இரட்டையரில் யார் குழந்தைக்குத் தந்தை? அறிவியலே குழம்பிய விநோத வழக்கு

bbc
Last Modified வியாழன், 4 ஏப்ரல் 2019 (20:54 IST)
பிரேசிலில் இரட்டையரான சகோதரர்களில் ஒரு குழந்தையின் தந்தை யார் என்பதை கண்டுபிடிக்க முடியாததாலும், அந்த இருவரில் உண்மையான தந்தை தாமாக முன்வந்து ஒப்புக்கொள்ளாததாலும் நீதிபதி ஒரு விநோதத் தீர்ப்பு வழங்கினார்.
அந்த இரட்டையரில் யார் அந்தக் குழந்தையை வளர்ப்பதற்கு பணம் தருவது என்பதே வழக்கு.
 
குழந்தைக்காக பணம் செலுத்துவதை தவிர்க்க அந்த இரட்டையர்களில் குழந்தையின் உண்மையான தந்தை தாமாக முன்வந்து உண்மையைக் கூறவில்லை.
 
அவர்கள் இரட்டையர்கள் என்பதால் டிஎன்ஏ சோதனையிலும் அந்தக் குழந்தையின் தந்தையை கண்டுபிடிக்க முடியவில்லை.
 
தனது தந்தை யார் என்று தெரிந்து கொள்ளும் அந்த குழந்தையின் உரிமையை அந்த இரட்டையர்கள் பறிப்பதாக வழக்கை விசாரித்த நீதிபதி தெரிவித்துள்ளார்.
 
முதல் குழந்தை பிறந்த ஒரு மாதத்தில் இரட்டை குழந்தைகளைப் பெற்றெடுத்த பெண்
ஒன்றாய் பிறந்து, ஒன்றாய் பறந்து, ஒன்றாய் ஓய்வு பெற்ற இரட்டையர் விமானிகள்
இரட்டையர்கள் இருவரும் மாதம் ஒன்றிற்கு தலா 60 அமெரிக்க டாலர்களை வழங்க வேண்டும் அல்லது பிரேஸிலின் குறைந்தபட்சசம்பளத்தில் 30 சதவீதத்தை வழங்க வேண்டும் என்பதே அந்த நீதிபதியின் தீர்ப்பு.
 
இதன்மூலம் பிரேஸிலில் இந்த குழந்தையின் பொருளாதார பின்புலத்துக்கு ஒப்பான பின்புலம் கொண்ட பிற குழந்தைகளைக் காட்டிலும் இரண்டு மடங்கு பணம் அந்த குழந்தைக்கு கிடைக்கும்.
 
அதேபோல் அந்த குழந்தையின் பிறப்பு சான்றிதழில் இரட்டையர்கள் இருவரின் பெயரும் இருக்க வேண்டும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.
 
 
சில சட்டக் காரணங்களுக்காக அந்த இரட்டையர்களின் பெயர்கள் வெளியிடப்படவில்லை.
 
"தான் அந்த குழந்தையின் தந்தை என்பதை மறைக்க இரட்டையர்களில் ஒருவர் முயற்சி செய்கிறார். இம்மாதிரியான ஒரு மோசமான செயலை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளாது." என்றும் நீதிபதி தெரிவித்திருந்தார்.
 
அந்த இரட்டையர்கள் ஒரே மாதிரியான தோற்றத்தை பயன்படுத்தி பிறரை ஏமாற்றியுள்ளனர். மேலும் உருவ ஒற்றுமையைப் பயன்படுத்தி பல பெண்களை ஏமாற்றியுள்ளனர். அதன்பிறகு அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டால் உருவ ஒற்றுமையைக் கொண்டு தப்பிக்கவும் முயற்சி செய்துள்ளனர்.

இதில் மேலும் படிக்கவும் :