கட்டுப்பாட்டை இழந்த சிமெண்ட் லாரி.. தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்பிய 4 மாணவிகள் பலி..!
கேரளாவில் சிமெண்ட் லாரி கட்டுப்பாட்டை இழந்ததை எடுத்து தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த நான்கு மாணவிகள் மீது மோதியதால் பரிதாபமாக அந்த மாணவிகள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கேரள மாநிலம் பாலக்காடு பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு பயின்று வந்த நான்கு மாணவிகள் தேர்வு எழுதிவிட்டு வீட்டிற்கு சாலை வழியாக நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த சாலையில் சென்ற சிமெண்ட் லாரி ஒன்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து மாணவிகள் மீது மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் மூன்று மாணவிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், படுகாயம் அடைந்த ஒரு மாணவியை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் தெரிகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உயிரிழந்த மாணவிகளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனை அடுத்து சிமெண்ட் லாரி ஓட்டுனர் மற்றும் உதவியாளர் கைது செய்யப்பட்டதாகவும், அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் பலியான மாணவிகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தை ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாகவும், இதனை அடுத்து அவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு போராட்டத்தை கைவிட கோரிக்கை வைத்ததாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் பினராயி விஜயன், அவர்களுக்கு தேவையான உதவிகளை அரசு செய்யும் என்று உறுதி அளித்துள்ளார்.
Edited by Mahendran