ஞாயிறு, 3 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By papiksha joseph
Last Updated : திங்கள், 21 மார்ச் 2022 (11:08 IST)

இந்தியாவில் கொரோனா நான்காம் அலை எப்போது தொடங்கும்? வல்லுநர்கள் சொல்வது என்ன?

இந்தியாவில் கொரோனா நான்காவது அலை விரைவில் பரவுவதற்கு வாய்ப்புள்ளதாக சுகாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். `தமிழ்நாட்டில் தொடக்கம் முதலே ஒமிக்ரான் 1, 2 ஆகியவை இணைந்தே பாதிப்பை ஏற்படுத்தியதா என்பது தெரிந்தால் நான்காம் அலை வருவதை எளிதாகக் கணிக்கலாம்,' என்கின்றனர் மருத்துவத்துறை வல்லுநர்கள்.
 
ஒமிக்ரான் தொற்றின் துணை திரிபு என கூறப்படும் பிஏ2 வைரஸ், பிரிட்டன், தென்கொரியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி வருவது உலக நாடுகளைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது. இதன் அடுத்தகட்டமாக, `இந்தியாவில் கொரோனா அலை எப்போது தொடங்கும்?' என்ற கேள்வி எழுந்துள்ளது.
`நான்காவது அலை எப்போது வரும், எப்படிப்பட்டதாக இருக்கும் என்பது மட்டுமே நமக்குத் தெரியாத ஒன்றாக உள்ளது. அதேநேரம், மற்ற நாடுகளைப் போல இந்தியாவிலும் நான்காவது அலை ஏற்பட வாய்ப்புள்ளது' என மகாராஷ்டிரா மாநில சுகாதார சேவைகள் துறையின் முன்னாள் இயக்குநர் கூறியுள்ளதாக செய்தி நிறுவனம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
 
கேரளாவில் அதிகரிக்கும் தொற்று
தமிழ்நாட்டிலும் நான்காவது அலை தொடர்பாக பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக சனிக்கிழமையன்று அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்களிடம் பேசும்போது, `கடந்த ஏழு நாள்களாக கொரோனா தொற்றின் அளவு நூறுக்கும்கீழ் குறைந்துள்ளது.
 
அதேபோல் இறப்பு விகிதமும் பூஜ்ஜியமாக உள்ளது. அதேநேரம், கேரளாவில் 847 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அங்கு 59 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாடு, கேரள எல்லைப் பகுதிகளில் 13 வழிகள் உள்ளன. எனவே, மக்கள் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும்' எனக் குறிப்பிட்டவர், `ஆசிய நாடுகள் அனைத்திலும் தொற்று வேகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது. தடுப்பூசியை செலுத்திக் கொள்வது மட்டுமே கொரோனா தொற்றில் இருந்து விடுபடுவதற்கு தீர்வாக இருக்க முடியும்' என்றார்.
 
இதுதொடர்பாக ஞாயிற்றுக்கிழமையன்று செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், `தமிழ்நாட்டில் 51 லட்சம் பேர் முதல்கட்ட தடுப்பூசியை செலுத்திக் கொள்ளவில்லை. 1 கோடிக்கும் அதிகமானோர் இரண்டாவது தவணை தடுப்பூசியை செலுத்திக் கொள்ளவில்லை. தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்களின் விகிதம், 90 சதவீதம் இருந்ததால்தான் இறப்பைக் குறைத்தோம். இறப்பைப் பொறுத்தவரையில் பூஜ்ஜியத்துக்கு வந்துள்ளோம். அதுவும் 38,000 பேரின் இறப்பைக் கண்ட பிறகுதான் வந்துள்ளோம். எனவே, தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் உடனே செலுத்திக் கொள்ள வேண்டும்' என்றார்.
 
தயக்கம் காட்டும் மக்கள்
 
மேலும், வரும் நாள்களில் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களின் பட்டியலை தயார் செய்து வீடு தேடிச் சென்று செலுத்தும் பணி நடைபெற உள்ளதாகக் குறிப்பிட்ட ராதாகிருஷ்ணன், `கடந்த ஆண்டு தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக பல்வேறு இடங்களில் மோதல் நடைபெற்றது. தற்போது அதிகளவில் தடுப்பூசி கையில் இருந்தும் மக்களில் சிலர் தயக்கம் காட்டுகின்றனர்' என்றார்.இதுதொடர்பாக, கடந்த 18 ஆம் தேதி மாவட்ட துணை இயக்குநர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை பொதுசுகாதாரத்துறை வழங்கியுள்ளது. தெற்காசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பரவும் தொற்றின் காரணமாக கடந்த மாதம் 25 ஆம் தேதி மத்திய சுகாதாரத்துறை அனுப்பியுள்ள வழிகாட்டல்களின் அடிப்படையில் இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக பொதுசுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
குறிப்பாக, கோவிட் தொற்றைக் கண்டறியும் வழிமுறைகள், மரபணு மூலக்கூறு ஆய்வு உள்பட பல நிலைகளில் கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து வருகிறவர்கள், இணை நோய் உள்ளவர்கள், நுரையீரல் பாதிப்பு உள்ளவர்கள், குழந்தைகள், குடும்ப உறுப்பினர்கள் எனப் பல நிலைகளில் பரிசோதனைகளை மேற்கொள்ளவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
நான்காவது அலையின் தாக்கம் எப்போது?
``இந்தியாவில் கொரோனா நான்காவது அலையின் தாக்கம் எப்படிப்பட்டதாக இருக்கும்?'' என்பது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய சுகாதார வல்லுநரும் பொது சுகாதாரத்துறையின் முன்னாள் இயக்குநருமான டாக்டர் குழந்தைசாமி, ``தடுப்பூசி செலுத்தியது உள்ளிட்ட சில காரணங்களால் நான்காவது அலையாக வருவதற்கான வாய்ப்புகள் குறைவுதான். அதேநேரம், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள், நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைக்காதவர்களுக்கு பாதிப்பு வரும். எனவே, உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்வது நல்லது. அதில்தான் கவனம் செலுத்த வேண்டும். திறந்தவெளி பகுதிகளைப் பயன்படுத்துவது, கைகளைக் கழுவுவது போன்றவை கொரோனாவை மட்டும் அல்ல. பிற நோய்களைக் கட்டுப்படுத்துவதிலும் முக்கியப் பங்கு வகிக்கும்'' என்கிறார்.
 
``கொரோனா முடிந்துவிட்டது என அலட்சியமாக இல்லாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்வதே நல்லது. மற்ற நாடுகளில் தொற்று பரவும்போது சில நாள்கள் கழித்து இந்தியாவுக்கும் வரும். `இந்தியா என்பது வெப்ப மண்டல பிரதேசம், இங்கெல்லாம் கொரோனா வராது' எனச் சிலர் பேசினர். பிற நாடுகளில் தொற்று பரவுகிறது என்றால் நாம் எச்சரிக்கையாக இருப்பதே நல்லது. கொரோனா என்பது இயல்பான வைரஸாக தெரியவில்லை. ஆய்வகத்தில் ஏற்பட்ட விபத்தால் உருவான உயிரியல் போர் ஆயுதமாக இருந்தால் அதன் பரவலை யூகிப்பது கடினம்'' என்கிறார் டாக்டர் குழந்தைசாமி.
 
அடுத்ததாக, பிபிசி தமிழிடம் பேசிய சூழலியலுக்கான மருத்துவர் சங்கத்தைச் சேர்ந்த டாக்டர் வீ.புகழேந்தி, ``கொரோனா தொற்றின் நான்காம் அலையானது ஜூன் மாதம் வரும் என ஐ.ஐ.டி கான்பூர் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். அதேநேரம், அறிவியலாளர்கள் மத்தியில் இதுகுறித்து முரண்பட்ட தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன. பிரபல வைரலாஜி நிபுணர் ஜேக்கப் ஜான் கூறும்போது, `இந்தியாவில் தடுப்பூசிகள் அதிகம் செலுத்தப்பட்டுள்ளதாலும் கொரோனா ஒமிக்ரான் அலையால் மக்கள் பாதிக்கப்பட்டதாலும் நான்காம் அலை வருவதற்கான வாய்ப்புகள் குறைவு' என்கிறார். இருப்பினும், உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் உருவாகி, அதற்கு நோய் பரவும் தன்மை, நோய் தீவிரத்தன்மை அதிகம் இருப்பின் அது சாத்தியம் எனவும் குறிப்பிடுகிறார்'' என்கிறார்.
 
நான்காம் அலைக்கான வாய்ப்புகள் குறைவா?
மேலும், ``உலகில் தடுப்பூசி சமத்துவம் இல்லை என சில நிபுணர்கள் கூறி வருகின்றனர். வளர்ச்சியடைந்த நாடுகளில் 80 சதவீதம் பேருக்கும் வளரும் நாடுகளில் 10 சதவீதம் பேருக்கும் மட்டுமே சராசரியாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதால், வைரஸ் உருமாற்றம் அடையும் வாய்ப்புள்ளது எனவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்'' என்கிறார்.`` ஒரே நேரத்தில் இரண்டு கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் ஏற்படுவதும், அதனால் இரண்டு வைரஸும் சேர்ந்து புதுவகை வைரஸ் ஒன்றை உருவாக்க முடியும். உதாரணம், டெல்டாகிரான். இஸ்ரேலில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமிக்ரான் 1 மற்றும் 2 ஆகியவற்றின் கலவையால் நான்காம் அலைக்கான சாத்தியங்கள் உள்ளன. இதில், எங்கெல்லாம் இயற்கை நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளதோ, அங்கெல்லாம் நான்காம் அலைக்கான வாய்ப்பு குறைவு. அதேபோல், தொடக்கம் முதலே ஒமிக்ரான் 1, 2 ஆகியவை இணைந்து எங்கெல்லாம் பாதிப்பை ஏற்படுத்தியதோ, அங்கெல்லாம் நான்காம் அலைக்கான வாய்ப்புகளும் குறைவு,'' என குறிப்பிடும் மருத்துவர் புகழேந்தி.
 
`` தமிழ்நாட்டில் அரசு தெரிவித்துள்ள புள்ளிவிவரங்களின்படி, ஒமிக்ரான் ஒன்றாம் வகை பாதிப்பு ஏறக்குறைய 38 சதவீதம் எனவும் ஒமிக்ரான் 2 ஆம் வகை பாதிப்பு 18.4 சதவீதம் எனவும் மூலக்கூறு ஆய்வில் தமிழகத்தில் 93 சதவீதம் ஒமிக்ரானும் டெல்டா வகை 6.6 சதவீதம் எனக் கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் டிசம்பர் இறுதியில் சராசரியாக 87 சதவீத மக்களுக்கு நோய் எதிர்ப்பு புரதம் உள்ளதென ஆய்வில் தெரிய வந்துள்ளது. தற்போது ஒமிக்ரான் அலை காரணமாக நிச்சயமாக அது அதிகரித்திருக்கலாம். தமிழ்நாட்டில் தொடக்கம் முதலே ஒமிக்ரான் 1,2 ஆகியவை இணைந்தே பாதிப்பை ஏற்படுத்தியதா என்பது தெரிந்தால் நான்காம் அலை வருமா என எளிதாகக் கணிக்கலாம். அவ்வாறு இணைந்திருந்தால் வாய்ப்புகள் குறைவு'' என்கிறார்.
 
விலங்குகளிடம் ஒமிக்ரான் பரவல்
 
 
தொடர்ந்து விலங்குகளிடம் கொரோனா தொற்றின் தாக்கம் குறித்துப் பேசிய புகழேந்தி, ``நாய், பூனை, புனுகு பூனை, வௌவால்கள், Hamster எனப்படும் ஒரு வகையான எலி, சிங்கம், புலி, சிறுத்தை(Leoperd), கொரில்லா, நீர்யானைகள், மான்கள் (அண்மையில் அமெரிக்காவில் மான்களிடம் ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது), Minks எனப்படும் நீர்விலங்கு என விலங்குகளிடம் ஒமிக்ரான் பரவி மீண்டும் மனிதர்களுக்கு வந்திருக்கும் வாய்ப்பு உறுதியாகியுள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் விழிப்புடன் இருக்க வேண்டிய அவசியம் உள்ளது. ஆய்வக விலங்குகளை வைத்து ஜப்பானில் செய்த ஆய்வில் ஒமிக்ரான் இரண்டில் நோய்த் தீவிரம் அதிகம் எனத் தெரிய வந்துள்ளது. மனிதர்களிடத்திலும் நோய்த் தீவிரம் குறித்து ஆய்வுகள் நடந்து வருகிறது'' என்கிறார்.
 
மேலும், `` பிரபல தொற்று நோயியல் நிபுணர் சந்திரகாந்த் லகாரியா கூறுவதைப்போல, `தீவிர கண்காணிப்பு (Robust surveillance), குழுக்களாக (Cluster)பாதிப்பு ஏற்படும்போது உடனடி மூலக்கூறு ஆய்வு மேற்கொள்வது (Genomic sequencing), பாதிப்பைத் தொடக்கத்தில் கண்டறிய சாக்கடையில் வைரஸ் கண்காணிப்பு (Sewage sampling) போன்றவை முக்கியமானவை' என்கிறார்.
 
நான்காம் அலை குறித்து, பிபிசி தமிழிடம் பேசிய பொதுசுகாதாரத்துறை இயக்குநர் மருத்துவர் செல்வவிநாயகம், ``கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாகக் கடைபிடித்தாலே போதுமானது. இதுதொடர்பான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளோம். நான்காவது அலை தொடர்பாக வழக்கமான கோவிட் எச்சரிக்கைகளை மக்கள் பின்பற்ற வேண்டும்'' என்கிறார்.