1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 17 டிசம்பர் 2024 (12:21 IST)

இந்த மிகப்பெரிய மரவள்ளிக் கிழங்கை காப்பாற்ற பழங்குடி பெண்கள் போராடுவது ஏன்?

Maravalli Kizhangu

தென்னிந்திய மாநிலமான கேரளாவில் நாட்டின் பழமையான மரவள்ளிக் கிழங்குக்கு புத்துயிரூட்ட பழங்குடியின பெண்கள் கடுமையாக முயற்சி எடுத்துவருகின்றனர்.

 

 

நிலத்திற்கு அடியில் விளையும் பெரிய, கெட்டியான மரவள்ளிக் கிழங்கை தோண்டி எடுக்க ஒருநாளில் பல மணிநேரங்களை செலவிடுகிறார்.

 

அவற்றில் சில எளிதில் பிடுங்க முடியாத அளவுக்கு 5 கிலோ எடையும் 4.5 அடி நீளமும் கொண்டவை. அதாவது, ஏறத்தாழ லஷ்மியின் உயரத்தை ஒத்தவை. மிகவும் கடுமையான பணி இது என்கிறார், 58 வயதான லஷ்மி.

 

முதலில் அவர் நிலத்திற்கு மேலே உள்ள தடிமனான தளிரை வெட்ட வேண்டும். பின்னர் அதை சுற்றியுள்ளவற்றை மண்வெட்டி மூலம் அகற்றி, துடுப்பு போன்று தட்டையான கருவியால் கவனமாக மரவள்ளிக் கிழங்கை வெளியே எடுக்கிறார்.

 

இந்த செயல்முறையின் போது மரவள்ளிக் கிழங்கு உடைவதைத் தடுப்பதற்காக, அவர் தன் கைகளாலேயே அதனை வெளியே எடுக்கிறார். நிலத்திலிருந்து மரவள்ளிக் கிழங்கு வெளியே எடுக்கப்பட்டவுடன் அது நிலத்தின் நிறத்தை ஒத்திருப்பதாகவும் வசந்த காலத்தைப் பிரதிபலிப்பதாகவும் லஷ்மி கூறுகிறார்.

 

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தைச் சேர்ந்த லஷ்மி, தனியாக இந்த வேலையில் ஈடுபடவில்லை. இவர், நூராங் எனப்படும் பெண்கள் குழுவின் அங்கமாக உள்ளார். நூராங் என்பது நூரு கிழங்கு எனப்படும் உள்ளூர் கிழங்கு வகையின் சுருக்கமாகும்.

 

நூராங் குழுவின் உறுப்பினர்கள் கேரளாவின் மிக பழமையான வேட்டையாடி, உணவு சேகரிக்கும் நாடோடி பழங்குடியினமான வேட்ட குருமன் இனத்தைச் சேர்ந்தவர்களாவர்.

 

இவர்கள் இந்த கிழங்கு வகையை பாதுகாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இந்த பழமையான கிழங்கு வகை அந்நிலத்தில் பல நூற்றாண்டுகளாக வளர்ந்து வருகிறது.

 

சிறுவயதில் லஷ்மி காட்டில் உண்ணத்தகுந்த வேர்கள், இலைகள், தேன் மற்றும் பழங்களை சேகரித்தார்.

 

"அந்த சமயத்தில் இந்த கிழங்கு மிகவும் நிறைவான உணவாக இருந்தது. அதில் பல வகைகள் இருந்தன, எங்களுக்கு அது எப்போதும் சலிப்பை தந்ததில்லை," என்கிறார் லஷ்மி.

 

"தினமும் ஒருவேளை உணவிலாவது பலவித மரவள்ளிக் கிழங்குகள் மற்றும் சர்க்கரை வள்ளிக்கிழங்குகளை எடுத்துக்கொள்வோம். என் குடும்பத்தினர் அதை வேகவைத்தோ, அவித்தோ அல்லது வறுத்தோ உண்பார்கள். என் குழந்தைப் பருவத்தின் முக்கிய பகுதியாக அது இருந்தது."

 

மாறிவரும் உணவுப் பழக்கங்கள்
 

வேகமாக மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கங்கள் காரணமாக, கேரளாவில் உள்ள பழங்குடி சமூகங்களின் பிரதான உணவாக இந்த மரவள்ளிக் கிழங்குகள் இப்போது இருப்பதில்லை.

 

பல வித உணவுகள் குறிப்பாக, அரிசி, கோதுமை போன்றவை மிக எளிதாக கிடைப்பதால், ஒருகாலத்தில் அவர்களுடைய முன்னோர்களுக்கு ஊட்டச்சத்து அளித்த மரவள்ளிக் கிழங்கை இளைஞர்கள் விரும்புவதில்லை, என்கிறார் டிவி சாய் கிருஷ்ணன்.

 

இவர், வயநாட்டில் உள்ள திருநெல்லி பழங்குடியின ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆவார். இந்த அமைப்பு, கேரளாவில் உள்ள பழங்குடியின மக்களின் நலன்களுக்காக பணியாற்றி வருகிறது.

 

சமீப ஆண்டுகளாக தீவிரமான வானிலை நிகழ்வுகளும் மரவள்ளிக் கிழங்கு அறுவடையை பாதித்துள்ளது. வெப்பத்தை ஓரளவுக்கு தாங்கும் தன்மை கொண்டவை மரவள்ளிக் கிழங்குகள். வயநாட்டில் 2019-ல் இருந்து ஆண்டுதோறும் ஏற்படும் வெள்ளம் மற்றும் மோசமான நிலச்சரிவு காரணமாக, மரவள்ளி பயிர்கள் தண்ணீரில் மூழ்கி, நாசமாகின.

 

கேரளாவில் உள்ள மத்திய மரவள்ளி பயிர் ஆராய்ச்சி மையத்தின் தரவுகளின் படி, 2005 முதல் 2015 வரை மரவள்ளிக் கிழங்கு பயிரிடப்பட்டு வந்த நிலத்தின் அளவு கணிசமாக குறைந்தது. அதற்கு பதிலாக, அந்த நிலங்களில் லாபகரமான ரப்பர் பயிரிடப்படுவதாக கூறுகிறது அந்த மையம்.

 

ஏறத்தாழ 2-3 அடி நீளமுள்ள இந்த மரவள்ளி கிழங்குகளை பாதுகாப்பது என்பது, பழமையான நடைமுறைகளை பாதுகாப்பது மட்டுமல்ல, மாறாக ஊட்டச்சத்தை அதிகரிப்பதும் கூட என்கிறார், வி ஷகீலா. இவர், வயநாட்டில் உள்ள எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையின் சமூக வேளாண் பல்லுயிர் மையத்தின் இயக்குநர் ஆவார்.

 

"தற்போது இந்த பழங்குடி மக்கள் சந்தித்துவரும் பெரும்பாலான பிரச்னைக்களுக்கு இது தீர்வாக அமையும். குறிப்பாக, ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் தீவிரமாகிவரும் காலநிலை மாற்றத்திற்கு மத்தியில் உணவு பாதுகாப்பை வழங்குவது உள்ளிட்டவற்றுக்கு இது தீர்வாக அமையும்," என்கிறார் ஷகீலா. பழங்குடியின மக்களின் ஆரோக்கியம், மற்ற சமூகங்களை விட மோசமாக இருப்பதாக தேசியளவிலான தரவுகள் உணர்த்துகின்றன.

 

"ஆரம்பத்தில், தங்கள் குடும்பங்களுக்கு உணவளிக்கவும் இந்த அரிதான கிழங்கு வகைகள் அழியக்கூடாது என்பதற்காகவும் மரவள்ளிக் கிழங்குகளை பெண்கள் வளர்த்தனர்" என்கிறார் ஷகீலா.

 

மருத்துவ குணங்கள்
 

தன் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் இந்த மரவள்ளிக் கிழங்குகளை சேகரிப்பதில் எப்போதுமே முன்னணியில் இருந்ததாக கூறுகிறார் லஷ்மி. இந்த கிழங்குகளை கண்டுபிடிக்க அவர்கள் காட்டுக்குள் அதிக தொலைவு செல்ல வேண்டியதில்லை. மேலும், இவற்றை சேமித்து வைப்பது எளிதானது. இவை பெரிய குடும்பங்களுக்கு அதிகளவில் உணவு வழங்குகிறது.

 

"இந்த பாரம்பரிய மரவள்ளிக் கிழங்கின் மருத்துவ குணங்களை நாங்கள் நம்புகிறோம்," என, நூராங் குழுவை சேர்ந்த சாந்தா கூறுகிறார்.

 

"செரிமானம் மற்றும் வயிறு தொடர்பான பிரச்னைகளை இது குணப்படுத்துவதாக இங்குள்ள தாய்மார்கள் உறுதியாக நம்புகின்றனர். குறிப்பாக, அதனை மஞ்சளுடன் சேர்த்து சாப்பிடும்போது அதன் பலன்கள் அதிகரிக்கின்றன."

 

அழிந்துவரும் வாழ்க்கை முறை
 

வேட்ட குருமன் சமூகத்தினர் முன்பு, வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் அதிக பாதிப்புக்குள்ளாகிவரும் வயநாட்டின் தொலைதூர வனப்பகுதியில் அங்குமிங்குமாக சிதறி வாழ்ந்துவந்தனர்.

 

கடந்த 2003ல் இச்சமூக மக்கள் சுமார் 700 பேரை கேரள அரசு மறுகுடியமர்வு செய்தது. அவர்கள் ஏற்கனவே வசித்துவந்த வனப்பகுதியின் எல்லையில் புதிய வீடுகளை அமைத்துத் தந்தது.

 

கடந்த 2016-ஆம் ஆண்டு அரசாங்கம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் அரை ஏக்கர் நிலம் வழங்கியது. அதை பெரும்பாலான குடும்பங்கள் விவசாயம் செய்யவும் கால்நடைகளை வளர்க்கவும் பயன்படுத்தின. இது பழங்குடி சமூகங்களின் உணவுப் பழக்கங்களில் தெளிவான மாற்றத்தை ஏற்படுத்தியதாக, சாய் கிருஷ்ணன் கூறுகிறார்.

 

மே 2022ல் திருநெல்லி பழங்குடியின ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டம், நூராங் குழுவை உருவாக்கியது. பழங்குடி சமூகத்தினரின் உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துவதும், காடுகளில் மரவள்ளிக் கிழங்குகளை தேடுவதை விடுத்து, தங்கள் நிலங்களில் அரிசி, வாழை, காய்கறிகள் மற்றும் மற்ற பயிர்களை பயிரிடுவதற்கு மாறிவருவதன் மீது கவனத்தை செலுத்துவதும் இதன் நோக்கமாகும்.

 

இது, கேரளாவின் குடும்பஸ்ரீ திட்டத்தின் ஓர் அங்கமாகும். பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ள பழங்குடியின சமூகங்களில் வறுமையை ஒழிக்க, வேளாண் பயிற்சி வழங்கி, பெண்களை அதிகாரப்படுத்தும் முன்னெடுப்புதான் குடும்பஸ்ரீ திட்டமாகும்.

 

"கோவிட் காலகட்டத்தில் பழங்குடி சமூக குழந்தைகளிடையே நாங்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினோம். அவர்கள் சாப்பிடும் உணவுகள் குறித்து ஆய்வு செய்தோம். அப்போதுதான், அந்த சமூகங்களுக்கு முன்பு பிரதான உணவாக இருந்த பல சத்தான, மரவள்ளிக் கிழங்கு வகைகள் குறித்து அந்த குழந்தைகளுக்குத் தெரியவே இல்லை என்பதை அறிந்தோம்," என்கிறார் சாய்கிருஷ்ணன்.

 

அந்த கணக்கெடுப்பு, அவர்களின் உணவுப்பழக்கங்கள் மாறிவருவதை காட்டுவதாக அவர் கூறுகிறார். அந்த குழந்தைகள் அரிசி உணவு சார்ந்து விருப்பமாக உள்ளனர். மாநில அரசு குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு பொது விநியோகத் திட்டம் மூலம் இலவசமாக அரிசி வழங்கி வருகிறது.

 

"மரவள்ளிக் கிழங்குகள் மிக துரிதமாக சமைக்கக்கூடிய, புரதச்சத்து நிறைந்த உணவு," என்கிறார் லஷ்மி. "எங்களின் பாரம்பரிய உணவிலிருந்து எங்களின் குழந்தைகள் விலகி செல்கிறார்கள் என்றால், அது பேரிழப்பாக அமையும். பல தலைமுறைகளாக நாங்கள் சார்ந்திருந்த ஊட்டச்சத்தை இழப்பது என்பது, எங்களின் அடையாளத்தை இழப்பது போன்றதாகும்."

 

கடந்த 2022-ல் தொடங்கியதிலிருந்து, நூராங் குழுவை சேர்ந்த 10 பேர், 180 காட்டு கிழங்கு வகைகளை பயிரிட்டு, தங்கள் சமூகத்திற்கு அவற்றை மீட்டுள்ளனர். இதில், நூராங் கிழங்கை சேர்ந்த 156 வகைகளும் மூன்று கருணைக்கிழங்கு வகைகளும், எட்டு சேப்பங்கிழங்கு வகைகளும், 16 மஞ்சள் இனங்கள், 4 மரவள்ளிக்கிழங்கு வகைகளும், ஏழு சர்க்கரைவள்ளிக் கிழங்கு வகைகளும், இருவகையான இஞ்சி, ஒருவகை சீன உருளைக் கிழங்கு, மூன்று வகையான கூகைக் கிழங்குகளும் அடங்கும்.

 

"எங்களுக்குக் கிடைக்கும் பலவித அரிதான கிழங்கு விதைகளை பாதுகாத்து, அவற்றை பயிர் செய்து, வளர்ப்பதுதான் இதன் இலக்கு," என்கிறார் நூராங் குழுவை சேர்ந்த சரசு.

 

ஆரம்பத்தில் அவற்றை வளர்ப்பதற்கு நிலத்தை சமன் செய்யத் தொடங்கியபோது, மிகவும் கடினமானதாக இருந்ததாக கூறுகிறார் சரசு.

 

ஏனெனில், அவர்களால் கூலி தொழிலாளர்களை வேலைக்கு எடுக்க முடியவில்லை. மேலும், முட்புதர்கள் மற்றும் நிலத்தில் வளர்ந்திருந்த லண்டானா கேமெரா (உண்ணிச்செடி) ஆகியவற்றை களைவது பெரும் பணியாக இருந்தது. இந்த முள் செடிகள், 2-4 மீ உயரம் வளரும் தன்மை கொண்டவை, அடர்த்தியான, கூர்மையான முட்புதராக இது உருவாகக்கூடும்.

 

"ஒவ்வொரு நாளின் முடிவிலும் எங்கள் கைகளிலிருந்து ரத்தம் வரும், அவை மிகுந்த வலியை உண்டாக்கும்," என்கிறார் சரசு.

 

"பெரும் விவசாயிகளைப் போன்று அல்லாமல், டிராக்டர்களின் உதவியின்றி எல்லாவற்றையும் நாங்களே மேற்கொள்வோம். உதவிக்கு ஆட்களை நியமிக்கவும் எங்களிடம் பணம் இல்லை."

 

போதுமான நிதி இல்லாததும் அவர்களின் முயற்சிகளுக்குத் தடையை ஏற்படுத்தியது என்கிறார் அவர்.

 

நெருக்கடிகளுக்கு மத்தியிலும்
 

நூராங் குழு நிதி நெருக்கடிகளுக்கு மத்தியில் இயங்கியது. நூராங் குழுவை சேர்ந்த சாந்தாவின் குடும்பத்திற்கு சொந்தமான நிலம், மற்ற உறுப்பினர்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டது.

 

இதற்கு ஈடாக, மற்ற பெண் உறுப்பினர்கள் சாந்தாவுக்கு ஆண்டுக்கு ரூ. 5,000 வழங்குவார்கள். இது, அக்குழுவின் 1,50,000 ரூபாய் ஆண்டு வருமானத்தில் சுமார் 3.5%.

 

காடுகளில் விதைகளை தேடுவதுடன், இக்குழுவின் உறுப்பினர்களுக்கு உதவும் நோக்கில் உள்ளூர் விவசாயிகள் வழங்கும் இலவச விதைகளையும் அவர்கள் பயன்படுத்துகின்றனர்.

 

"பருவமழை தொடங்குவதற்கு முன்னதாகவே, ஏப்ரல் - மே மாதங்களில் இத்தகைய கிழங்குகள் நடப்பட வேண்டும். இதன்மூலம், மழைக்காலத்தில் அதிக பலனை அவை பெற முடியும். டிசம்பர் முதல் மார்ச் வரை அவை அறுவடை செய்யப்பட வேண்டும்," என்கிறார் சாய் கிருஷ்ணன்.

 

"கஷ்டங்களை கடந்தும், இதனால் எங்களுக்கு பெரிதாக எதுவும் கிடைக்கவில்லையென்றாலும் நாங்கள் எங்களுக்காக இவற்றை வளர்க்கிறோம். இது, என்னைப் பொறுத்தவரை எங்கள் பாரம்பரியைத்தை ஏற்றுக்கொள்வது போன்றது" என்கிறார் சரசு.

 

தாங்கள் விளைவித்ததை உள்ளூர் சந்தைகளிலும் கேரளா முழுதும் நடக்கும் திருவிழாக்களிலும் விற்கின்றனர் இப்பெண்கள். ஒவ்வொருவரும் ஆண்டுக்கு சுமார் 9,000-15,000 ரூபாய் வருமானம் ஈட்டுகின்றனர்.

 

"எங்களால் வேலையாட்களுக்கு கூலி வழங்க முடியாது என்பதால், எவ்வளவு விளைவிக்க முடியும் என்பதில் கட்டுப்பாடுகள் உண்டு," என்கிறார் லஷ்மி.

 

இப்பெண்கள் மற்ற சவால்களையும் சந்திக்கின்றனர். குரங்குகளும் காட்டுப் பன்றிகளும் இவர்கள் விளைவித்ததை உண்கின்றன. மேலும், காட்டு யானைகளும் அப்பயிர்களுக்கு சேதத்தை ஏற்படுத்துகின்றன.

 

இத்தகைய கிழங்கு வகைகள் வெப்பத்தைத் தாங்கும், அவற்றுக்கு அதிக தண்ணீர் தேவையில்லை என்றாலும், வெள்ளம் மற்றும் நிலச்சரிவு மிகுந்த அச்சுறுத்தலாக விளங்குவதாக அப்பெண்கள் கூறுகின்றனர்.

 

மழைக்காலங்களில் வெள்ளம் ஒரு பிரச்னையாக இருக்கும் நிலையில், கோடைக்காலங்களில் ஏற்படும் வறட்சியும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. போதுமான தண்ணீர் இல்லாதது, அக்கிழங்குகளின் வளர்ச்சியை பாதித்து, சுருங்கி, அவற்றின் தரத்தை பாதிக்கின்றன.

 

ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் அறுவடைத் திருநாளான திருவாதிரை அன்று, திருநெல்லி விதைத் திருவிழாவில் தாங்கள் உற்பத்தி செய்ததை அப்பெண்கள் காட்சிப்படுத்துகின்றனர்.

 

காலநிலை மாற்றத்தைத் தாங்கி நிற்கும் விதைகள் மற்றும் உற்பத்திகளை மற்ற விவசாயிகளும் காட்சிப்படுத்துகின்றனர்.

 

"விவசாயத்தில் ஈடுபடும் பரந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களுடன் உரையாடுவது புதிய பார்வையையும் ஊக்கத்தையும் வழங்குகிறது," என்கிறார் சாந்தா.

 

"நாம் தனியாக வேலை செய்யவில்லை என்ற உணர்வை இது தருகிறது. நாங்கள் செய்யும் பணி முக்கியமானது, பயனளிக்கக் கூடியது என்பதை அறிவது, எங்களை தொடர்ந்து பயணிக்க உதவுகிறது."

 

இந்த திருவிழாவின்போது, உள்ளூர் அதிகாரிகள் அப்பெண்களின் உற்பத்திகளை பார்வையிட்டு, அவர்களின் வேளாண் நடைமுறைகளை குறித்து ஆய்வு செய்கின்றனர் என்கிறார் சரசு.

 

சில சமயங்களில், மற்ற விவசாயிகள் அல்லது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை சந்தித்து உரையாட முடிவதாக அப்பெண்கள் கூறுகின்றனர்.

 

"இந்த உரையாடலும் கருத்துகளை பரிமாறி கொள்வதும் மிகுந்த ஊக்கமளிப்பதாக உள்ளன," என்கிறார் சரசு.

 

இதை விடாமுயற்சியுடன் தொடர்ந்து முன்னெடுப்பதற்கு வேறொரு காரணமும் உள்ளது.

 

"இந்த முயற்சியை நாங்கள் அடுத்த தலைமுறைக்காக மேற்கொள்வதாக கருதுகிறோம்," என்கிறார் சாந்தா. "அதுதான் இதற்கு அர்த்தத்தை ஏற்படுத்துகிறது."

 

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு