செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 28 அக்டோபர் 2020 (10:22 IST)

கொரோனா வைரஸ் கண்டறியப்பட்ட சீனாவின் வுஹான் நகரின் இன்றைய நிலை என்ன?

இந்த தலைமுறை தன் நினைவில் எப்போதும் வைத்திருக்கும் நகரங்களில் ஒன்று வுஹான். இந்த நகரத்தில் இருந்துதான் கொரோனா தொற்று பரவ தொடங்கியது. உலக நாடுகளை முடக்கிப் போட்டது.

ஆனால், இப்போது அந்த நகரம் எப்படி இருக்கிறது எனப் பலருக்குத் தெரியாது. ஆனால், அந்த நகரத்தின் இப்போதைய நிலையை அறிந்தால் ஆச்சரியம் கொள்வீர்கள்.

ஆம், இப்போது அந்த நகரம் சீனாவின் முக்கியமான சுற்றுலா மையமாக மாறி வருகிறது.

சீனாவின் தேசிய தினத்தை முன்னிட்டு, அக்டோபர் 1ஆம் தேதியிலிருந்து 7ஆம் தேதி வரை விடுமுறை இருக்கும். இந்த வாரத்தை `தங்க வாரம்` என அழைக்கிறார்கள். இந்த சமயத்தில் மட்டும் வுஹான் நகரம் அமைந்துள்ள ஹூபே மாகாணத்திற்குக் குறைந்தது 5.2 கோடி சுற்றுலா பயணிகள் வருகை புரிந்துள்ளார்கள்.

5.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அந்த மாகாணத்திற்கு இந்த ஒரு வார காலத்தில் வருவாயாக வந்துள்ளது.

குறிப்பாக ஹூபே மாகாணத்தின் தலைநகரான வுஹான் நகரத்திற்கு மட்டும் 1.9 கோடி சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்துள்ளனர் என்கிறது அந்த மாகாணத்தின் சுற்றுலா மற்றும் கலாசார துறை.

உலக நாடுகளின் நிலை என்ன?

சீனாவின் நிலை இவ்வாறாக இருக்க, உலகநாடுகள் கோவிட் -19இன் இரண்டாவது அலையால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. சொல்லப் போனால் பல பேர் கொரோனாவின் முதல் அலையைவிட இதில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிரான்ஸில் அதன் தலைநகர் பாரீஸ் உள்ளிட்ட எட்டு நகரங்களில் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. லண்டனிலும் ஏறத்தாழ இதே நிலைதான். இங்கிலாந்தில் பல பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அமெரிக்கா இன்னும் இயல்புநிலைக்குத் திரும்பவே இல்லை. அங்கு மட்டும் 87 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 2.25 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பலியாகி உள்ளனர்.

சீனாவின் அண்டைய நாடான இந்தியாவில் ஏறத்தாழ 80 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். லத்தீன் அமெரிக்கா நாடுகள், கரீபியன் தீவுகள் என எல்லா புவியின் எல்லா திசைகளிலும் கொரோனா கால்பதித்து, அழிவைக் கொண்டு வந்திருக்கிறது.

அதே சமயம், 'வீர நகரம்` என சீன அதிபர் ஷி ஜின்பிங்கால் அழைக்கப்பட்ட வுஹான் நகரத்தின் நிலை வேறாக உள்ளது. சொல்லப்போனால் கொரோனாவுக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது போன்ற தோற்றத்தை இந்த நகரம் கொண்டிருக்கிறது.

அரசு தகவல்களும் அப்படியே கூறுகின்றன. இப்போது அங்கு யாருக்கும் கொரோனா இல்லை என்கிறது சீன அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ தகவல். ஆனால், அதனை அவ்வளவு தீவிரமாக எடுத்துக் கொள்ள முடியாது என்கின்றனர் வல்லுநர்கள்.

வுஹானின் மறுபிறப்பு

சீனாவின் தேசிய தினம் கொண்டாட்டம் தொடர்பான காணொளிகளை சமூக ஊடகங்களில் காண முடிகிறது. ஏராளமான மக்கள் திரணடு சீனாவின் தேசிய கீதத்தை பாடுவதையும், தேசிய கொடியை ஏற்றுவதையும் காண முடிகிறது.

"இந்த காணொளிகளைப் பகிர்ந்து, "வுஹான் நகரம் அதிக வலிமை மற்றும் சக்தியுடன் மறுபிறப்பு எடுத்துள்ளது," என வெளியுறவுத் துறையைச் சேர்ந்த தகவல் துறையின் துணை இயக்குநர் ட்வீட் செய்துள்ளார்.

இது தொடர்பாக பிபிசி சீன சேவையின் ஆசிரியர் விவியன் ஹூ, "வுஹானில் இயல்பு நிலை முழுவதுமாக திரும்பி மக்கள் எல்லாரும் மகிழ்ச்சியாக இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த அரசு ஊடகத்தின் துணையுடன் ஷி ஜின்பிங் அரசு முயல்கிறது," என்கிறார்.

ஹாங்காங்கை சேர்ந்த செய்தியாளர், "ஓரளவுக்கு இது உண்மை. சீனாவின் எல்லா பகுதிகளுக்கும் மக்கள் வழக்கம் போல் பயணிக்கிறார்கள். வூஹானுக்கும் செல்கிறார்கள். அந்த நகரம் இயல்பு நிலைக்கு திரும்பியது போல தோற்றம் இருந்தாலும், கொரோனாவுக்கு முந்தைய நிலை போல இல்லை என்பதுதான் உண்மை. அங்கு கவலை நிலவுகிறது," என்கிறார்.

மேலும் அவர், "சீனாவின் பிரசாரத்தின் மூலம் நமக்கு தெரிவது என்னவென்றால் அந்நாடு கொரோனாவை வெற்றிகரமாக சமாளித்து இருக்கிறது," என்று கூறுகிறார்.

ஜான்ஸ் ஹாஃப்கின்ஸ் பல்கலைக்கழகம் தரும் தகவலின்படி, அக்டோபர் 27ஆம் தேதி வரை, அங்கு கொரோனாவால் 91,175 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள், 4739 பேர் பலியாகி இருக்கிறார்கள்.

சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்படுவது தொடர்கிறது. ஆனால், வெளிப்படையாக வுஹானில் இல்லை, என்கிறார் விவியான் ஹூ.

சுற்றலா துறையின் எழுச்சி
வுஹானின் சுற்றுலாத்துறை எழுச்சிக்குக் காரணம் மக்கள் இயல்பாக அந்த நகரத்தைத் தேர்ந்தெடுப்பதால் இல்லை. அரசின் கொள்கைகளே இதற்கு காரணம்.

தங்கள் பகுதியில் உள்ள 400 சுற்றுலா தளங்களை திறக்கப் போவதாக கடந்த ஆகஸ்ட் மாதம் ஹூபே மாகாண அரசு அறிவித்தது. இந்த சுற்றுலா தளங்களை இந்த ஆண்டு இறுதி வரை கட்டணம் ஏதும் இல்லாமல் மக்கள் பார்வையிடலாம் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால், அதே நேரம் இந்த சுற்றுலா தளங்களை பார்வையிடும் மக்களை 50 சதவீதமாக குறைத்தது. அதாவது ஓர் அரங்கத்தை அதிகபட்சமாக 100 பேர் பார்வையிடலாம் என்றால் 50 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல், ஏராளமான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. ஆனால், எதிர்பார்த்ததை விட மக்கள் ஏராளமானோர் திரண்டனர்.

குறிப்பாக, வுஹான் நகரத்தில் இருக்கும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மஞ்சள் கிரேன் டவரை பார்க்க மக்கள் அதிகளவில் திரண்டனர்.

அரசின் இலவச அனுமதி திட்டத்துடன், 1000 சுற்றுலா நிறுவனங்களும், 350 விடுதிகளும் கரம் கோர்த்ததாகக் கூறுகிறது ஜின்ஹுவா செய்தி முகமை.

வுஹான் சுற்றுலா துறையில் மீண்டு வந்திருப்பது, அதன் தன்னம்பிக்கையைக் காட்டுவதாகவும், பெருந்தொற்றை கையாளும் அதிகாரிகள் மற்றும் அரசின் திறனைக் காட்டுவதாகவும் கூறுகிறார்கள் சில வல்லுநர்கள்.

அரசின் வெற்றி

இந்த விஷயமானது, சீனாவின் வெற்றியாக உருவகப்படுத்தப்படுகிறது

வுஹானின் இந்த மாற்றத்தைப் பிரசார உத்திக்காக அரசு பயன்படுத்தலாம். ஆனால், அந்த பிரசாரம் தரவுகளின் அடிப்படையிலேயே நடக்கிறது என பிபிசி உலக சேவையின் சீன விவகார வல்லுநர் வின்சென்ட் நி சுட்டிக்காட்டுகிறார்.

வுஹான் இயல்புநிலைக்குத் திரும்பி இருப்பது மக்களுக்கு தெரியும். அப்படி இல்லை என்றால், கொரோனா தொற்று அங்கு பரவலாக இருக்கிறது என்றால் மக்கள் அங்கு செல்லமாட்டார்கள் என்று அவர் கூறுகிறார்.

என்னதான் இயல்புநிலை திரும்பி இருந்தாலும், கடந்தாண்டை ஒப்பிடும்போது சுற்றுலா வருவாய் 52 சதவீதம் அளவு குறைவாகவே இருப்பதாக கூறுகிறது சீன சுற்றுலா மையம்.

அங்கு இயல்பு நிலை திரும்பிக் கொண்டிருக்கிறதுதான். ஆனால்,இந்த நிலை தொடருமா என்பதுதான் நம் கேள்வி என்கிறார் வின்சென்ட் நி.

"அங்கு குளிர்காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இரண்டாவது அலை அங்கு மீண்டும் வருமா என்பதுதான் கேள்வி. சீன மக்களிடமும் இந்த கேள்வி இருந்தாலும், இப்போதைக்கு இந்த இயல்பு நிலையைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்," என்கிறார் அவர்.

இருமுனை கத்தி

சீனா முழுவதும் இயல்பு நிலை திரும்பிக் கொண்டிருக்கிறது. முகக் கவசம் அணிபவர்களின் எண்ணிக்கையும் பரவலாக குறைந்திருக்கிறது என்கிறார் சீன நிபுணர்.

சீன தலைநகர் பெய்ஜிங்கில் 2 கோடி மக்கள் வசிக்கிறார்கள். அங்கு முகக் கவசம் அணிவது இப்போது கட்டாயம் அல்ல.

இதுவே கவலை அளிப்பதாகக் கூறுகின்றனர் வல்லுநர்கள்.

அங்கு இயல்புநிலை திரும்பிக் கொண்டிருக்கிறதுதான். ஆனால், அதே நேரம் கொரோனா வைரஸ் இந்த உலகைவிட்டு மறையவில்லை. நம்மிடம் பலன்தரும் தடுப்பூசியும் இல்லை. இந்த நிலை தொடர்ந்து ஒருவேளை, இரண்டாம் அலை வந்தால், நிலைமை மிக மோசமாகும் என்று அவர்கள் கூறுகின்றனர்.