புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 22 ஜனவரி 2021 (16:07 IST)

கமலா ஹாரிஸ் முதல் நாள் செயல்பாடு என்ன? அமெரிக்கத் துணை அதிபர்களின் பணி என்ன?

கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் துணை அதிபராகியுள்ள முதல் பெண், முதல் கருப்பின வம்சாவளியை சேர்ந்தவர், முதல் இந்திய வம்சாவளி கொண்டவர்.

இத்தனை சிறப்புகளோடு துணை அதிபராகப் பொறுப்பேற்றவர் தனது முதல் நாளில் என்ன செய்தார்? ஒரு அமெரிக்க துணை அதிபர் பணிகள் என்னென்ன?
 
வரலாற்று ரீதியாகச் சொல்லப் போனால் துணை அதிபர்களுக்கு ஒன்றும் பெரிதாக வேலையில்லை. அமெரிக்க துணை அதிபர் பதவி என்பது மிகவும் குறைவாக  புரிந்து கொள்ளப்பட்ட, எள்ளி நகையாடப்பட்ட ஒரு பதவி. பெரும்பாலும் அமெரிக்கக் கூட்டாட்சியில் அரசமைப்புச்சட்ட ரீதியாக பெரிய பங்களிப்பு இல்லாத  பதவிதான் இது. நீண்ட காலமாக இந்த பதவி இப்படித் தான் இருந்தது.
 
"வெளிப்படையாகக் கூறினால், அமெரிக்க துணை அதிபர் பதவி என்பது, அதிபர் இல்லாமல் போனால் அந்த இடத்தை நிறைவு செய்வதற்கான பதவி" என்கிறார்  விர்ஜீனியா பல்கலைக்கழக மில்லர் மையத்தின் அமெரிக்க அதிபர் தொடர்பான ஆராய்ச்சித் துறை இயக்குநர் பார்பரா பெர்ரி.
 
அதிபருக்கு உயிரிழப்போ, செயல்பட முடியாத அளவுக்கு உடல் நலக்கேடோ ஏற்படாவிட்டால், வெறுமனே காத்திருப்பதுதான் அதிபரின் பணியாக இருக்கும்.
 
"நான் தினமும் அதிபர் பதிலளிப்பார் என்கிற நம்பிக்கையில் வெள்ளை மாளிகையின் கதவைத் தட்டுவேன்" என கடந்த 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில்  அமெரிக்க துணை அதிபராக இருந்த ஒருவர் கூறினார் எனச் சுட்டிக்காட்டுகிறார் பெர்ரி.
 
அதே நேரத்தில் இந்தப் பதவியை குறைத்து மதிப்பிடவும் முடியாது. அமெரிக்காவின் 45 அதிபர்களில் 8 பேர் பதவிக் காலத்திலேயே இறந்திருக்கிறார்கள். அதாவது  சுமார் 20 சதவீத அதிபர்கள், தங்களின் துணை அதிபர்களுக்கு திடீரென பதவி உயர்வு கொடுத்திருக்கிறார்கள்.
 
அமெரிக்க வரலாற்றிலேயே அதிகபட்சமாக 78 வயதில் அதிபராக பதவியேற்பவர் ஜோ பைடன் தான். இது அமெரிக்க துணை அதிபர் பதவியின் மீது அழுத்தத்தைக்  கொடுக்கிறது.
 
1970-கள் வரை அமெரிக்காவில் துணை அதிபர்கள் அதிகம் பங்களித்ததில்லை. அதற்குப் பிறகு அதிபர் ஜிம்மி கார்ட்டர் காலத்தில் தான், துணை அதிபர்களின்  பங்களிப்பு அதிகரிக்கத் தொடங்கியது.
 
ஜோர்ஜா மாகாணத்தின் முன்னாள் ஆளுநரான ஜிம்மி கார்ட்டர், அதிக அரசியல் தொடர்பு இல்லாதவராகத்தான் அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடவந்தார். "தனக்கு வாஷிங்டன் டிசியில் நிலவும் அரசியல் சூழல்கள் அத்தனை தெளிவாகத் தெரியாது என்பதை அவர் அறிந்திருந்தார்" என்கிறார் பெர்ரி.
 
எனவே அதிபர் தேர்தலில் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்ட பின், வால்டர் மாண்டேல் என்கிற நீண்ட கால அமெரிக்க செனட் அவை உறுப்பினரை, வாஷிங்டன்  டிசியின் அரசியல் சூழலைக் விளக்குவதற்காக, துணை அதிபர் வேட்பாளராகத் தேர்வு செய்தார் ஜிம்மி கார்டர்.
 
அந்தக் கூட்டணி அமெரிக்காவுக்குப் புதிதாக இருந்தது. அதிபர் மற்றும் அமெரிக்க துணை அதிபர் பதவிகளில் புவியியல் ரீதியாகவோ அல்லது தத்துவார்த்த  ரீதியாகவோ ஒரு சம நிலையைக் கொடுப்பதாக இருந்தது அது. அவர்களின் சாதூர்யமான இந்த திட்டம் பல முறைப் பயன்படுத்தப்பட்டது.
 
இந்தத் திட்டம் சமீப காலங்களில் தொடர்ந்தது. பராக் ஒபாமா பெரிய அளவில் அரசியலில் அறிமுகமில்லாத புது முகமாகத் தான் களமிறங்கினார். அமெரிக்க  செனட் அவையில் 35 ஆண்டு அரசியல் அனுபவம் கொண்ட ஜோ பைடனுடன் கை கோர்த்தார்.
 
டொனால்ட் டிரம்ப், மைக் பென்ஸ் உடன் கை கோர்த்தார். மத விவகாரத்தில் பென்ஸுக்கு இருக்கும் பெயர் டிரம்பின் பிம்பத்தை பாதுகாக்கும் என நம்பப்பட்டது.  அதே போல தற்போது கமலா ஹாரிஸ், ஜோ பைடனின் வயது, பாலினம், இனம் போன்றவைகளுக்கு ஒரு சமநிலையைக் கொடுக்கிறது.
 
அமெரிக்க துணை அதிபர், அமெரிக்க செனட் சபையின் தலைவராகவும் செயல்படுவார். எனவே இந்த முறை துணையதிபர் பதவி, ஜனநாயகக் கட்சிக்கு எத்தனை  முக்கியமானது என்பதை இது உணர்த்தும்.
 
தற்போது செனட் அவையில் ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி 50 - 50 இடங்களைப் பெற்றுள்ளன. ஏதோ ஒரு பிரச்சனையில் இரு தரப்பும் 50-50  வாக்குகளை இட நேர்ந்தால், இறுதியாக அவைத் தலைவர் கமலா ஹாரிஸ் தன் வாக்கை அளிப்பார். அது செனட் மேலவையில் தீர்மானிக்கும் வாக்காக இருக்கும்.
 
கமலா ஹாரிஸ் முதலில் என்ன செய்தார்?
பென்சில்வேனியா அவென்யூவை ஒட்டி தன் குடும்பத்தோடு பதவியேற்பு அணிவகுப்பில் நடந்து கொண்டிருந்த போது, பதவியேற்பு தொடர்பான நிகழ்வுகள்  நிறைவடைந்துவிட்டதை அவர் அறிந்திருந்தார்.
 
"நான் என் பணிக்குச் சென்று கொண்டிருக்கிறேன்" என்றார் கமலா ஹாரிஸ்
 
ஜோ பைடன் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைச் சமாளிக்க, அவரோடு இணைய, தன்னுடைய புதிய அலுவலகமான வெள்ளை மாளிகைக்கு வந்தார் கமலா ஹாரிஸ்.
 
பைடனின் திட்டங்களுக்கு நேர்த்தியான வடிவம் கொடுக்க, அதிகாரப் பகிர்வின் போது எல்லா முக்கிய சந்திப்புகளின் போதும், கமலா ஹாரிஸும் இருந்தார். அதே  போல கடந்த புதன்கிழமை புதிய அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்ட 15 நிர்வாக ஆணைகளை உருவாக்குவதில் கமலா ஹாரிஸின் பங்கு இருந்தது.
 
வெள்ளை மாளிகைக்கு வந்த பின், அதிக நேரம் எடுத்துக் கொள்ளாமல், செனட் அவைக்குச் சென்று தன் செனட் அவைத் தலைவர் பதவியை ஏற்றுக் கொண்டார். மூன்று செனட் உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
 
கமலா ஹாரிஸ் இன்னும் அமெரிக்க துணை அதிபருக்கான இல்லத்தில் குடியேறவில்லை. இப்போதும் தன்னுடைய பழைய வீட்டிலேயே தான் இருக்கிறார்.
 
கடந்த வியாழக்கிழமை காலையில் இணைய வழியாக நடத்தப்பட்டபிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்து கொண்டார். தினசரி கொடுக்கப்படும் உளவுத் துறை  அறிக்கை ஒன்று அவருக்கு வழங்கப்பட்டது.
 
கமலா ஹாரிஸ் எங்கே தங்குவார்?
 
கமலா ஹாரிஸ் மற்றும் அவரது கணவர் டக் எம்ஹாஃப், 19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு வெள்ளை மாளிகையில் (இதையும் வெள்ளை மாளிகை என்று தான் கூறுகிறார்கள்) குடியேறுவார்கள். இந்த மாளிகை, வட மேற்கு வாஷிங்டன் பகுதியில், அமெரிக்க கடற்படை ஆய்வகத்துக்கு அருகில் இருக்கிறது.
 
இந்த துணை அதிபர் வீடு, வெள்ளை மாளிகைக்கு அருகில் தான் இருக்கிறது. அதே போல கமலாவின் கணவர் டக் எம்ஹாஃப் பயிற்றுவிக்கப் போகும் ஜார்ஜ்டவுன்  பல்கலைக்கழகத்தின் சட்டப் பள்ளியும் அருகில் தான் இருக்கிறது.
 
துணையதிபர் மற்றும் அவரது கணவர் பயணிக்க ஒரு போயிங் 757 ஏர் ஃபோர்ஸ் 2 விமானம் இருக்கும். அதோடு அவர்களுக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு  வழங்கப்படும்.
 
பைடன் - கமலா ஹாரிஸ் இடையில் நல்லுறவு இருக்குமா?
 
ஒபாமா மற்றும் பைடன், அதிபர் மற்றும் துணையதிபராக வெள்ளை மாளிகையில் இருந்த போது, தங்கள் நட்பை பல முறை வெளிப்படுத்தினார்கள். அதிபர் மற்றும் துணை அதிபருக்கிடையில் தனிப்பட்ட முறையில் நல்ல நட்பு இருக்க வேண்டும் என்பது தேவையான ஒன்றாகக் கருதப்படவில்லை என்கிறார் பெர்ரி.
 
ஆனால் கடந்த ஆண்டின் கோடைக் காலத்தில் கமலா ஹாரிஸை, துணையதிபர் வேட்பாளராக அதிகாரபூர்வமாக அறிவித்த போதிலிருந்து நல்லபடியாக பயணிப்பது  போலத் தான் தெரிகிறது என்கிறார் பெர்ரி.
 
"கமலா ஹாரிஸுடன் கலந்து பேசாமல், இந்த நிர்வாகம் தொடர்பாக நான் இதுவரை ஒரு முடிவைக் கூட எடுத்ததில்லை" எனக் கூறினார் ஜோ பைடன். பைடனின்  அமைச்சரவையில் இடம் பெறவிருக்கும் ஒவ்வொருவரையும், கமலா ஹாரிஸும் நேர்காணமல் செய்தார்.
 
கமலா ஹாரிஸ், ஜோ பைடனின் மகன் பியா பைடனுடன் நெருக்கமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. பியா பைடன் மூளைப் புற்றுநோயால் கடந்த 2015-ம் ஆண்டு  இறந்துவிட்டார். எனவே இவர்களுக்கு இடையிலான நட்பு ஒரு அர்த்தமுள்ளதாக இருக்கிறது.
 
அமெரிக்க வரலாற்றில் டொனால்டு டிரம்ப் விட்டுச்சென்ற மரபு என்ன?
 
ஜோ பைடன் ஆட்சியில் பதவி வகிக்கப்போகும் இந்திய வம்சாவளியினர் யார்?
 
ஜனநாயகக் கட்சிக்குள்ளேயே, அதிபர் வேட்பாளருக்காக பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் போட்டி போட்டுக் கொண்ட போது, மேடை விவாத்தில் கமலா ஹாரிஸ், பைடனை தாக்கியதை நினைத்துப் பார்ப்பவர்களுக்கு இது ஆச்சர்யமாக இருக்கும். "நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்" என பைடன் கூறியதைச் சுட்டிக்  காட்டுகிறார் பெர்ரி.
 
கமலா ஹாரிஸுக்கு எவ்வளவு அதிகாரமிருக்கும்?
 
பைடன் துணையதிபராக இருந்த போது எப்படி இருந்தாரோ அப்படி, கமலா ஹாரிஸின் பங்களிப்பை பைடன் கோரலாம்.
 
2020 ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாட்டில், தனது துணையதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸை அறிமுகப்படுத்திய போது, 2008-ல் பராக் ஒபாமாவால் தான்  தேர்ந்தெடுக்கப்பட்டதை நினைவு கூர்ந்தார் பைடன்.
 
துணை அதிபர் பதவியிலிருந்து பைடன் என்ன விரும்புகிறார் என ஒபாமா கேட்டார்.
 
"முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு முன்பு அறையில் கடைசி நபராக இருக்க விரும்புகிறேன்" என நான் ஒபாமாவிடம் கூறினேன் என்றார் பைடன்.
 
"அதைத்தான் நான் கமலாவிடம் கேட்டேன். எப்போதும் என்னிடம் உண்மையைச் சொல்ல, அறையில் கடைசி குரலாக கமலா இருக்க வேண்டும் எனக் கேட்டேன்"  என்றார் பைடன்.
 
என்ன மாதிரியான துணையதிபராக இருப்பார் கமலா ஹாரிஸ்?
 
அமெரிக்க அதிபர் வேட்பாளராக வர கமலா ஹாரிஸ் மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தாலும், அது அவருக்கென தனி ரசிகர் வட்டாரம் உருவானது. இந்த ரசிகர்கள் தங்களை #KHive என அழைத்துக் கொள்கிறார்கள். கமலா ஹாரிஸ் தன் வழியில் ஓர் அரசியல் நட்சத்திரமாகவே பைடனுடன் இணைந்தார்.
 
ஜனநாயகக் கட்சியில் இருக்கும் இடது சாரிகளின் தொடர் விமர்சனத்துக்குப் பிறகும், கமலா ஹாரிஸ் செனட் அவையில் மிகவும் சுதந்திரமாகவே வாக்களித்தார். இப்படி செனட் அவையில் சுதந்திரமாக கட்சி சார்பின்றி வாக்களித்த செனட்டர்களில் கமலா ஹாரிஸும் ஒருவர்.
 
ஒருபாலின உறவுக்காரர்கள் உரிமைகள், குடியேற்றம், மரிஜுவானாவை சட்டப்பூர்வமாக்குவது, துப்பாக்கி கட்டுப்பாடுகள் போன்ற விஷயங்களில் முற்போக்காகச்  சிந்தித்து வாக்களித்தார்.
 
அவர் செனட் அவைக்கு வருவதற்கு முன் கலிபோர்னியாவின் முன்னணி வழக்குரைஞர்களில் ஒருவராக பணியாற்றினார்.
 
அதிபராக பராக் ஒபாமாவும் துணை அதிபராக ஜோ பைடனும். இருவருக்கும் இடையிலான நட்பு புகழ் பெற்றது.
 
கடந்த கோடை காலத்தில் கருப்பினத்தவர்களின் உயிர் முக்கியம் என்கிற மக்கள் போராட்டத்துக்கு, கமலா ஹாரிஸ் தன் ஆதரவைத் தெரிவித்தார். அதோடு  அமெரிக்காவில் காவல் துறையை பரிசீலணை செய்து மறுவடிவமைப்புச் செய்ய வேண்டும் என்றார்.
 
ஆனால் பல விஷயங்களில் முதல் துணையதிபராக பதவியேற்றிருக்கும் கமலா ஹாரிஸ் மீது நிறைய எதிர்பார்ப்புகள் வைக்கப்பட்டிருக்கின்றன. "நான்  அமெரிக்காவின் முதல் பெண் துணையதிபராக இருக்கலாம், ஆனால் நான் நிச்சயம் கடைசி பெண் துணையதிபராக இருக்கமாட்டேன்" என்கிறார் கமலா.
 
இந்த வரலாற்று நிகழ்வு கருப்பின அமெரிக்கர்கள் கொண்டாடுவதற்கான நேரம் தான் என்கிறார் 'கலர் ஆஃப் சேஞ்ச்' என்கிற இன நீதி அமைப்பின் மூத்த இயக்குநர் ஜெனீஃபர் எட்வர்ட்ஸ். ஓரினத்தில் இருந்து ஒருவர் பிரதிநிதித்துவப்படுத்தப்படுவதால்மட்டுமே மாற்றங்கள் நிகழ்ந்துவிடாது என்பதை நாங்கள் காலங்காலமாக  கற்று வந்திருக்கிறோம்" என்கிறார்
 
"நூற்றுக் கணக்கான ஆயிரக் கணக்கான கருப்பினப் பெண்கள் போராடி, ஒருங்கிணைந்து, வாக்களித்து இந்த நிலையை அடைந்திருக்கிறோம். தற்போது கமலா ஹாரிஸை துணையதிபராக்கிய மக்களின் தேவைகளை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டிய பொறுப்பு அவருக்கு இருக்கிறது" என்கிறார்.
 
பைடன் அடுத்த முறை அதிபர் பதவிக்கு போட்டியிடமாட்டார் என்பது ஹாரிஸுக்கு ஒரு சமநிலைப்படுத்துவதாக இருக்கும். இப்போது பைடனுக்கு எப்படி ஒரு விசுவாசமான கூட்டாளியாக இருப்பது, அதே நேரத்தில் தனது அதிபர் பதவிக்கான தயாரிப்புகளை எப்படி முன்னெடுப்பது என்பது தான் கமலா ஹாரிஸ் முன்  இருக்கும் கேள்விகள் என்கிறன சில செய்திகள்.