1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 30 மார்ச் 2021 (13:36 IST)

தலைக் கவசம் அணியாத கர்ப்பிணியை 3 கி.மீ நடக்க வைத்த பெண் காவல் அதிகாரி

(இந்திய நாளிதழ்களிலும் அவற்றின் இணையதளங்களிலும் வெளியான முக்கிய செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.)

ஒடிஷாவின் பாரிபாதா மாவட்டத்தில் இரு சக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் சென்றதற்காக கர்பிணிப் பெண் ஒருவர் மூன்று கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளார் என்று தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமையன்று, உதாலா எனும் ஊரில் உள்ள மருத்துவமனைக்கு, 27 வயதாகும் குருபாரி எனும் கர்பிணிப் பெண் அவரது கணவருடன் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

அப்போது வாகனத்தை ஓட்டிய அவரது கணவர் பிக்ரம் புருலி தலைக்கவசம் அணிதிருந்தார். ஆனால், குருபாரி அணியவில்லை.

அவர்களை இடைமறித்த ரீனா பக்சால் எனும் பெண் காவல் அதிகாரி பிக்ரம் புருலி 500 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

தம்மிடம் பணம் இல்லாததால் இணையம் மூலம் அபராதத்தை செலுத்துவதாகக் கூறியுள்ளார் பிக்ரம். ஆனால், அதை ஏற்றுக்கொள்ள மறுத்த ரீனா, அவரைக் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லக் காவலர்களுக்கு ஆணையிட்டார்.

பிக்ரமை காவல் துறை வாகனத்தில் அவர்கள் பிக்ரம் புரூலியை அழைத்துச் சென்றனர். சாலையில் தனியே விடப்பட்ட குருபாரி மூன்று கிலோ மீட்டர் தூரம் நடந்தே காவல் நிலையம் சென்றுள்ளார்.

பின்னர் பிக்ரமின் குடும்பத்தினர் வந்து அபராதம் செலுத்தி அந்தத் தம்பதியை அழைத்துச் சென்றுள்ளனர்.

பிக்ரம் அளித்த புகாரின் அடிப்படையில் காவல் அதிகாரி ரீனா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

'சசிகலா முதல்வராவதை ஏற்று பன்னீர்செல்வம் கையெழுத்து போட்டார்'

இரட்டை இலை எம்ஜிஆர், ஜெயலலிதா சின்னம் என நம்ப வேண்டாம் என போடியில் நடந்த பிரசாரத்தில் அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் பேசினார் என்கிறது இந்து தமிழ் திசை செய்தி வெளியிட்டுள்ளது.

"ஜெயலலிதா பெயரிலோ, அவர் படத்தைக் கொடியில் வைத்தோ கட்சி தொடங்குவோம் என்று நாங்கள் நினைக்கவே இல்லை. இதற்குக் காரணம் ஓ.பன்னீர்செல்வம்தான். முதல்வராக சசிகலா இருக்கட்டும் என்று கையெழுத்துப் போட்டுவிட்டு, இரண்டு நாள் கழித்து தர்மயுத்தம் என்று தியானம் செய்தார். அவருக்குப் பல நாக்குகள் உள்ளன. அவை மாறி மாறிப் பேசும்," என்று தேனி மாவட்டம் போடியில் நடந்த தேர்தல் பரப்புரையில் தினகரன் பேசியுள்ளார்.

தற்போது தேர்தல் வந்ததும், அவருக்கு ஞானோதயம் வந்து, சசிகலா மீது மதிப்பு மரியாதை உண்டு என்று பேசி வருகிறார் என்று பன்னீர்செல்வம் மீது தினகரன் குற்றம்சாட்டினார்.

கேரளாவில் காங்கிரஸ் வென்றால் யார் முதலமைச்சர்?

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி சார்பில் யார் அடுத்த கேரள முதலமைச்சராக பொறுப்பேற்பார் என்பதைத் தேர்தல் முடிந்த பிறகு முடிவு செய்வோம் என்று அக்கட்சியின் மூத்த தலைவா் ஏ.கே. அந்தோனி கூறியுள்ளார் என்கிறது தினத்தந்தி செய்தி.

தேர்தல் அரசியலில் இருந்து நான் கடந்த 2004-ஆம் ஆண்டே விலகிவிட்டேன். எனது மாநிலங்களவை உறுப்பினா் பதவிக் காலம் அடுத்த ஆண்டு நிறைவடைகிறது. அத்துடன் நாடாளுமன்ற அரசியலில் இருந்தும் ஓய்வு பெற்றுவிடுவேன் என்று அந்தோனி தெரிவித்துள்ளார்.

கேரளத்தில் முதல்வர் பதவி தொடா்பாக யாருக்கும் எந்த உறுதியையும் கட்சித் தலைமை அளிக்கவில்லை. இடதுசாரி மற்றும் காங்கிரஸ் கூட்டணி மாறிமாறி ஆட்சிக்கு வருவது கேரளத்தில் பல ஆண்டுகளாகத் தொடா்ந்து வருகிறது. அந்த வகையில் இந்த முறை ஆட்சியைக் கைப்பற்றிவிட முடியும் என்ற நோக்கில் காங்கிரஸ் கூட்டணி உள்ளது.