செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala
Last Updated : திங்கள், 6 ஜூன் 2022 (14:15 IST)

வடகொரியாவுக்கு எச்சரிக்கை: ஒன்றாக இணைந்து எட்டு ஏவுகணைகளை ஏவிய தென் கொரியா, அமெரிக்கா

South Korea - missiles
வடகொரியாவின் சரமாரியான பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைகளுக்கு பதிலடியாக தென் கொரியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து திங்கள்கிழமை எட்டு ஏவுகணைகளை ஏவியுள்ளன.


ஏவுகணை சோதனைகளை வடகொரியா அதிகரித்து வரும் நிலையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வடகொரியாவின் எவ்வித தூண்டுதலுக்கும் தங்கள் அரசு கடுமையாக எதிர்வினையாற்றும் என, தென் கொரிய அதிபர் யூன் சூக் யோல் தெரிவித்துள்ளார்.

"மக்களின் உடைமைகள் மற்றும் அவர்களின் உயிரை காப்பாற்றுவதில் எந்தவொரு விரிசலும் ஏற்படாமல் இருக்க நாங்கள் உறுதிசெய்வோம்," என அவர் தெரிவித்தார்.

சியோலில் நடைபெற்ற போர் நினைவு நிகழ்ச்சியில் பேசிய அவர், வடகொரியாவின் அணுசக்தி மற்றும் ஏவுகணை திட்டங்கள், "கொரிய தீபகற்பத்தின் அமைதிக்கு மட்டுமல்லாமல் வடகிழக்கு ஆசியா மற்றும் ஒட்டுமொத்த உலக அமைதிக்கு அச்சுறுத்தலாகும் நிலைக்கு சென்றுள்ளது," என தெரிவித்ததாக, தென்கொரிய செய்தி முகமையான யோன்ஹாப் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் ஆயுத உதவி மூலம் தென்கொரியா தன் பலத்தைக் காட்டும் நடவடிக்கையாக இது அமைந்துள்ளது என, ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

கடந்த சில வாரங்களில் அமெரிக்கா மற்றும் தென்கொரியாவிடமிருந்துவரும் இரண்டாவது பதிலடி இதுவாகும். கடந்த வாரம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஜப்பான் மற்றும் தென் கொரியாவுக்கு பயணம் மேற்கொண்டு விட்டு அமெரிக்கா திரும்பிய சில மணிநேரங்களில் வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணைகளை ஏவியிருந்த நிலையில், அதற்கு பதிலடியாக அமெரிக்கா, தென் கொரியா ஏவுகணைகளை ஏவியிருந்தன.

தென் கொரியாவின் முந்தைய அரசு நிர்வாகத்தில் இத்தகைய பதிலடிகள் அரிதானதாகவே இருந்தன.

கடந்த மே மாதம் தான் தென் கொரிய அதிபராக பதவியேற்ற யூன், வட கொரிய விவகாரத்தில் கடும் நிலைப்பாட்டை எடுப்பதாக உறுதிபூண்டுள்ளார்.

சமீப மாதங்களில் வடகொரியா டஜன் கணக்கில் ஏவுகணைகளை ஏவியுள்ளது. இதில் கடந்த ஐந்து ஆண்டுகளில் முதன்முறையாக ஏவப்பட்ட கண்டம்விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணையும் ஒன்றாகும்.

வடகொரியா பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் அணு ஆயுத சோதனைகளை நடத்துவதற்கு ஐ.நா தடை விதித்துள்ளது. மேலும், அதன் முந்தைய சோதனைகளுக்காக கடும் தடைகளையும் விதித்துள்ளது.