வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 10 ஆகஸ்ட் 2023 (20:45 IST)

ஜெயிலர் முதல் காட்சியைப் பார்க்க இந்த 'ஜப்பான் ரசிகர்' சென்னைக்கு வந்தது ஏன்?

rajini jappan fan
நடிகர் ரஜினிகாந்தின் ரசிகரான ஜப்பான் ரசிகர் யசுதா கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக ரஜினி திரைப்படத்தின் ஓபனிங் ஷோ பார்ப்பதற்காக சென்னை வருவதை வழக்கமாக வைத்திருக்கும் நிலையில், தற்போது “ஜெயிலர்” திரைப்படத்திற்கும் தன் மனைவியுடன் சென்னை வந்துள்ளார்.
 
ஜப்பானைச் சேர்ந்த அவர் ரஜினி ரசிகரானது எப்படி? ரஜினியை முதன் முதலாக சந்தித்தது எப்படி? ரஜினி படம் உலகம் முழுவதும் ரிலீசாகும் போது ஓப்பனிங் ஷோவைப் பார்க்க சென்னை வருவது ஏன்?
 
“ஜெயிலர்” திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்க, அவருடன், மோகன் லால், ஜாக்கி ஷெராஃப், சிவ ராஜ்குமார், சுனில், ரம்யா கிருஷ்ணன், விநாயகன், தமன்னா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.
 
தொடர்ந்து புது இயக்குநர்களுடன் இணையும் சூப்பர் ஸ்டார் கிட்டத்தட்ட மூன்று தலைமுறைகளை தனது நடிப்பாலும், வசீகரத்தாலும் கட்டிப்போட்டு வைத்துள்ளார் என்றே கூறலாம்.
 
சமீபத்தில் வெளியான “ஜெயிலர்” பாடல்கள் வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விஜய்யை தாக்கி பேசியதாக சர்ச்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது.
 
”ஜெயிலர்” திரைப்படம், தமிழ் நாட்டில் மட்டும், 600 முதல் 700 திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளது. திரைப்படம் வெளியாவதற்கு முன்னமே ரசிகர்கள் ”ஜெயிலர்” ஹேஷ்டேகுகளை சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.
 
இந்நிலையில், கடந்த 20 ஆண்டுகளாக ரஜினியின் திரைப்பட ரிலீசுக்கு ஜப்பானிலிருந்து தவறாமல் சென்னைக்கு விசிட் அடிக்கும் யசுதா என்பவர், இந்த வருடமும் தவறாமல் “ஜெயிலர்” திரைப்பட ரிலீசுக்காக தனது காதல் மனைவி ஷாட்சுகியுடன் சென்னைக்கு வந்துள்ளார். பிபிசி தமிழுக்காக ஜப்பான் ரஜினி ரசிகர் யசுதாவை சந்தித்துப் பேசினோம்.
 
ஜெயிலர்: ரஜினி - விஜய் ரசிகர்கள் மோதல் ஏன்? வசூலில் இன்றைய 'சூப்பர் ஸ்டார்' யார்?
 
யசுதா (49 வயது) ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரத்தில் ஓட்டல் ரிசப்ஷனிஸ்டாக பணி புரிந்து வருகிறார். ஜப்பானில் ”முத்து” திரைப்படம் வெளியான போது அதனை திரையரங்கில் கண்டு ரசித்துள்ளார். அது முதல், சூப்பர் ஸ்டார் மீது பித்துப் பிடித்து, அவரின் பழைய திரைப்படங்களைத் தேடிக் கண்டுபிடித்து, ஒவ்வொன்றாகப் பார்த்து ரசிக்க ஆரம்பித்துள்ளார்.
 
அதோடு நிறுத்தாமல், சூப்பர் ஸ்டார் பற்றி நிறைய படித்துத் தெரிந்துள்ளார். ஆக்‌ஷன், காதல், காமெடி, நடனம் என அனைத்திலும் யசுதாவை சூப்பர் ஸ்டார் கவர்ந்துள்ளார். சூப்பர் ஸ்டார் திரைப்படங்கள் அல்லாது வெளி நிகழ்ச்சிகளுக்கு விக் எதுவும் இல்லாமல், மேக்கப் எதுவும் இல்லாமல் வருவது கண்டு, அவரது எளிமையின் மீது வெகுவாக ஈர்க்கப்பட்டுள்ளார்.
 
மேலும், ஜப்பானில் உள்ள நடிகர்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் மாதிரி நடனமாடத் தெரியாது எனக் கூறும் யசுதா, சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஒவ்வொரு திரைப்படத்திற்கும் சென்னை தியேட்டரில் ஓப்பனிங் ஷோ பார்ப்பது என முடிவெடுத்து, “பாபா” திரைப்படம் முதல் கடந்த 20 ஆண்டுளுக்கும் மேலாக சென்னைக்கு வருவதை வழக்கமாக்கியுள்ளார். “காலா”, “கபாலி”, “தர்பார்” உள்ளிட்ட திரைப்படங்களை சென்னை ரசிகர்களோடு தியேட்டரில் பார்த்தது மறக்க முடியாத அனுபவம் எனக் குறிப்பிடுகிறார்.
 
 
ஜப்பான் தியேட்டர்களில் திரைப்படம் பார்க்கும்போது அனைவரும் பாப் கார்ன் கொறித்துக் கொண்டே மயான அமைதியாக திரைப்படம் பார்ப்பார்கள். காமெடி காட்சிகள் திரையில் தோன்றினாலும் அமைதிதான். சென்டிமெண்ட் காட்சிகள் திரையில் தோன்றினாலும் அமைதி தான். சண்டை காட்சிகள் திரையில் தோன்றினாலும் அமைதி தான். நான் முதல் முறை சென்னை வந்து சூப்பர் ஸ்டாரின் திரைப்படத்தின் ஓப்பனிங் ஷோ பார்த்தபோது வியந்து விட்டேன். ரசிகர்கள் கூச்சலிட்டு கத்தி, ஆர்ப்பரித்து, கொண்டாடி திரைப்படத்தை ரசித்துப் பார்த்தார்கள்.
 
காமெடி காட்சியின்போது ரசிகர்கள் அனைவரும் வாய்விட்டு ஒன்றாக சிரித்தார்கள். ஆக்‌ஷன் காட்சிகளில் தியேட்டரில் விசில் பறந்தது. சென்டிமெண்ட் காட்சியின் போது சிலர் கண்ணீர் விட்டனர். அது என்னை வியப்பில் ஆழ்த்தியது. அந்தக் கொண்டாட்ட உணர்வே என்னை மீண்டும், மீண்டும் சென்னை வரத் தூண்டியது எனக் கூறுகிறார்.
 
நான் ஜப்பான் சென்று சென்னை ரசிகர்கள் பற்றி என் நண்பர்கள் பலரிடமும் நான் வியந்து கூறினேன். ஜப்பான் திரையரங்குகளில் இனி திரைப்படம் பார்க்கும்போது அவர்களையும் இது போன்று வெளிப்படையாக உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும் எனக் கூறினேன். குறிப்பாக, காமெடிக் காட்சிகளிலும், ஆக்‌ஷன் காட்சிகளிலும் கத்திக் கூப்பாடு போட்டு, விசில் பறக்க பார்க்க வேண்டும் எனக் கற்றுக் கொடுத்தேன் என்றார்.
 
 
யசுதாவிடம் நாம் பேச ஆரம்பித்தது முதல், நம்மிடம் முழுக்க முழுக்க தமிழிலேயே உரையாடினார். தமிழில் பேச சற்று தடுமாறினாலும், மிகச் சரியாக வார்த்தைகளை உச்சரிக்க வேண்டுமென்பதில் யசுதா மிகக் கவனமாக இருக்கிறார்.
 
சூப்பர் ஸ்டார் ரஜினியின் பஞ்ச் வசனங்கள் அத்தனையும் அடிபிறழாமல் கூறுபவரிடம் எப்பொழுதிலிருந்து தமிழ் கற்றுக் கொண்டீர்கள் எனக் கேட்டோம், அதற்கு அவர் "சூப்பர் ஸ்டாரின் ரசிகரான அன்றே, அவரை நான் ஒரு நாள் சந்திப்பேன், அன்று நான் அவரிடம் தமிழில் தான் உரையாடுவேன் என முடிவு செய்து கொண்டு, தமிழ் கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன். தமிழில் பேசுவது மட்டுமல்ல, நன்றாக எழுதவும் செய்வேன்" என உற்சாகமாகக் கூறுகிறார்.
 
"தமிழ் மிகவும் அற்புதமான மொழி. முதலில் நான் சூப்பர் ஸ்டாரின் சின்ன சின்ன பஞ்ச் வசனங்களை பயிற்சி செய்ய ஆரம்பித்தேன். எனக்கு இப்பொழுதும் நன்றாக நினைவிருக்கிறது நான் முதன்முதலில் “பாட்ஷா” திரைப்படத்தில் வரும் “நான் ஒரு முறை சொன்னா நூறு முறை சொன்னா மாதிரி” வசனத்தை சொல்லிப் பழகினேன். பின்னாட்களில் அதுவே எனக்கு மிகவும் பிடித்தமான வசனமாக மாறிப் போனது. எனது தமிழ் நண்பர்கள் யாரையாவது வியப்பில் ஆழ்த்த வேண்டுமென்று நான் நினைத்தால், நான் ஒரு முறை சொன்னா நூறு முறை சொன்னா மாதிரி வசனத்தைக் கூறிவிடுவேன்" என சத்தமாக சிரிக்கிறார்.
 
சரி, இத்தனை முறை சென்னை வந்துள்ளீர்கள் சூப்பர் ஸ்டாரை நினைத்தபடி சந்தித்தீர்களா? அவரிடம் தமிழில் உரையாடினீர்களா? எனக் கேட்டோம். அதற்கு, ஆம், ஒரு முறை நான் சூப்பர் ஸ்டார் வழக்கமாக வரும் ஓட்டல் ஒன்றிற்கு சென்று வெகு நேரம் காத்திருந்தேன். அங்கு கூட்டத்தோடு கூட்டமாக அவரிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். அவருக்கு எப்படியும் நான் நினைவில் இருக்க மாட்டேன் என யோசித்தேன். எனவே, சூப்பர் ஸ்டார் போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டிற்கு வெளியே நடை பயிற்சி மேற்கொள்வார் எனக் கேள்விப்பட்டு, சென்னைக்கு வரும்போதெல்லாம், அங்கு சென்று தவமாய் கிடப்பேன்.
 
அப்பொழுது ஒரு நாள் நான் எதிர்பார்த்தபடியே சூப்பர் ஸ்டார் நடை பயிற்சி மேற்கொள்ள வெளியே வந்தார். நான் அவரிடம் நேரே சென்று என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். என்னைப் பற்றியும், எனக்கு அவர் மீதுள்ள அபிமானத்தைப் பற்றியும் விவரித்தேன். அதற்கு சூப்பர் ஸ்டார் அவரது ட்ரேட்மார்க் புன்னகையான “ஹா ஹா ஹா”என்பதையே பதிலாக கொடுத்தார் என முகம் முழுக்க புன்னகையுடன் கூறுகிறார்.
 
 
சூப்பர் ஸ்டார் பக்தரான யசுதா ஒவ்வொரு முறை ஓப்பனிங் ஷோவிற்காக சென்னை வரும்போது தனது காதல் மனைவி ஷாட்சுகியுடனே வருகிறார். யசுதாவின் மனைவி ஷாட்சுகி அவருக்கு எவ்வளவு உதவிகரமாக இருக்கிறார் எனக் கேள்வியெழுப்பினோம். அதற்கு அவர், நான் ஒசாகாவில் சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகர் மன்றம் ஒன்றினை வெற்றிகரமாக நடத்தி வருகிறேன். ஆரம்பத்தில், 100 ரசிகர்கள் இருந்தனர். இப்பொழுது அதில் 500 ரஜினி ரசிகர்கள் உள்ளனர். நான் ரஜினியின் புகைப்படங்களால் அலங்கரிக்கப்பட்ட ஆட்டோ ஒன்றினையும் வைத்துள்ளேன். அது குறித்து, உள்ளூர் பத்திரிகை ஒன்றில் கட்டுரை ஒன்று வெளிவந்தது.
 
அந்தக் கட்டுரையைப் படித்துவிட்டு, ஷாட்சுகி என்னை தொலைபேசியில் அழைத்துப் பேசினார். சூப்பர் ஸ்டார் என்ற புள்ளியில் தான் நாங்கள் இணைந்தோம். அப்படியே பேச ஆரம்பித்து காதலில் விழுந்தோம். திருமணமும் செய்து கொண்டோம். எங்களுக்கு குழந்தை இல்லை. ஒரு வேளை குழந்தை பிறந்தால், அதனையும் ரஜினி ரசிகராக்கிவிடுவோம் எனக் கூறுகிறார்.
 
ஜப்பான் ரஜினி ரசிகர் மன்றம் எப்படி செயல்படுகிறது?
 
யசுதா ஜப்பானில் இயங்கிவரும் ரஜினி ரசிகர் மன்றத்தின் மூலம் நிறைய நலத் திட்டங்கள் செய்து வருகிறாராம். கொரோனா லாக் டவுன் போது அப்பகுதியில் வறுமையில் வாடிய மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்து அவர்களுக்கு உணவு வழங்குவது, வாரம் ஒரு முறை பாதுகாப்பு வசதிகளுடன், அனைவருக்கும் சூப்பர் ஸ்டார் திரைப்படத்தினை திரையிடுவது என பல உதவிகளை செய்துள்ளார்.
 
“பாபா” திரைப்படத்திலிருந்தே சென்னைக்கு வருவதை வழக்கமாக வைத்திருந்தாலும், இம்முறை “ஜெயிலர்” திரைப்படத்திற்காக சென்னை வந்திருப்பது சற்று வித்தியாசமான அனுபவம் எனக் குறிப்பிடுகிறார். சென்ற ஆண்டு, சென்னையிலிருந்து ஜப்பான் கலாச்சார மையத்திலிருந்து நிறைய பேர் ஜப்பானிற்கு சுற்றுலா வந்திருந்தார்கள். அவர்கள் அனைவரும் ஒசாகாவிலிருந்த எங்களை சந்தித்தனர்.
 
எனக்கு தமிழ் நன்றாக தெரியும் என்பதால் எங்களது ரசிகர் மன்றத்திற்கும் அவர்களை அழைத்துச் சென்றேன். நிறைய பாடல்கள் பாடி, ரஜினி பஞ்ச் டையலாகுகள் பேசி, நடனமாடி மகிழ்ந்தோம். இம்முறை நான் சென்னை வந்துள்ளதால் கடந்த ஞாயிறு அன்று சென்னையிலுள்ள தமிழ்நாடு ஜப்பான் கலாச்சார மையத்திற்கு சென்று அவர்களை சந்தித்தேன். அங்கு நிறைய ஜப்பான் மொழி கற்றுக் கொண்டிருக்கும் மாணவர்களையும், ஆசிரியர்களையும் சந்தித்து உரையாடினேன்.
 
அவர்கள் எனக்கு சிறியதாக ஒரு கலை நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தார்கள். அதில், சூப்பர் ஸ்டார் ரஜினியில் பாடல்களான ”அண்ணாமலை” திரைப்படத்தில் வரும் “வந்தேண்டா பால்காரன்” பாடலையும், “முத்து” திரைப்பத்தில் வரும் “ஒருவன் ஒருவன் முதலாளி” பாடலையும் ஜப்பான் மொழியில் பாடி என்னை மகிழ்வித்தார்கள். அதனை என்னால் மறக்கவே முடியாது என்றார்.