1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Modified: செவ்வாய், 18 ஏப்ரல் 2023 (11:25 IST)

"உயிரே போனாலும் உரிமையை விட்டுக்கொடுக்க மாட்டோம்" - போராட்டத்தில் மீனவ பெண்கள்

“1984ல எம்ஜிஆர் துப்பாக்கி சூடு நடத்தவே உத்தரவு கொடுத்தாரு. அப்பவே எதிர்த்து நின்னு உயிரைத்தான் விட்டோமே தவிர, எங்க இடத்தை விட்டுக்கொடுக்கல. என்னவோ நாங்க இப்பதான் இங்க வந்த மாதிரி பேசுறாங்களே, உங்களுக்கு இந்த ரோடு என்ன சொந்தமானு கேட்குறாங்களே! ஆமா, இது எங்க ரோடுதான். நாங்க உயிரையேகூட விடுவோம், ஆனா இந்த மண் மீதான எங்க உரிமைய விட்டுக்கொடுக்க மாட்டோம்,” என்று சென்னையின் லூப் சாலையில் சாலையோர மீன் கடையை வைத்திருக்கும் முல்லைக்கொடி உணர்ச்சி பொங்கப் பேசினார்.
 
மீன் கடைகளை நெருங்கியிருந்து பார்த்தவர்களுக்கு அதன் தனித்துவமான அழகு தெரியும். “வஞ்சரம், காலா, மத்தி, அயிர, நண்டு, பாற, இறா” என்று மீன்களின் பெயர்களை மீனவப் பெண்கள் கூவி விற்பதையே ஒரு கவிதையாக வடிக்கலாம்.
 
அப்படிப்பட்ட ஒரு கவிதைக்குத்தான் ஆபத்து வந்திருப்பதாக சென்னை மெரினா கடற்கரை பகுதியிலுள்ள லூப் சாலையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த மீனவ மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
 
அங்கு வழக்கமாக இரண்டு விதமான வேலைகள் நடக்கும். மீன் வாங்க வரும் வாடிக்கையாளர்கள் கேட்கும் மீன்களை மீனவப் பெண்கள் விற்பனை செய்வார்கள். அடுத்ததாக, அப்படி விற்கப்படும் மீன்களை வெட்டிக் கொடுப்பதற்காக மீன் வெட்டும் பெண்களும் அங்கேயே அமர்ந்திருப்பார்கள்.
 
வாடிக்கையாளர்கள் வாங்கும் மீன்களின் அளவுக்கு ஏற்ப, வெட்டிக்கொடுப்பதற்கான கூலியும் 20 அல்லது 30 ரூபாய் கிடைக்கும்.
அப்படி மீன் வெட்டிக் கொடுக்கும் தொழிலாளியாக வேலை செய்யும் கலைவாணி, “போன புதன்கிழமையில இருந்து கடை போட விடமாட்டேங்குறாங்க. 6 நாளா வருமானம் இல்ல. கிடைச்சிட்டு இருந்த 20, 30 ரூபாயும் கிடைக்கவிடாம தடுத்துட்டாங்களே” என்று வருந்துகிறார்.
 
“சிங்காரச் சென்னையின் கடற்கரை சாலை அழகாக இல்லை”
சென்னையில் கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாகம் வரை உள்ள லூப் சாலையில் மீன் கடைகள் ஆக்கிரமித்து உள்ளதாகக் கூறி உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து பொது நல வழக்கை விசாரணைக்கு எடுத்தது.
 
இந்த வழக்கு கடந்த வாரம் நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பி.பி.பாலாஜி ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, லூப் சாலையின் ஓரத்தில் “ஆக்கிரமித்திருக்கும் மீன் கடைகளை ஒரு வாரத்தில் அகற்ற வேண்டும்” என்று சென்னை மாநகராட்சிக்கு அறிவுறுத்தியது.
 
சென்னை மெரினா கடற்கரையில் அமைந்திருக்கும் லூப் சாலையில் செயல்படும் மீன் கடைகளை அகற்றிவிட்டு ஏப்ரல் 18ஆம் தேதிக்குள் மாநகராட்சி நிர்வாகம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
லூப் சாலையில், மீன் கடைகள் செயல்படுவதால் வாகன நெரிசல் மட்டுமின்றி பல்வேறு இடையூறுகள் ஏற்படுவதாக நீதிபதி சுந்தர் இந்த விசாரணையின்போது கூறியதாக தி இந்து நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.
 
மேலும், நீதிபதி பாலாஜி, “சிங்காரச் சென்னை எனச் சொல்கிறீர்கள். ஆனால், கடற்கரையை ஒட்டியுள்ள சாலையில் இருக்கும் நிலைமை அழகானதாக இல்லை,” என்று குறிப்பிட்டார்.
 
இதுகுறித்த விசாரணையின்போது, அவர்களுக்கான மீன் மார்க்கெட் அமைக்கும் பணிகள் நடந்து வருவதாகவும் அது முடிவதற்கு ஆறு மாத காலம் ஆகும் என்பதால், அதுவரைக்கும் எந்த இடையூறும் ஏற்படாதவாறு கவனித்துக் கொள்வதாக கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜே.ரவீந்திரன் நீதிபதிகளிடம் தெரிவித்தார்.
ஆனால், அதுவரைக்கும் காத்திருக்க முடியாது என்று கூறிய நீதிபதிகள் ஏப்ரல் 18ஆம் தேதிக்குள் “மீன் கடைகளின் ஆக்கிரமிப்பை போலீஸ் உதவியுடன் அகற்ற வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.
 
இதைத் தொடர்ந்து லூப் சாலையில் செயல்பட்டு வந்த சிறு குறு மீன் விற்பனைக் கடைகளை அகற்றும் நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி மேற்கொண்டது.
 
“சாலையில கடை போடல, எங்க கடையிலதான் லூப் சாலை இருக்கு”
“2015ல ஒரு ஐஏஎஸ் அதிகாரி மெரினா சாலையில் வியாபாரம் செய்துகொண்டிருந்த 6 மீனவப் பெண்களை அழைச்சுப் பேசுனாங்க. ‘அம்மா, ரோடு சரியில்ல, ஸ்கூல் போற புள்ளைங்களுக்கு ரொம்ப டிராஃபிக் ஆகுது. அதனால நீங்க கடைகள நடைபாதையில வெச்சுக்குங்க அங்கயே நிழற்குடை அமைச்சு கொடுத்துடுறோம், அங்கயே வியாபாரம் செஞ்சுக்குங்க’னு சொன்னாங்க.
 
நாங்களும் கலந்து பேசிட்டு முடிவு செய்றதா சொல்லிட்டு வந்தோம். ஆனா அதுக்கு ஒரு தீர்வு காண்பதற்கும் முன்னாடியே, இரவோட இரவா ஸ்ரீவாசபுரத்துல தொடர்ச்சியா 12 அடிக்கு இருந்த நடைபாதைய எடுத்துட்டு சாலைய விரிவுபடுத்த ஆரம்பிச்சுட்டாங்க. நாங்க அப்பவும் தடுத்தோம். ஆனா, அதுக்கு அவங்க, ‘நாங்க ரோடு போட்டதா கணக்கு காட்டிக்குறோம். நீங்க நடைபாதை இருந்த இடத்துல எப்பவும் போல வியாபாரம் செஞ்சுக்குங்க. யாரும் எந்தப் பிரச்னையும் கொடுக்க மாட்டாங்க” அப்படினு உத்தரவாதம் கொடுத்தாங்க.
 
ஆனா, அன்னைக்கே நாங்க அதைய எழுத்துப்பூர்வமா வாங்கிருக்கணும். வாய்ப்பேச்சோட நிப்பாட்டிருக்க கூடாது. நாங்க யாரையும் ஏமாத்த மாட்டோம், அதேமாதிரிதான் எல்லாரும் இருப்பாங்கனு நம்பிட்டோம். அதனால இன்னிக்கு எங்களை ஈசியா ஏமாத்துறாங்க,” என்று தெரிவித்தார் மீனவப் பெண்ணான முல்லைக்கொடி.
கடலோரப் பகுதியே மீனவக் குடிகளுக்குத்தான் சொந்தம் என்று கூறும் முல்லைக்கொடி, “வாழ்வோ, சாவோ மீன் பிடிக்குறதும் மீன் விக்குறதும்தான் எங்க பொழப்பு. இத்த விட்டுட்டு போகமாட்டோம்,” என்று உறுதிப்பாடு நிறைந்த குரலில் பேசினார்.
 
முல்லைக்கொடி தினசரி நள்ளிரவு 1 மணிக்கெல்லாம் கண்விழித்து, விற்பனைக்கான மீன்களை எடுக்கச் செல்லவேண்டும். அவருடைய பூர்வீகமான நொச்சிக்குப்பத்திலேயே அவருக்குத் தேவையான மீன்கள் கிடைக்கும். சில நேரங்களில் மீன்கள் போதுமான அளவுக்குப் பிடிபடாமல் போனால், காசிமேடு, சிந்தாதிரிபேட்டை போன்ற இடங்களுக்குச் சென்று மீன்களை வாங்கி வருவார்.
 
“அப்படி வாங்கிட்டு வந்த மீனையெல்லாம், ஐஸ் பெட்டில போட்டு விடியும்போது விற்கத் தயாரா வெக்கணும். அதுக்கு அப்புறம் காபி, தண்ணி இல்லாம வெயில்ல வியாபாரம் செய்யணும்.
 
கட்டுமரத்துல கடலுக்குப் போய், ஏதோ ஓரளவுக்குக் கிடக்கும் மீன்களைப் பிடிச்சுட்டு வராங்க. அதைய வெச்சு சாலையோர கடை போட்டு வியாபாரம் பண்ணி பொழப்பு நடத்துறோம். கிட்டத்தட்ட ஒரு வாரமா வியாபாரம் பண்ணவிடாம பிரச்னை பண்றாங்க. இன்னிக்கு காலையில, கையில மிச்ச, மீதி இருந்த மீனையாவது வித்துடுவோம்னு நினைச்சா அதையும் வந்து தடுக்குறாங்க.
 
நாங்க ஏன் என் இடத்தைவிட்டு வேற பக்கம் ஓடணும்? நாங்க லூப் சாலையில கடை போடல, எங்க கடையிலதான் லூப் சாலை போட்டிருக்காங்க. இது எங்களோட இடம், நாங்க இங்கதான் இருப்போம்,” என்றார் முல்லைக்கொடி.
“வருமானத்துக்கு வழியில்லாம நிக்குறோம்”
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, கலைவாணி தனது கணவரை இழந்துவிட்டார். 57 வயதான அவருக்கு குழந்தைகள் இல்லை. தினமும் லூப் சாலையிலுள்ள மீன் கடைகளில் மீன் வெட்டும் வேலை செய்கிறார்.
 
வேலையைச் செய்வதால் அவருக்கு ஒரு மீனுக்கு 20 அல்லது 30 ரூபாய் வரை கிடைக்கிறது. ஒரு நாளைக்குச் சராசரியாக 100 அல்லது 200 ரூபாய் கிடைக்கிறது.
 
“அந்தக் காசுகூட கிடைக்குறதுக்கு வழியில்லாம செஞ்சுட்டாங்களே,” என வருந்தும் கலைவாணி “தனக்குத் தெரிந்த ஒரு தொழிலையும் செய்யவிடாமல் தடுத்தால் பிழைப்புக்கு என்ன செய்வது?” என்று கண்ணீருடன் புலம்புகிறார்.
 
“என் கையில 200 ரூபா கிடைச்சா ரெண்டு கிலோ அரிசி, கூட கொஞ்சம் உப்பு, புளி, மிளகாய்னு மளிகை சாமான்லாம் வாங்கி சோறு வடிச்சு சாப்புடுவேன். போன புதன்கிழமையில இருந்து வேலை இல்லாதனால, இப்போ என்ன பண்றதுனு தெரியாம நிக்குறேன்.
 
கையில இருந்த கொஞ்சம் காசுல வாங்குன சாமான்லாம், இன்னும் 5 நாளுக்கு வரும். அதுக்கு அப்புறம் பொழப்புக்கு என்ன செய்றது?” என்று கேட்கும் கலைவாணி, தான் செய்துகொண்டிருந்த மிகச் சிறிய வேலையும் அதில் கிடைத்த கூலியும் தடைபட்டதால், வாழ்வாதாரம் கேள்விக்கு உள்ளாகி நிற்பதாகக் குமுறுகிறார்.
 
“தினமும் நான் சம்பாதிச்சா தானே என் வயிற்றை நிரப்ப முடியும். கையில இருக்குறது காலியான அப்புறம் எப்படி சாப்பிடுறது? இதுக்கான பதிலை எங்களை அகற்றச் சொன்ன நீதிபதி கிட்டயே கேட்டுச் சொல்லுங்க” என்று கூறுகிறார் கலைவாணி.
 
மீனவர்கள் தொடர் போராட்டம்
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து மாநகராட்சி அதிகாரிகள், காவல்துறை உதவியுடன் மெரினா லூப் சாலையில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது மீன் வியாபாரிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
 
ஆனால், உயர்நீதிமன்ற உத்தரவு என்று கூறி, மாநகராட்சி ஊழியர்கள் கடைகளை அகற்றத் தொடங்கினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மீனவர்கள் சாலையில் மீன்களைக் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
இந்நிலையில், இன்று இந்தப் பிரச்னை தொடர்பாக மீனவ மக்கள் கையெழுத்து இயக்கத்தை முன்னெடுத்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட மீனவக் குடும்பங்களிடம் கையெழுத்து பெற்று அரசிடம் மனு அளிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.
 
இந்த நேரத்தில், மீனவப் பெண்கள் தங்களிடம் மீதம் இருந்த சொற்ப அளவிலான மீன்களை விற்று முடித்துவிடலாம் என்ற எண்ணத்தில் லூப் சாலையில் வியாபாரத்திற்கு அமர்ந்ததாகவும் அதற்கு அனுமதிக்காமல் அவர்களுடைய மீன் வைக்கும் ஐஸ் பெட்டி, கூடைகள் ஆகியவற்றை போலீஸ் அப்புறப்படுத்தியதாகவும் அந்தப் பகுதியில் இருந்த மீனவப் பெண்கள் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர்.
 
லூப் சாலையில் இருந்த மீன் கடைகளை அகற்றிய நடவடிக்கையால் ஆத்திரமடைந்த மீனவர்கள் தங்களுடைய ஃபைபர் படகுகளை சாலையின் நடுவே போட்டு, சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.
 
அதுகுறித்துப் பேசிய தென்னிந்திய மீனவர் சங்கத்தின் தலைவர் கே.பாரதி, “நாங்கள் இதுகுறித்து சட்டரீதியான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளோம்.
 
அப்படியிருக்கும்போது, வெறுமனே கிடக்கும் ஐஸ் பெட்டிகளையும் மீன் கூடைகளையும்கூட அப்புறப்படுத்த முயல்வது, ஏற்கெனவே மன உளைச்சலில் இருக்கும் மீனவ மக்களைச் சீண்டிப் பார்க்கும் செயல்,” என்று பிபிசி தமிழிடம் பேசியபோது தெரிவித்தார்.
 
மேலும், “இதுகுறித்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்கிறோம், ஆகவே எதுவாக இருந்தாலும் அங்கு பேசிக் கொள்ளலாம் எனச் சொல்லியும் மீண்டும் மீண்டும் வந்து பிரச்னையை உண்டாக்குகிறார்கள்.
 
அதனால்தான் படகுகளை சாலையின் குறுக்கே போட்டுவிட்டு, நாங்கள் மறியலில் அமர்ந்தோம். இதைச் செய்ய வைத்தது அதிகாரிகள்தான்,” என்று தெரிவித்தார்.
 
கடற்கரைக்கு அழகே மீனவர்கள்தான்
“நாங்க இதே இடத்துலதான் தலைமுறை தலைமுறையா வாழ்றோம். என் பாட்டன், தாத்தன் தொடங்கி, இப்போ என் பிள்ளைகள் வரைக்கும் மீன்பிடித் தொழிலைத்தான் செஞ்சிட்டு வராங்க.
 
எங்க வீட்டு ஆம்பளைங்க மீன் பிடிச்சுட்டு வந்தா, அந்த மீன்களை நாங்க இங்க கொண்டாந்து விற்போம். அதை வித்துதான் சோறு போட முடியும், குடும்பம் நடத்த முடியும். அந்த மீனை விற்கவிடாம, கீழ கொட்ட வெச்சாங்கனா நாங்க எங்க போய் பிழைக்குறது?” என்கிறார் நொச்சிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த மீனவப் பெண் கல்யாணி.
 
“கணவரை இழந்த பெண்கள், குடிப்பழக்கத்திற்கு அடிமையான கணவரால் துன்பப்படும் பெண்கள் என்றும் பலரும் இங்க மீன் வெட்டிக்கொடுக்குற வேலையைச் செய்ய வராங்க. அவங்க நிலைமை என்ன ஆகுறது?” என்று கேள்வியெழுப்புகிறார் கல்யாணி.
 
“எங்கள் வாழ்க்கையே கடலும் கடற்கரையுமாக இருக்கும்போது, அந்தக் கரையோரத்தில் கடை வைக்காமல் வேறு எங்கு சென்று வைப்பது?” என்று கேள்வியெழுப்புகிறார் முல்லைக்கொடி.
 
மேற்கொண்டு பேசியவர், “கடற்கரையோட அழகை நாங்க கெடுக்குறதா சொல்றாங்க, ஆனா அவங்க எல்லாம் இங்க வரதுக்கு முன்னாடியே, பல தலைமுறைகளாக இங்க வாழ்ந்துட்டு இருக்கும் மீனவர்கள்தான் இந்தக் கடற்கரைக்கே அழகு,” என்றும் கூறுகிறார்.