வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Updated : வியாழன், 18 ஜனவரி 2024 (21:51 IST)

குறைந்த மக்களே வசிக்கும் பாகிஸ்தான் பாலைவன பகுதியில் இரான் தாக்குதல் நடத்தியது ஏன்?

iran- pakistan
பாகிஸ்தானின் மேற்கு பகுதியில் இரான் தாக்குதல் நடத்தியதால் இருநாடுகளுக்கும் இடையே தூதரகவியல் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
 
பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ் அல்-அத்ல் என்ற ஆயுதக்குழுவினரின் தளங்கள் மீது இரான் நடத்திய தாக்குதல்களால் மத்திய கிழக்கில் நடந்து வரும் வன்முறைகள், அப்பகுதியைத் தாண்டியும் எதிரொலிக்கும் ஆபத்து தற்போது அதிகரித்துள்ளது.
 
இந்தத் தாக்குதல்களை உறுதி செய்த பாகிஸ்தான் அரசு, அதில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்ததாகத் தெரிவித்துள்ளது.
 
இந்தத் தாக்குதல்கள் தன் இறையாண்மையை மீறுவதாகவும், இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் பாகிஸ்தான் கூறியுள்ளது.
 
இரானை எச்சரித்துள்ள பாகிஸ்தான், "எங்கள் வான்வெளியில் அத்துமீறி நுழைந்து நாட்டிற்குள் தாக்குதல் நடத்துவதை நாங்கள் கண்டிக்கிறோம். இது பாகிஸ்தானின் இறையாண்மையை மீறுவதாகவும், கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் விதத்திலும் உள்ளது," என்றும் கூறியுள்ளது.
 
பாகிஸ்தானுடனான தனது எல்லைக்கு அருகில் செயல்படும் ஜெய்ஷ்-அல்-அத்ல் என்ற சுன்னி தீவிரவாத அமைப்புக்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆதரவு அளித்து வருவதாக இரான் கூறுகிறது. கடந்த காலங்களில், இரானிய பாதுகாப்புப் படைகள் மீதான பல தாக்குதல்களுக்கும் இந்த அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
 
பாகிஸ்தான் இந்தத் தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்த போதிலும், பல்லுக்குப் பல் என்பதைப் போல் எந்த எதிர் நடவடிக்கையையும் மேற்கொள்ளும் நிலைக்கு பாகிஸ்தான் சென்றால் அதில் மிகப்பெரிய ஆபத்து இருக்கிறது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். அதனால் பாகிஸ்தான் பெரிய அளவில் எதிர்வினையாற்றும் நிலை ஏற்படாது என்றும் கருதப்படுகிறது.
 
இரானின் உயர் அதிகாரியை வரவழைத்து பாகிஸ்தான் சமீபத்திய தாக்குதல் குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.
 
இரானின் புரட்சிகர காவலர் படை (IRGC) இராக் மற்றும் சிரியாவில் உள்ள பல இலக்குகள் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்திய மறுநாள், இரானின் ராணுவம் பாகிஸ்தானைத் தாக்கியது. பாகிஸ்தான் முன்னாள் அமைச்சரும் வெளியுறவுக் கொள்கை நிபுணருமான முஷாஹித் ஹுசைன் சையத் இதுகுறித்துக் கூறுகையில், இந்த திடீர் தாக்குதல் பாகிஸ்தானையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது என்றார்.
 
தொடர்ந்து பேசிய அவர், "சமீபத்திய சம்பவத்திற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, இரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் டாவோஸில் பாகிஸ்தானின் காபந்து பிரதமரை சந்தித்து மிகவும் அன்புடன் உரையாற்றினார்.
 
"இருப்பினும் இரானின் இந்த தாக்குதல் நடவடிக்கையில் இரு நாடுகளுக்கும் இடையே எந்த தொடர்பும் அல்லது ஒருங்கிணைப்பும் இல்லை என்பது இஸ்லாமாபாத்தை மிகவும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
 
"எனது பார்வையில், இரானிய புரட்சிகர காவலர்களின் இந்த இரகசிய நடவடிக்கை ஆழமான தாக்கங்களைக் கொண்டுள்ளது என்பதுடன் பரந்த அளவில் பார்க்கப்பட வேண்டும்," என்றார்.
 
இருநாட்டுத் தலைவர்களுக்கு இடையே உயர்மட்ட சந்திப்பு மட்டுமின்றி, இரான் மற்றும் பாகிஸ்தான் கடற்படையினர் ஹோர்முஸ் ஜலசந்தியில் ஒரு நாள் பயிற்சியும் நடத்தினர். இரானின் செய்தி நிறுவனமான ஐ.ஆர்.என்.ஏ.வும் செவ்வாய்க்கிழமையே இது குறித்து செய்தி வெளியிட்டிருந்தது.
 
இரான் எல்லைக்குள் ஏவுகணை தாக்குதல்: பாகிஸ்தான் கூறும் காரணம் என்ன?
 
பாகிஸ்தானைத் தாக்கியதற்கு முன்பு, சிரியா மற்றும் இராக் மீது இரான் தாக்குதல் நடத்தியது.
 
இந்த தாக்குதல்கள் இருதரப்பு ஒப்பந்தங்கள் மற்றும் சர்வதேச விதிகளை மீறுவதாக முஷாஹிட் கூறுகிறார். 'காஸாவில் ஏற்கனவே இனப்படுகொலை நடைபெற்றுக் கொண்டிருக்கும்' நேரத்தில் இது இஸ்லாமிய ஒற்றுமையை பலவீனப்படுத்துகிறது என்றார் அவர்.
 
இரானின் அணுகுமுறையை விமர்சிக்கும் அவர், இரான் தனது கோபத்தை இஸ்ரேலின் மீது திருப்புவதற்கு பதிலாக 24 மணி நேரத்தில் மூன்று முஸ்லிம் நாடுகளை தாக்கியுள்ளது என்று அவர் கூறுகிறார்.
 
“இத்தகைய பாசாங்குத்தனமும் இரட்டை வேடமும் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியவை,” என்றும் அவர் தெரிவித்தார்.
 
வரலாற்றில் கூட, பாகிஸ்தானுக்கும் இரானுக்கும் இடையிலான உறவுகள் ஏற்ற தாழ்வுகள் நிறைந்தவையாகவே இருந்து வருகின்றன. 1947-இல் பாகிஸ்தானை ஒரு நாடாக அங்கீகரித்த முதல் நாடு இரான். பாகிஸ்தான் தனது முதல் தூதரகத்தை இரானிலேயே திறந்தது. பனிப்போரின் போது கூட, இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் தொடர்ந்து ஒத்துழைத்து, ஒரே புவிசார் அரசியல் குழுவின் பகுதியாக இருந்தன.
 
1965-ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போரின் போது இரான் பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருந்தது. இருப்பினும், 1979-ஆம் ஆண்டு இரானில் நடந்த புரட்சி மற்றும் 'ஆப்கான் ஜிஹாத்' ஆகியவற்றின் போது, ​​சௌதி அரேபியாவால் ஈர்க்கப்பட்ட இஸ்லாத்தின் வஹாபி வடிவத்துக்கு பாகிஸ்தான் ஆதரவாகச் செயல்பட்டது ஒரு தவறான புரிதலை உருவாக்கியது.
 
1990களில், இரான், பாகிஸ்தானிய ஷியாக்கள் மூலம் நாட்டிற்குள் மதவாத பதட்டங்களை அதிகரித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. அதே நேரத்தில், ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் அரசுக்கு பாகிஸ்தானின் ஆதரவை இரானும் ஏற்கவில்லை.
 
இந்தியாவுடன் பாகிஸ்தானின் வளர்ந்து வரும் நட்பும், அமெரிக்காவுடன் பாகிஸ்தானின் நெருக்கமும் இரு நாடுகளுக்கும் இடையேயான இடைவெளியை மேலும் அதிகமாக்கியது.
 
2018-ஆம் ஆண்டில், இரான் தனது துறைமுகமான சபஹரின் ஒரு பகுதியை இந்தியாவுக்கு வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்த விஷயம் இஸ்லாமாபாத்துக்குப் பிடிக்கவில்லை.
 
பாகிஸ்தானில், கவாதர் துறைமுகத்தின் வியூக ரீதியிலான முக்கியத்துவத்தை குறைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கையாக சபஹர் ஒப்பந்தம் கருதப்பட்டது.
 
ஆனால், பலமுறை இருநாடுகளின் உறவில் பதற்றம் ஏற்பட்ட போதிலும், அந்நாடுகளுக்கு இடையே பெரிய மோதல் எதுவும் ஏற்படவில்லை. இருப்பினும், இருதரப்பு உறவுகளை வலுவாக்க இருநாடுகளும் தவறிவிட்டன.
 
இஸ்லாமாபாத்தில் உள்ள ‘இன்ஸ்டிடியூட் ஆஃப் ஸ்ட்ராடஜிக் ஸ்டடீஸின்’ ஆராய்ச்சிப் பிரிவுடன் இணைந்து பணியாற்றும் அர்ஹாமா சித்திக்காவின் கூற்றுப்படி, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் 2021 முதல் முன்னேற்றப் பாதையில் உள்ளன எனத்தெரியவருகிறது.
 
இது குறித்துப் பேசிய அவர், “இருதரப்பு வர்த்தகம் கிட்டத்தட்ட இருமடங்காகிவிட்டது. சர்தாரின் பாதுகாப்பு தொடர்பாக இரு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு, ஒருங்கிணைப்பு மற்றும் தகவல் தொடர்பு அதிகரித்துள்ளது. வழக்கமான ராணுவ பயிற்சிகள் நடந்தன. கடத்தலைத் தடுக்க பல எல்லைச் சந்தைகள் உருவாக்கப்பட்டுள்ளன. சமீபத்தில், இரு நாடுகளுக்கும் இடையே மின் விநியோக பாதையும் இயக்கப்பட்டது,” என்றார்.
 
இப்போது கூட இரானிய பிரதிநிதிகள் பாகிஸ்தானில் இருப்பதாக அர்ஹாமா கூறுகிறார்.
 
 
பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர் 2023 ஜூலையில் தெஹ்ரானுக்குச் சென்றார். அங்கு அவர் அந்நாட்டு ராணுவத் தளபதியைச் சந்தித்தார். ராணுவ தளபதியாக பதவியேற்ற பிறகு முனீர் எந்த நாட்டிற்கும் செல்வது அதுவே முதல் முறை. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், இரான் வெளியுறவு அமைச்சர் இரண்டு நாள் பயணமாக இஸ்லாமாபாத்திற்கு வந்தார். அங்கு ஆப்கானிஸ்தான் தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றது.
 
இந்தப் பின்னணியில் இரான் தாக்குதல்களை புரிந்துகொள்வது கடினமாகி வருகிறது.
 
அர்ஹாமா தொடர்ந்து பேசுகையில், “பாகிஸ்தான் நிலைமையை மிகவும் கவனமாக கண்காணித்து வருகிறது. அது தனது இறையாண்மையில் சமரசம் செய்து கொள்ள முடியாது. ஆனால் அதே நேரத்தில் தனக்கென இன்னொரு முன்னணியைத் திறக்க விரும்பவில்லை. இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானுடனான உறவுகள் ஏற்கனவே பதட்டமாக உள்ளன. மற்றொரு அண்டை நாட்டவருடனான உறவில் விரிசல் ஏற்படுவதை பாகிஸ்தான் விரும்பவில்லை,” என்றார்.
 
“இரானுக்கும் சௌதி அரேபியாவுக்கும் இடையிலான உறவுகளில் சமநிலையை பேணுவதில் இதுவரை பாகிஸ்தான் வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டு முன்னாள் தூதரக அதிகாரி இக்ரம் சேகல் தெரிவித்துள்ளார். தெஹ்ரானுடன் பாகிஸ்தானின் உறவு நன்றாகவே உள்ளது என்றும் அவர் கூறுகிறார்.”
 
சௌதி அரேபியாவுடன் இணக்கமான போக்கைக் கடைபிடிக்கவும், அதன் நட்பு நாடுகளில் ஒன்றாக இருக்கவும் பாகிஸ்தான் மறுத்த சந்தர்ப்பங்களும் உண்டு. 2015-இல், ஏமனின் உள்நாட்டுப் போரில் சௌதி அரேபிய கூட்டுப்படை தலையிடத் தொடங்கியது. பாகிஸ்தானையும் அதில் சேருமாறு சௌதி அரேபியா கேட்டுக்கொண்டது. ஆனால் பாகிஸ்தான் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டது.
 
பாகிஸ்தானின் முடிவு சௌதி அரேபியாவிற்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இருப்பினும் ஏமன் போரில் இரானின் பங்கைக் கருத்தில் கொண்டு சௌதி கூட்டணியில் சேர பாகிஸ்தான் மறுத்துவிட்டது.
 
ஏமனின் ஷியா-சுன்னி போட்டியின் நிழல் தனது நாட்டின் மீதும் விழுவதை பாகிஸ்தான் விரும்பவில்லை. இருப்பினும், சமீப காலமாக, சௌதி அரேபியாவுக்கும் இரானுக்கும் இடையிலான உறவில் ஏற்பட்டுள்ள விரிசல், இத்தகைய அழுத்தங்களில் இருந்து பாகிஸ்தானை விடுவித்துள்ளது.
 
பாகிஸ்தானின் தற்காலிக பிரதமர் அன்வருல் ஹக் கக்கர் இரானுடன் சுமூகமான உறவைப் பேணிவருகிறார்.
?
இக்ராம் சேகல் கூறுகையில், இரானும் மற்றொரு அண்டை நாட்டுடனான உறவைக் கெடுக்க விரும்பவில்லை.
 
இரான் ஏற்கனவே அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை எதிர்கொண்டு வருகிறது என்று சேகல் கூறுகிறார். இது தவிர, ஏமன், சிரியா மற்றும் பாலத்தீனத்தில் பல பிராந்திய மோதல்களிலும் ஈடுபட்டுள்ளது. பொருளாதார தடைகளை எதிர்கொள்ளும் போது இரான் எத்தனை மோதல்களில் ஈடுபட முடியும்?
 
தொடர்ந்து பேசிய இக்ராம் சேகல், ​​“இரு நாடுகளும் இந்தப் பிரச்சினையைத் தீர்க்கும் என்பதுடன் மேலும் நிலைமை மேலும் மோசமடையாது என்று நான் உறுதியாக நம்புகிறேன். எல்லை தாண்டி தாக்குதல் நடத்தும் அனைத்து குழுக்களையும் பாகிஸ்தான் கடுமையாக கையாள வேண்டும். அதன் நிலத்தை வேறு எந்த நாட்டுக்கும் எதிராக பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது. மேலும், எதிர்காலத்தில் இரான் இதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்கக் கூடாது,” என்றார்.
 
இதுபோன்ற தாக்குதல்களை நடத்துவதற்கு முன் இரான் தனது கருத்துக்களை பாகிஸ்தான் ராணுவத்துடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். இது நடக்கவில்லை என்றால் மீண்டும் போர் மூளும் அபாயம் இப்பகுதியில் உருவாகும். "இரான் தற்போதைய தாக்குதல்லைப் போல் தொடர்ந்து ஏதாவது அத்துமீறலில் ஈடுபடுமானால் இங்குள்ள மக்களுக்கு அது ஒரு சுமையாக இருக்கும். ஒரு போர் மூளும் அபாயத்தை நிச்சயமாகத் தடுக்கமுடியாது," என்றார்.
 
 
ஆயுதக் குழுக்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக இரான் அறிவித்துள்ளது
 
 
செவ்வாய்க்கிழமை மாலை, இரான், பாகிஸ்தானின் பலுச்சிஸ்தான் மாகாணத்தின் பஞ்ச்குர் மாவட்டத்தில் உள்ள சப்ஸ் கோ என்ற எல்லை கிராமத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
 
பஞ்ச்குர் பலுச்சிஸ்தானில் மிகவும் குறைந்த மக்கள் தொகை கொண்ட பகுதியாகும், இந்த தாக்குதல் நகரத்திலிருந்து 90 கிலோமீட்டர் தொலைவில் நடந்துள்ளது.
 
பஞ்ச்குரில் உள்ள உள்ளூர் நிர்வாக அதிகாரி ஒருவர் பிபிசியிடம், இப்பகுதியில் பொதுவாக ஆடு மாடுகளை வைத்திருக்கும் பலுச் பழங்குடி மக்கள் வசிக்கின்றனர். இது மலைகள் மற்றும் பாலைவனங்கள் இரண்டும் கொண்ட, கடக்க கடினமான நிலப்பகுதி என்கிறார்.
 
பஞ்ச்குரில் உள்ள ஒரு நேரடி சாட்சியானவர் பிபிசியிடம் பேசுகையில், மாலை நேரத்தில் ஹெலிகாப்டர்கள் மற்றும் ‘ட்ரோன் போன்ற சத்தம்’ கேட்டு அருகில் ஏதோ நடக்கிறது என்று நினைத்ததாகக் கூறினார். “அப்போது எந்த ஊடகமும் இதைப் பற்றி செய்தி வெளியிடவில்லை,” என்றார்.