1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Modified: சனி, 14 ஜனவரி 2023 (07:13 IST)

வீர சிம்மா ரெட்டி விமர்சனம் - வாரிசு, துணிவுடன் திரைக்கு வந்த படம் எப்படி இருக்கிறது?

நடிகர்கள்: நந்தமூரி பாலகிருஷ்ணா, ஹனிரோஸ், ஸ்ருதிஹாசன், வரலட்சுமி சரத்குமார், துனியா விஜய், லால்; ஒளிப்பதிவு: ரிஷி பஞ்சாபி; இசை: எஸ். தமன்; இயக்கம்: கோபிச்சந்த் மாலினேனி.
 
லெஜன்ட், ரூலர், அகண்டா ஆகிய திரைப்படங்களுக்குப் பிறகு, பாலகிருஷ்ணாவின் திரைப்படங்களுக்கு தென்னிந்தியா முழுவதுமே ஒரு புதிய ரசிகர் வட்டாரம் உருவாகியிருக்கிறது.  குறிப்பாக, அவரது படங்களில் இடம் பெறும் ஆக்ஷன் காட்சிகளுக்கும் பஞ்ச் வசனங்களுக்கும் ரசிகர்கள் தங்கள் உற்சாகக் கூச்சல்களால் அரங்குகளை நிறைத்து வருகிறார்கள். இந்த நிலையில்தான், வழக்கம்போல அவர் இரு வேடங்களில் நடிக்கும் வீர சிம்மா ரெட்டி வெளியாகியிருக்கிறது.
இந்தப் படத்தின் கதை இதுதான்: துருக்கியில் உள்ள இஸ்தான்புல்லில் அம்மா மீனாட்சி (ஹனி ரோஸ்) உடன் வசித்து வருகிறார் ஜெய் சிம்மா ரெட்டி (நந்தமுரி பாலகிருஷ்ணா). அம்மா உணவகம் நடத்திவருகிறார். ஜெய் சிம்மா ரெட்டி கார் டீலர்ஷிப் செய்துவருகிறார். இந்த நிலையில், ஈஷா (ஸ்ருதி ஹாசன்) உடன் ஜெய் சிம்மாவுக்கு காதல் ஏற்படுகிறது. திருமணத்திற்கு இரு வீட்டினரும் சம்மதித்துவிட்டாலும், தனக்கு அப்பா இல்லையே என்று ஏங்குகிறார் ஜெய் சிம்மா.  இதைக் கேட்கும் தாய் மீனாட்சி ‘உனக்கு அப்பா இருக்கிறார். அவர் பேர் ‘வீர சிம்மா ரெட்டி’ என கூறுகிறார்.  யார் இந்த வீர சிம்மா ரெட்டி? அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? மீனாட்சி அவர் பிரிந்து சென்றது ஏன் என்பதுதான் இந்தப் படத்தின் மீதிக் கதை.
இந்தப் படத்திற்கு தற்போது ஊடகங்களில் விமர்சனங்கள் வெளியாகிவருகின்றன. பெரும்பாலான ஊடகங்கள் இந்தப் படத்தின் ஆக்ஷன் காட்சிகளைப் புகழ்ந்துள்ளன. "முழுக்க முழுக்க ‘மாஸ்’ தருணங்களைக் கொண்டு பாலகிருஷ்ணா ரசிகர்களுக்காகவே உருவாக்கப்பட்ட படம் இது என்கிறது இந்து தமிழ் திசையின் விமர்சனம்.
 
"முதல் பாதியை ரசிகர்களுக்கான ‘மாஸ்’ பீஸாகவும், இரண்டாம் பாதியை குடும்பங்களின் சென்டிமென்ட்டிற்காகவும் தனியே பிரித்து இயக்கியிருக்கிறார் இயக்குநர் கோபிசந்த் மாலினேனி. இடைவேளைக்கு முன்பே 5 சண்டைக்காட்சிகள், பஞ்ச் வசனங்கள், இரண்டு பாடல்களால் நிரம்பியிருக்கிறது. ஸ்ருதி ஹாசனுக்கும், பாலகிருஷ்ணாவுக்கும் காதல் வர சொல்லும் காரணம், ஆந்திராவிலிருந்து இஸ்தான்புல்லுக்கு சென்று அவர்கள் வசிப்பதற்கான பின்புலம் இல்லாமை போன்ற தர்க்கப் பிழைகள் தலைவிரித்து ஆடினாலும் அதையெல்லாம் யோசிக்க நேரம் கொடுக்காமல் சண்டைக் காட்சிகளால் அடுத்தடுத்து நகரும் முதல் பாதியை ரசிகர்களின் விசில் சத்தத்தின் உதவியுடன் கடந்துவிட முடிகிறது.
 
ஆனால், இரண்டாம் பாதியில் சண்டைக் காட்சிகளின் காலி இடங்களை அண்ணன் - தங்கை சென்டிமென்ட் ஆக்கிரமித்துகொள்வதால் முதல் பாதியில் கிடைத்த ரசிகர்களின் உதவி இரண்டாம் பாதியில் நமக்கு இல்லாமல் போகிறது. கனெக்ட் ஆகாத பழைய சென்டிமென்ட் காட்சிகள் திரையில் வறட்சியை கூட்டுகின்றன.
 
‘நாட் ஒன்லி ஃபேமஸ்; பட் ஆல்சோ டேன்ஜரஸ்’ (Not only famous but also dangerous), ‘பயம்ங்குறது என் பயோடேட்டாவுலேயே இல்லடா’ போன்ற பஞ்ச வசனங்களை பாலகிருஷ்ணா உச்சரிக்கும்போது ரசிகர்கள் ‘ஜெய் பாலையா’ என குதூகலிக்கின்றனர். கூலிங் க்ளாஸை ஸ்டைலாக பாக்கெட்டுகள் தூக்கி போடுவது, சிகரெட்டை வாயில் கேட்ச் செய்வது, கம்பீரமான அந்த நடை, ஆக்ரோஷமான பஞ்ச் வசனங்கள், எதிரிகளை அடித்து ஹேங்கரில் மாட்டிவைப்பது, ஒவ்வொரு முறையும் ஒரு ‘மாஸ்’ பிஜிஎம்முடன் கூடிய இன்ட்ரோ என திரை முழுக்க நிறைந்திருக்கிறார் பாலகிருஷ்ணா.
 
இடையே காலால் உதைத்து காரை பின்னோக்கி நகர்த்துவது, நாற்காலியில் அமர்ந்து கொண்டு 40 பேரை காலி செய்வது, இரண்டு இரண்டு, மூன்று மூன்று பேராக அடித்து பறக்கவிட்டு, கசாப்புக் கடையில் கறியை மாட்டிவைப்பது போல அடியாட்களை மாட்டிவைப்பது, உள்துறை அமைச்சரின் முன்பாக அமர்ந்து ‘‘உன் பாஷைல G.O-ணா Government order; அதே என் பாஷைல G.Oணா ‘Gods order” என்பது போன்ற காட்சிகள் திரைக்கதையில் மாற்றங்களை கோருகின்றன." என்கிறது இந்து தமிழ் திசை.
 
 வீர சிம்மா ரெட்டியைப் பொறுத்தவரை அது முழுக்க முழுக்க ஒரு பாலகிருஷ்ணா திரைப்படமாக வெளிவந்துள்ளது என்கிறது டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ்.
 
 "டைட்டில் எழுதப்பட்டிருக்கும் விதத்தைப் பார்த்தாலே, அந்தப் பாத்திரம் எப்படியிருக்கும் என்பதை எளிதில் புரிந்துகொள்ளலாம்.  எல்லா சண்டைகளும் புவியீர்ப்பு விசைக்கு அப்பாற்பட்டவை.  பாலகிருஷ்ணா ஒரு அறைக்குள் வருகிறார் என்றால் சிறிய அளவில் ஒரு பூகம்பமே வந்துபோகும். நீங்கள் பல ஆயிரம் தடவை பார்த்த காட்சியாக இருந்தால்கூட, அந்தக் காட்சியில் பாலகிருஷ்ணா நடிக்கிறார் என்றால், அது எப்படியிருக்கும் என்ற கவலையையே மறந்துவிடலாம். திரையைவிட்டு உங்களால் கண்களை அகற்ற முடியாது.
 ஆனால், வீர சிம்மா ரெட்டியிலிருந்து படம் ஜெய் சிம்மா ரெட்டி, ஈஷா, மீனாட்சி பாத்திரங்களைக் காட்டும்போது பிரச்சனையாக இருக்கிறது. பாடல்கள் எல்லாம் சம்பந்தா சம்பந்தமில்லாமல் நுழைக்கப்பட்டிருக்கின்றன. பாடல்கள் வந்தாலே, எப்போதுதான் முடியும் என்ற எண்ணம் ஏற்படுகிறது. பல தருணங்களில் ஒரே வசனம்கூட திரும்பத் திரும்ப வருகிறது. தெரிந்த தகவல்களையே திரும்பவும் சொல்லி பொறுமையைச் சோதிக்கிறார்கள். இது போன்ற படங்களில் லாஜிக்கை எதிர்பார்ப்பது தேவையில்லைதான். ஆனால், இந்தப் படத்தில் வீரசிம்மா ரெட்டி பல விஷயங்களை அணுகும் விதம் தலையைச் சொறியவைக்கிறது. படத்தின் நீளமும் பெரிய பலவீனமாக இருக்கிறது. 
 
வீரசிம்மா ரெட்டி முழுக்க முழுக்க ஒரு பாலகிருஷ்ணா திரைப்படம். ஆனால், இந்தப் படத்தில் வீராவாக ஜெயிக்கும் பாலகிருஷ்ணா, ஜெய் ஆக தோற்றிருக்கிறார். இந்தப் படத்தில் வரும் பல வசனங்கள் குடும்பத்துடன் பார்க்கத்தக்கவையல்ல. ஆனால், நீங்கள் பாலகிருஷ்ணா ரசிகராக இருந்தால் இந்தப் படம் உங்களுக்கானதுதான்" என்கிறது டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழின் விமர்சனம்.
 
 சினிமாவில் பல முறை பார்த்துப் பார்த்து சலித்த கதை சில இடங்களில் சரியாக அமைந்திருந்தாலும், பல தருணங்களில் கைவிட்டிருக்கிறது என்கிறது இந்தியா டுடேவின் விமர்சனம்.
 
 "அண்ணன் - தங்கை சென்டிமென்ட்டுன் இரண்டு ஹீரோக்களை வைத்து கதை என்றால், அம்மாதிரி படங்களுக்கே என்று பல காட்சிகள் சினிமாவில் உண்டு. அந்தக் காட்சிகள் அனைத்தும், அதைவிட அதிகமாகவும் வீர சிம்மா ரெட்டியில் உள்ளன. ஆனால், அதுதான் இந்தப் படத்தை ஜாலியான ஒரு படமாக்குகிறது. பாலகிருஷ்ணா பல படங்களில் நடித்த காட்சிகளே திரும்பவும் இந்தப் படத்தில் வருகின்றன என்றாலும், திரையை அட்டகாசமாக ஆக்கிரமிக்கிறார் அவர்.
 
நம்ப முடியாத சண்டைக் காட்சிகளாக இருக்கட்டும் அல்லது அவரது பஞ்ச் வசனங்களாக இருக்கட்டும், வீர சிம்மா ரெட்டியில் ஏகப்பட்ட காட்சிகள் அப்படி இருக்கின்றன. பாலய்யா படங்களுக்கே உரிய சில சண்டைக் காட்சிகள் இந்தப் படத்திலும் உண்டு. அவற்றை பார்க்கவே அட்டகாசமாக இருக்கின்றன. இந்தப் படத்தில் பாலகிருஷ்ணா நடித்துள்ள இரண்டு பாத்திரங்களில் வீர சிம்மா ரெட்டியின் பாத்திரம் சிறப்பாக இருக்கிறது.
 
இந்தப் படத்தில் உள்ள சில அரசியல் வசனங்கள் அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளிக்கக்கூடும். என்டிஆர் பற்றியும் அவரது பரம்பரை பற்றியும் பேசும் பாலகிருஷ்ணா தன்னைத் தானே புகழ்ந்துகொள்ளவும் செய்கிறார்" என்கிறது இந்தியா டுடேவின் விமர்சனம்.
 
 ஒட்டுமொத்தமாக இந்தப் படத்திற்கு ஊடகங்களில் வெளிவந்துள்ள விமர்சனங்களைப் பார்க்கும்போது, பாலகிருஷ்ணா ரசிகர்கள் ரசிக்கக்கூடிய, வழக்கமான ஆக்ஷன் - மசாலா திரைப்படம் எனத் தோன்றுகிறது. பெரும்பாலான ஊடங்கள் இந்தப் படத்திற்கு, ஐந்திற்கு இரண்டரை நட்சத்திரங்களைத் தந்திருக்கின்றன.