1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 29 மார்ச் 2021 (14:06 IST)

புதையலுக்கு ஆசைப்பட்டு சுரங்கம் தோண்டியவர்கள் விஷவாயு தாக்கி பலி - தூத்துக்குடி அருகே சோகம்

பூமிக்கடியில் புதையல் கிடைக்கும் எனும் நம்பிக்கையில் சுரங்கம் தோண்டியவர்கள், நச்சுக் காற்று தாக்கி உயிரிழந்த துயர நிகழ்வு தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உள்ள திருவள்ளுவர் காலனியை சேர்ந்த முத்தையா என்பவரது வீட்டில் புதையல் எடுப்பதற்காக சுமார் 50 அடி ஆழத்துக்கு சுரங்கம் தோண்டிய போது, மூச்சுத் திணறல் ஏற்பட்டு இருவர் உயிரிழந்தனர். வேறு இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அடுத்த திருவள்ளுவர் காலனியை சேர்ந்தவர் முத்தையா. இவர் சிவவேலன், சிவமாலை என்கின்ற இரண்டு மகன்களுடன் ஒரே வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

முத்தையா வீட்டுக்கு பின்னால் உள்ள காலி இடத்தில் புதையல் இருப்பதாக சிலர் கூறியதை நம்பி கடந்த சில மாதங்களாக வெளியே யாருக்கும் தெரியாமல் வீட்டின் பின்புறம் சுமார் 50 அடி ஆழத்துக்கு குழி தோண்டி, அதிலிருந்து ஐந்து அடி நீளத்துக்கு சுரங்கம் தோண்டி வந்துள்ளனர்.

இந்நிலையில் ஞாயிற்றுகிழமை முத்தையா மகன் சிவமாலை, சிவவேலன் மற்றும் ஆழ்வார்திருநகரியை சேர்ந்த ரகுபதி, சாத்தான்குளத்தைச் சேர்ந்த நிர்மல் கணபதி ஆகிய நான்கு பேரும் சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அன்று மாலை சிவவேலனின் மனைவி ரூபா சுரங்கம் தோண்டுபவர்களுக்கு குடிக்க தண்ணீர் கொண்டு சென்றுள்ளார். அப்போது, சுரங்க வேலை செய்து கொண்டிருந்த நால்வரும் மயங்கிக் கிடந்துள்ளனர். அங்கு சென்ற ரூபாவுக்கும் லேசாக மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.

இதனால் அச்சம் அடைந்த ரூபா அக்கம் பக்கத்தினரிடம் தகவல் கொடுத்துள்ளார்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சாத்தான்குளம் துணை காவல் கண்காணிப்பாளர் காட்வின் ஜெகதீஷ்குமார் தலைமையிலான நாசரேத் காவல் நிலைய போலீசார், நாசரேத் தீயணைப்பு நிலைய அலுவலர் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று குழிக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி நான்கு பேரையும் மீட்டு ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் நிர்மல் கணபதி, ரகுபதி ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.

சிவமாலை, சிவவேலன் ஆகிய இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், நாசரேத் திருவள்ளுவர் காலணியில் உள்ள ஒரு வீட்டின் பின்புறம் புதையலுக்கு ஆசைப்பட்டு ராட்சத குழி ஒன்றைத் தோண்டியுள்ளனர்.

அந்தக் குழி 50 அடி ஆழத்தில் தோண்டப்பட்டதால் பூமிக்கு அடியில் இருந்த விஷ வாயு தாக்கியதில் இருவர் உயிரிழந்தனர். மேலும் இருவர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது சிகிச்சை பெற்று வரும் இருவரது உடல் நிலையில் முன்னேற்றம் உள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக வீட்டின் உரிமையாளர் முத்தையா மீது நாசரேத் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யபட்டுள்ளது. தொடர்ந்து முத்தையாவிடம் புதையல் இருப்பதாக கூறியவர் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

பொது மக்கள் இவ்வாறான வதந்திகளை நம்ப வேண்டாம், வீண் வதந்தி பரப்புவோர் மீது காவல்துறை சார்பில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் எச்சரித்தார்.