ச்சி மலைத் தொடர்களின் மீது காற்று மேலெழும்பியதாகும்” என்று தமிழகத்தில் குறைந்தது 200 பேரை பலி வாங்கிய தூத்துக்குடி புயல் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.

 

புயல்களின் தாக்கத்திற்கு மற்றொரு காரணத்தைக் குறிப்பிடுகிறார் வானிலை ஆய்வாளர் ஶ்ரீகாந்த், இந்திய அரபிக் கடல் பகுதியிலும், இந்திய சீனக் கடல் பகுதியிலும் உருவாகும் உயர் அழுத்தமே புயலை நகர்த்திக் கொண்டே செல்கிறது.

 

எந்தப் பகுதியில் உருவாகும் உயர் அழுத்தம் புயலை நகர்த்துகிறது என்பதும், புயலின் திசையை தீர்மானிக்கும் காரணிகளுள் ஒன்று. உதாரணமாக, ஃபெஞ்சல் புயல் சில மணி நேரம் எங்கும் நகராமல் அமைதியாக நிலவியதற்கு இது காரணமாக அமைந்துள்ளது. எந்த உயர் அழுத்தமும் அதை குறிப்பிட்ட சில மணி நேரங்களுக்கு நகர்த்தவில்லை என்கிறார் அவர்.

 

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு