செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 2 டிசம்பர் 2021 (15:21 IST)

அஜித் அறிவிப்புக்குக் காரணம் என்ன? 'தல என அழைக்கவேண்டாம்' என்று கூறுவது வலிமை படத்துக்கு கவனம் குவிக்கும் உத்தியா?

நடிகர் அஜீத்குமார் தன்னை 'தல' என்று அழைக்க வேண்டாம் என ஊடகங்கள் மற்றும் ரசிகர்களிடம் நேற்று வேண்டுகோள் விடுக்க இதனையடுத்து சமூக வலைதளங்களில் இந்த விஷயம் அஜீத் ரசிகர்களிடையே ட்ரெண்டானது. அஜீத்தின் இந்த திடீர் முடிவுக்கு என்ன காரணம்?

'தல' என அழைக்க வேண்டாம்

நேற்று மதியம், நடிகர் அஜீத்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா அஜீத் சார்பாக, தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். மரியாதைக்குரிய ஊடக, பொதுஜன மற்றும் உண்மையான ரசிகர்களுக்கு என தொடங்கிய அந்த அறிக்கையில் இனி வரும் காலங்களில் தன்னை பற்றி குறிப்பிட்டு பேசும் போது தன் இயற்பெயரான அஜீத் குமார் என்றோ, அஜித் என்றோ அல்லது ஏகே என்றோ குறிப்பிட்டால் மட்டும் போதுமானது என்றும் தல என்றோ வேறு எதாவது பட்ட பெயர்களையோ குறிப்பிட்டு அழைக்க வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

நடிகர் அஜீத்குமாரின் இந்த அறிக்கைக்கு ரசிகர்களிடையே பல கலவையான எதிர்வினைகளை சமூக வலைதளங்களில் காண முடிந்தது.

அஜீத்தின் இந்த திடீர் அறிக்கைக்கு என்ன காரணம் என்பது குறித்து அறிந்து கொள்ள அவரின் மேலாளர் சுரேஷ் சந்திராவை பிபிசி தமிழுக்காக தொடர்பு கொண்டோம், "இது திடீரென எடுத்த முடிவில்லை. நீண்ட நாட்களாக அவருக்கு இருந்து வந்த எண்ணம்தான். தாய் தந்தை பார்த்து வைத்த பெயர் அஜீத்குமார். இந்த இயற்பெயரே அவருக்கு மிகப்பெரிய மரியாதை. அஜீத்குமார் என தன்னை அழைக்க வேண்டாம்; வேறு எந்த பெயரிலாவது தன்னை அழையுங்கள் என்று சொன்னால் அதற்கு விளக்கம் கொடுக்கலாம். ஆனால், தன்னுடைய பெயரிலேயே ஒருவரை கூப்பிட வேண்டும் என்று சொல்வதற்கு விளக்கம் கொடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு வந்து விட்டோம்.

தன்னுடைய அப்பா, அம்மா வைத்த பெயரிலேயே தன்னை அழையுங்கள். வேறு எந்த அடைமொழியோ அல்லது சொற்றொடரோ வேண்டாம் என சொல்வதுதான் இதற்கான அடிப்படை. அப்படி அம்மா, அப்பா வைத்த பெயரை விட்டு விட்டு வேறு பெயர் சூட்டுவதற்கோ வேறு பெயரில் அழைத்து கொள்ளவோ தனக்கு உரிமையில்லை என்றுதான் அவர் நினைக்கிறார்.

அஜீத் அவர்களின் முதல் படத்திலேயே அவருக்கு வேறு தமிழ் பெயர் வைக்கலாம் என்று இருந்தது. ஆனால், அவர் இந்த பெயரே இருக்கட்டும் என்று முடிவெடுத்ததால்தான் 'அஜீத்' என்ற பெயர் இன்று பலருக்கும் பரிச்சயமாகி இருக்கிறது. மற்றபடி ரசிகர்களை வருத்தமடைய செய்யும் நோக்கம் இதில் இல்லை" என்றார்.

'வலிமை' படத்திற்கான கவனக்குவிப்பா?

ஹெச். வினோத் இயக்கத்தில் அஜீத், கார்த்திகேயா, ஹீமா குரேஷி உள்ளிட்ட பலரது நடிப்பில் 'வலிமை' திரைப்படம் பொங்கல் வெளியீடாக வர இருக்கிறது. படத்தின் முதல் பார்வை மற்றும் முதல் பாடல் ஏற்கனவே வெளியாகி இருந்த நிலையில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் சித் ஸ்ரீராம் பாடிய 'அம்மா பாடல்' வரும் 5ம் தேதி அன்று வெளியாக இருக்கிறது.

சில வருடங்களுக்கு முன்பு அவர் தனது ரசிகர் மன்றங்களை கலைத்து அறிவிப்பு வெளியிட்டதும் ரசிகர்களிடையே அந்த சமயத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. பேட்டிகள் கொடுப்பதில்லை, சமூக வலைதளங்களில் இல்லை, ரசிகர்கள் மன்றம் கலைப்பு, தற்போது இந்த அறிவிப்பு என அஜீத்தின் இந்த முடிவிற்கு பின்னணியில் 'வலிமை' படத்திற்கான கவனக்குவிப்பா என்ற கேள்வியையும் தற்போது சமூக வலைதளங்களில் பார்க்க முடிகிறது.

இதற்கான பின்னணி காரணங்களை அறிந்து கொள்ள சினிமா பத்திரிக்கையாளர் வெற்றிவேலிடம் பேசினோம், "நிச்சயம் 'வலிமை' படத்திற்கான கவனக்குவிப்பு கிடையாது. அஜீத் தன் படங்களுக்கு இப்படி விளம்பரம் செய்ய வேண்டும் என்ற கட்டத்தை எல்லாம் எப்போதோ தாண்டிவிட்டார். எந்தவொரு சினிமா பின்புலமும் இல்லாமல் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் அஜீத். தற்போதுள்ள நடிகர்களில் அஜீத் வித்தியாசமானவர். ஏனெனில், தன்னை மட்டுமே ரசிகர்கள் கவனிக்க கூடாது அவர்களுடைய குடும்பங்களையும் கவனிக்க வேண்டும் என சில வருடங்களுக்கு முன்பே ரசிகர் மன்றங்களை கலைத்தார்.

இதற்கு முன்பும் நடிகர் கமல்ஹாசன் தன் ரசிகர் மன்றங்களை கலைத்து நற்பணி மன்றங்களாக மாற்றினார். ஆனால், அஜீத்தின் இந்த அறிக்கை குறித்து எனக்கு என்ன தோன்றுகிறது என்றால், 'தல' என்ற பெயரை வைத்து அஜீத் VS விஜய், தோனி VS அஜீத் என்ற சண்டை சமூக வலைதளங்களில் அதிகம் பார்க்க முடியும்.

அதிலும் குறிப்பாக ஐபிஎல் சமயத்தில் 'யாரு தல?' என்ற சண்டை சமூக வலைதளங்களில் போய் கொண்டிருந்ததை பார்த்திருப்பீர்கள். இதுபோன்று, தேவையில்லாத சண்டைகளில் ரசிகர்கள் ஈடுபட வேண்டாம் என்பதுதான் நோக்கமாக இருக்கும். நடிகர் பவன் கல்யாண் கூட தன் ரசிகர்களிடம் தன்னை 'பவர் ஸ்டார்' என அழைக்க வேண்டாம் எனவும் தான் அந்த அளவிற்கு எதுவும் செய்யவில்லை எனவும் சொல்லியிருந்தார்.

வயதாக ஆக ஒவ்வொரு கட்டத்திலும் அந்த நிலைக்கு ஏற்ற பக்குவம் வரும். அப்படிதான் சரியான முடிவை எடுத்திருக்கிறார் அஜீத். இந்த முடிவிற்கு ரசிகர்களிடமும் வரவேற்பு இருக்கதான் செய்கிறது" என்கிறார்.

ரசிகர்களின் மனநிலை என்ன?

இந்த அறிவிப்பு குறித்து ரசிகர்களின் மனநிலை குறித்து அறிந்துகொள்ள அஜீத் ரசிகரான ஜானிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம், "ஆரம்ப காலத்தில் அவரது படங்களில் 'அல்டிமேட் ஸ்டார்' என்ற பட்டம் அப்போது இருந்தது. அதை நீக்கிய பிறகுதான் 'தல' என்ற பட்டம் ரசிகர்களிடையே பரவலாக வர ஆரம்பித்தது. பல பெரிய நடிகர்களுக்குமே கூட தமிழ் சினிமாவில் அடைமொழி இல்லாமல்தான் இருந்தது. 'தல' நடிகர் அஜீத்திற்கானது என்பது போய் இங்கு நண்பர்களிடையே பொதுவான சொல்லாக தற்போது இருந்து வருகிறது.

இதைத்தாண்டி அவர் இப்படி அழைக்க வேண்டாம் என்று சொல்லியிருப்பது ரசிகர்களுக்கு வருத்தம்தான். படங்களை தாண்டி பேனர்களில் பெயர் அச்சிடும்போதுதான் 'தல' என்ற அடைமொழியை சேர்ப்பார்கள். இனிமேல் அது சென்னை போன்ற பெருநகரங்களில் குறையும் என எதிர்ப்பார்க்கலாம். மேலும், சமூக வலைதளங்களில் ரசிகர்கள் இதைத் தவிர்ப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. மற்றபடி திரையில் அவரை பார்க்கும்போது 'தல' என ரசிகர்கள் உற்சாகத்தில் சொல்லாமல் இருக்க முடியாது என்பதுதான் நிதர்சனம்" என்கிறார்.