திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: சனி, 20 ஜூலை 2019 (21:28 IST)

சௌதிக்கு படை அனுப்பும் அமெரிக்கா: இரானுக்கு பதிலடி

அதிகரித்து வரும் அச்சுறுத்தலில் இருந்து அமெரிக்காவின் நலன்களை பாதுகாத்து கொள்வதற்காக அமெரிக்க படைப்பிரிவுகள் சௌதி அரேபியாவுக்கு அனுப்பப்பட்டு வருவதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.
வளைகுடா கப்பல் போக்குவரத்து பாதைகளில் பாதுகாப்பு தொடர்பாக இரானோடு அதிகரித்து வருகின்ற பதற்றங்களின் மத்தியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 
பிரதேச பாதுகாப்பையும், நிரந்தரத்தையும் உறுதிப்படுத்தி கொள்வதற்கான இந்த நடவடிக்கைக்கு சல்மான் அரசர் அனுமதி வழங்கியுள்ளதை சௌதி அரேபியா உறுதி செய்துள்ளது.
 
இராக் போர் முடிந்த பின்னர் அமெரிக்க படைகள் வெளியேறிய 2003ம் ஆண்டிலிருந்து அமெரிக்க படைப்பிரிவுகள் சௌதி அரேபியாவில் கால்பதிக்கவில்லை.
 
இராக் குவைத் நாட்டை ஆக்கிரமித்தபோது, 1991ம் ஆண்டு 'பாலைவன புயல்' நடவடிக்கையோடு சௌதி அரேபியாவில் அமெரிக்க படைகள் தங்க தொடங்கியது.
 
 
பிபிசியின் வட அமெரிக்க செய்தியாளர் பீட்டர் பௌவ்ஸ் இது பற்றி தெரிவிக்கையில், "சௌதி அரேபியாவிலுள்ள பிரின்ஸ் சுல்தான் விமான தளத்தில் 500 சிப்பாய்களை அனுப்பி, பேட்ரியாட் வான்வழி தாக்குதல் தடுப்பு அமைப்பை அமெரிக்கா நிறுவ இருப்பதாக தெரிகிறது" என்கிறார்.
 
இரான் செறிவூட்டிய யுரேனியம் அதிகம் தயாரிப்பதால் என்ன பிரச்சனை?
 
பிரிட்டன் எண்ணெய் கப்பலை கைப்பற்றிய இரான்: வளைகுடாவில் அதிகரிக்கும் பதற்றம்
"அமெரிக்க படைப்பிரிவை சௌதி அரேபியாவுக்கு வழங்குவது, கூடுதல் தடுப்பு நடவடிக்கையாக இருக்கும். அந்த பகுதியில் இருந்து எழுகின்ற அச்சுறுத்தல்களில் எமது படைப்பிரிவுகளின் மற்றும் பிரதேச நலன்களை தற்காத்து கொள்ளும் திறன்களை உறுதி செய்வதாகவும் இது அமையும் என்று அமெரிக்க தளபதி ஒருவர் தெரிவித்துள்ளார்.
 
2015 அணுசக்தி ஒப்பந்தம்
 
2015-ல் இரானுடன் அமெரிக்கா, சீனா, ரஷ்யா, ஜெர்மனி, ஃபிரான்ஸ் மற்றும் பிரிட்டன் ஆகியவை ஒரு ஒப்பந்தத்தை எட்டின. இரான் மீதான தடைகளை நீக்குவதற்கு கைமாறாக இரான் தனது அணுசக்தி திட்டத்தில் சில குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே அந்த ஒப்பந்தம்.
 
தங்களுக்கு சாதகமாக இல்லை என்று கூறி, டொனால்டு டிரம்ப் அதிபரான பின், இரான் அணு ஒப்பந்தத்தில் இருந்து 2018ஆம் ஆண்டு அமெரிக்கா விலகியது. அதனை தொடர்ந்து இரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடைகளை விதித்தது அமெரிக்கா.
 
 
இரான் வான்பரப்பின் இறையாண்மையை மீறிவிட்டதாக கூறி, கடந்த மாதம் ஹோர்முஸ் நீரிணையின் மேல் பறந்த அமெரிக்க கண்காணிப்பு ஆளில்லா விமானத்தை இரான் சுட்டு வீழ்த்தியது.
 
ஆனால், இந்த ஆளில்லா விமானம் சுடப்பட்டபோது, சர்வதேச கடல் பரப்பில்தான் இருந்தது என்று அமெரிக்கா கூறியது. இரானின் இந்த நடவடிக்கை கோபமூட்டும் செயல் என்று அமெரிக்கா கண்டித்திருந்தது.
 
12 பேருடன் பனாமா நாட்டு கொடியை தாங்கி பயணம் மேற்கொண்ட எண்ணெய் கப்பலை விடுவிக்க வேண்டுமெனவும் அமெரிக்கா கேட்டு கொண்டுள்ளது.
 
கடற்படை ரோந்து நேரத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரானிய படையால் தடுக்கப்பட்ட இந்த எண்ணெய் கப்பல் எரிபொருள் கடத்தியதாக இரான் தெரிவித்துள்ளது.
 
மிகவும் நெருங்கி வந்த இரானின் ஆளில்லா விமானத்தை அமெரிக்க போர்க்கப்பல் சுட்டு வீழ்த்தியதாக வியாழக்கிழமை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார்.
 
ஆனால், தங்களின் ஆளில்லா விமானத்தை இழந்ததை இரான் மறுத்துள்ளது.