1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By papiksha joseph
Last Updated : சனி, 12 நவம்பர் 2022 (13:17 IST)

புதிதாக வேலைக்குச் சேர்ந்தவர்கள் எதில் முதலீடு செய்வது நல்லது?

உலகமயமாக்கல் காரணமாக கடந்த மூன்று தசாப்தங்களில் நம்முடைய நாட்டில் பல விஷயங்கள் மாறிவிட்டன. கடந்த தலைமுறை மற்றும் நம்முடைய தலைமுறையை ஒப்பிடும்போது சிந்திக்கும் முறை மற்றும் தினசரி வாழ்க்கை முறை வெகுவாக மாறிவிட்டது.
 
கடந்த தலைமுறையினர் பணி ஓய்வுக்குப் பிறகு தங்களது வருங்கால வைப்பு நிதி பணத்தின் மூலம் வீடு வாங்கி எதிர்காலம் குறித்த பயமில்லாமல் வாழ்க்கை நடத்தினர். ஆனால், இன்றைய தலைமுறையினர் ஐம்பது வயதிற்கு முன்பாகவே பணி ஓய்வு பெற்றுவிட்டு உலகச்சுற்றுலா செல்ல விரும்புகிறார்கள். இந்த இரு தலைமுறையினரின் சிந்தனை செயல்பாட்டில் எந்த ஒற்றுமையும் இல்லை.
 
தற்போது குழந்தைகளின் கல்விக்கட்டணம் மற்றும் மருத்துவச்செலவு பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில், பொருளாதார சுய ஆதரவுக்கான வரையறை மாறிவிட்டது. இத்தகைய சூழலில், நம்முடைய தொழில் வாழ்க்கை திட்டமிடல்போல நிதி திட்டமிடலும் அவசியம்.
 
நிதி திட்டமிடலை கீழ்காணும் மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.
 
ஆயுள் காப்பீடு
Term Policy எனப்படும் ஆயுள் காப்பீடு எடுப்பதில் கடந்த 10 அல்லது 15 ஆண்டுகளில் பெரிய அளவில் மாற்றங்கள் நடந்துள்ளன. 2005ஆம் ஆண்டு காலகட்டத்தில் Term Policy எடுப்பது அவ்வளவு எளிதானதல்ல.
 
ஆனால், இன்று இரண்டு அல்லது மூன்று நாட்களில் Term Policy எடுத்துவிடலாம். முதலில் இந்த வகை பாலிசிகள் ஊழியர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்ட நிலையில், தற்போது அவர்களின் மனைவிகளுக்கும் வழங்கப்படுகிறது.
 
ஊழியருக்கு ஏதேனும் அசம்பாவிதங்கள் நேர்ந்தால் அவரது குடும்பத்திற்கு பொருளாதார ரீதியாக உதவுவதே இந்தப் பாலிசியின் நோக்கமாகும்.
 
வாழ்க்கை முறையில் எந்தவித சமரசமும் செய்துகொள்ளாமல் அது போன்ற கடினமான சூழ்நிலையை எதிர்கொள்ள இந்தப் பாலிசி உதவுகிறது. எனவே ஒருவர் வேலைக்குச் சேர்ந்தவுடன் எந்தவித யோசனையும் இல்லாமல் Term Policy எடுத்துக்கொள்ள வேண்டும்.
 
30 வயதிற்கும் குறைவானவர்களுக்கு பாலிசியின் பிரீமியம் தொகை குறைவாகவே இருக்கும். அதேபோல, 40 வயதிற்கும் மேற்பட்டவர்கள் பாலிசி எடுப்பது சற்று கடினம்.
 
பாலிசி தொகை எவ்வளவு இருக்க வேண்டும் என்பதற்கு பல கோட்பாடுகள் உள்ளன. ஒவ்வொருவரும் தங்களுக்கு வசதியான பாலிசியை எடுத்துக்கொள்ளலாம்.
 
மருத்துவக் காப்பீடு
 
மாநகரங்கள் மட்டுமல்லாது சிறு நகரங்களில்கூட இன்று உயர் சிகிச்சை மருத்துவமனைகளுக்கான தேவை பன்மடங்கு அதிகரித்துவிட்டது. சிறு நகரங்களில் தரமான சிகிச்சை கிடைத்தாலும், மருத்துவக் கட்டணம் அதிகமாகவே உள்ளது.
 
மகப்பேறு, குழந்தை மருத்துவம், பல் சிகிச்சை உட்பட அனைத்து சிகிச்சைகளுக்கான செலவும் அதிகமாக இருக்கும் நிலையில், அதன் சுமையிலிருந்து ஊழியர்களைப் பாதுகாப்பதே மருத்துவக் காப்பீட்டின் நோக்கமாகும்.ஆயுள் காப்பீடு போல இளம் வயதில் எடுத்துக்கொண்டால் மருத்துவக் காப்பீட்டின் பாலிசி தொகையும் குறைவாகவே இருக்கும்.
 
மனைவி, குழந்தைகளுக்கு புது பாலிசி எடுப்பதற்குப் பதிலாக உங்கள் பாலிசியில் அவர்களையும் இணைத்துக்கொள்ளலாம். புது பாலிசிக்கான தொகையைவிட இதற்கான தொகை குறைவு.
 
முதலீடு
எதிர்காலத் தேவைகளை மனதில் வைத்து முதலீடு செய்வது நமது கலாசாரத்தின் ஒரு பகுதி. தானியங்களை களஞ்சியத்தில் சேமித்து வைத்து தேவைப்படும்போது அதைப் பயன்படுத்துவது நம்முடைய பாரம்பரியமாகும்.
 
அதேபோல எதிர்கால பொருளாதாரச் சுதந்திரத்திற்காக பணத்தை முதலீடு செய்வதும் மிக முக்கியமாகும். மாதச்சம்பளம் வாங்கும் ஊழியர்கள் முதலீடு செய்வதற்குப் பல வழிகள் உள்ளன. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.
 
வருங்கால வைப்பு நிதி
 
வருங்கால வைப்பு நிதியில் உங்கள் நிறுவனத்தின் பங்களிப்போடு சேர்த்து, ஒரு தொகை ஒவ்வொரு மாதமும் உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும். இந்தத் தொகை ஊழியர்களின் எதிர்கால தேவையைப் பூர்த்தி செய்ய உதவியாக இருக்கும்.
 
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியின் ஆண்டு வரம்பு 2 லட்சத்தைத் தாண்டினால் அதற்கு வரி செலுத்த வேண்டும் என்று புதிய விதிமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.
 
இந்தப் புதிய விதியை கருத்தில் எடுத்துக்கொண்டாலும், வருங்கால வைப்பு நிதி என்பது ஊழியர்களுக்கு பொருத்தமான வாய்ப்பு. இவை நேரடியாக உங்கள் நிறுவனத்தினால் வரவு வைக்கப்படுவதால் நீங்கள் எதுவும் செய்யத்தேவையில்லை.
 
இந்த நிதியை சில குறிப்பிட்ட சூழ்நிலையில் மட்டுமே எடுக்க முடியும் என்பதால் நீண்டகால தேவை மற்றும் அவசரகால தேவைகளுக்கு வருங்கால வைப்பு நிதி சிறந்த முதலீடாகும்.
 
தற்போது வருங்கால வைப்பு நிதிக்கு 8.5 சதவிகிதம் வட்டி அளிக்கப்படுகிறது. எதிர்காலத்தில் இது 8 சதவிதமாகக் குறையலாம்.
 
நிலையான வைப்பு முறைபட மூலாதாரம்,GETTY IMAGES
நிலையான வைப்பு முறை
 
நிலையான வைப்பு முறை என்பது குறிப்பிட்ட காலத்திற்கு நம்முடைய பணத்தை வங்கியில் வைத்திருப்பதாகும். கடந்த காலங்களில் இந்த வகை முதலீடு மிகவும் பிரபலமடைந்தது.
 
குறைவான வட்டி விகிதம், வட்டிக்கு வரிமான வரி, முன்னதாகவே வைப்பை முடித்துக்கொண்டால் அபராதம் போன்ற காரணங்களால் இந்த முறையில் பெரிய அளவில் பயனில்லை.
 
ஆனால், குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட தொகையை எதிர்பார்த்து முதலீடு செய்தால் இந்த முறை சிறந்த முதலீடாகும்.
 
பங்குச் சந்தை
 
பங்குச் சந்தையில் மியூச்சுவல் பண்ட், ஷேர்ஸ் உட்பட பல்வேறு வகையான முதலீட்டு திட்டங்கள் உள்ளன. ஆனால் இந்த முதலீடுகளுக்கு வரி செலுத்த வேண்டும் என்பதால் தங்களுக்கு ஏற்ற வழிகளைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.
 
அனைத்து முதலீட்டு திட்டங்களும் தனித்தனியாக வேறுபடுகின்றன. பங்குச் சந்தை மோசடி, பங்குச்சந்தை சரிவு பற்றிய கதைகளை நாம் கேள்விப்பட்டாலும், தெளிவான திட்டமிடலுடன் முதலீடு செய்து தங்கள் நிதி இலக்குகளை எட்டியவர்கள் பலர் உள்ளனர்.
 
ரியல் எஸ்டேட்
 
இந்தப் பூமி 71 சதவிகிதம் நீரையும் 29 சதவிகிதம் நிலத்தையும் கொண்டது. மக்கள்தொகை வளர்ச்சி என்னவாக இருந்தாலும், நிலத்தின் அளவு தொடர்ந்து மாறாமல் உள்ளது. இந்தக் கருதுகோளின் அடிப்படையில், ரியல் எஸ்டேட் வணிகம் நடைபெறுகிறது.
 
கடந்த காலங்களில் ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்து சிலர் நல்ல லாபம் பார்த்துள்ளனர். ஆனால், கடந்த சில வருடங்களாக இந்தத் துறையில் கணிசமான வளர்ச்சி இல்லை. கூடுதலாக, கொரோனா நெருக்கடியும் இந்தத் துறையை வெகுவாகப் பாதித்துவிட்டது.