1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 1 ஏப்ரல் 2021 (16:55 IST)

மருமகளின் ஃபேஸ்புக் பக்கத்திலிருந்து நீக்கப்பட்ட டிரம்பின் வீடியோ

ஃபேஸ்புக் நிறுவனம், முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஒரு காணொளியை, அவரது மருமகள் லாரா டிரம்பின் ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்து நீக்கி இருக்கிறது.

ஃபேஸ்புக் நிறுவனம், கடந்த ஜனவரி 2021-ல் டிரம்பின் ஆதரவாளர்கள் அமெரிக்காவின் கேப்பிட்டல் கட்டட தாக்குதலில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் பக்கத்தை முடக்கியது நினைவுகூரத்தக்கது.

லாரா டிரம்ப், நியூ ஃபாக்ஸ் நிறுவனத்தில் செய்தி வழங்குபவர். பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக டொனால்ட் டிரம்பை நேர்காணல் செய்த காணொளியை அவர் ஃபேஸ்புக்கில் சமீபத்தில் பதிவிட்டார்.

இந்த நிலையில், ஃபேஸ்புக் நிறுவனம் டொனால்ட் டிரம்பின் காணொளியை நீக்கியது மற்றும் தன் கணக்கு தடை செய்யப்படுவது தொடர்பான எச்சரிக்கை மின்னஞ்சலையும் லாராவுக்கு அனுப்பியது. அதை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் லாரா டிரம்ப்.

"முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசுவது போன்ற காணொளியை, லாரா டிரம்பின் ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்து நீக்கியது தொடர்பாக உங்களைத் தொடர்பு கொள்கிறோம். டொனால்ட் டிரம்பின் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகள் மீது விதிக்கப்பட்டிருக்கும் தடையைத் தொடர்ந்து, டொனால்ட் டிரம்ப் சார்பாக பகிரப்படும் பதிவுகள் நீக்கப்படும். அதோடு பகிரப்படும் கணக்குகள் மீது கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்" என அந்த மின்னஞ்சலில் கூறப்பட்டுள்ளது.

லாரா, டொனால்ட் டிரம்பின் மகன் எரிக் டிரம்பை திருமணம் செய்துள்ளார். எனவே அவர் டொனால்ட் டிரம்பின் மருமகளாகிறார்.

லாரா டிரம்ப், 'தி ரைட் வியூ' என்கிற பெயரிலான தன் ஆன்லைன் நேர்காணலை, ரம்பிள் என்கிற காணொளி வலைதளத்தில் பதிவிட்டார். அந்த இணைப்பை அவரது ஃபேஸ்புக் பக்கத்திலும் பகிர்ந்து இருக்கிறார் லாரா.

கடந்த ஜனவரி 6ஆம் தேதி, அமெரிக்காவின் நாடாளுமன்றக் கட்டடம், டொனால்ட் டிரம்பின் ஆதரவாளர்களால் தாக்கப்பட்ட அடுத்த நாள், சர்ச்சையான விஷயங்களை மதிப்பீடு செய்ய அமைக்கப்பட்ட ஃபேஸ்புக்கின் புதிய மேற்பார்வை குழு, ஜனவரி 7ஆம் தேதி டிரம்பின் ஃபேஸ்புக் பக்கத்தை முடக்கியது.

"அதிபரை இந்த நேரத்தில் எங்கள் சேவையைப் பயன்படுத்த அனுமதிப்பது மிகவும் ஆபத்தானது" என டிரம்ப் மீது தடை விதித்ததைக் குறித்துக் கூறினார் ஃபேஸ்புக்கின் தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க்.

முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், ட்விட்டர் மற்றும் யூ டியூப் பக்கத்திலும் தடை செய்யப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.