செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Modified: சனி, 11 பிப்ரவரி 2023 (10:38 IST)

கீழடி அகழாய்வு: குதிரை எலும்புகளும் நெற்பயிர் எச்சங்களும் கூறும் தமிழர் வரலாறு #Exclusive

கீழடியில் குதிரையின் எலும்புகள் கிடைத்திருப்பது தென்னிந்திய தொல்லியல் ஆய்வில் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. சங்கப் பாடலான பட்டினப்பாலையில் குதிரை குறிப்பிடப்பட்டிருந்தாலும், அதன் எச்சங்கள் முதல் முறையாக கீழடியில்தான் கிடைக்கின்றன. கீழடி அகழாய்வு அறிக்கை குறித்த தொடர் கட்டுரையின் இரண்டாம் பாகம் இது.
 
தற்போது கீழடி தொல்லியல் தளம் உள்ள இடத்தில் ஒரு காலத்தில் வைகை நதி ஓடியிருக்க வேண்டும். பிறகு நதி தன் பாதையை மாற்றிக் கொண்டுவிட்ட நிலையில், அங்கிருந்த வண்டலின் காரணமாக செறிவுமிக்க விளைநிலமாக கீழடி மாறியது. (தற்போது வைகை கீழடியிலிருந்து வடக்கில் சுமார் 2 கி.மீ. தூரத்தில் உள்ளது).
 
இங்கு கிடைத்த உயிரியல் எச்சங்களை ஆய்வுசெய்தபோது, அதில் குறிப்பிடத்தக்க அளவில் நெற்பயிரின் எச்சங்களும் உமியும் கிடைத்திருப்பதை வைத்துப் பார்க்கும்போது, அங்கு பெரிய அளவில் நெற்பயிர் விளைவிக்கப்பட்டிருப்பது தெரிகிறது.
இங்கு தொடர்ந்து விளைச்சல் அதிகரித்தது. குறிப்பாக நெற்பயிரின் விளைச்சல் தொடர்ந்து அதிகரித்ததன் காரணமாக இந்தப் பகுதியில் வர்த்தகம் அதிகரிக்க ஆரம்பித்தது. இதனால் ஏற்பட்ட உபரியால், உள்நாட்டு - வெளிநாட்டு வணிகமும் வர்த்தகமும் நடக்க ஆரம்பித்து. மெல்ல மெல்ல கீழடி ஒரு நகர்ப்புறமாக மாற ஆரம்பித்தது. இதனால், வளர்ச்சி அதிகரிக்க இந்தப் பகுதி ஒரு நகர்ப்புற மையமாகவே மாற ஆரம்பித்தது.
 
கீழடியில் கிடைத்த விலங்குகளின் எச்சங்கள் புனேவில் உள்ள டெக்கான் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு ஆராயப்பட்டன. அதில் கிடைத்த முடிவுகளின்படி, பல்வேறு வகையிலான விலங்குகள் கீழடி பகுதியில் வளர்க்கப்பட்டுள்ளன அல்லது வாழ்ந்துள்ளன. பசு, காளை, எருமை, ஆடு, பன்றி, நாய் போன்ற வீட்டு விலங்குகளும் நீலான் மான் (Nilgai), மறிமான் (Antelope), புள்ளிமான் போன்ற மான் இனங்களும் இங்கே இருந்துள்ளன.
 
விலங்குகளின் எலும்புகள்
 
கீழடி பகுதியில் பெரிய அளவில் விலங்குகளின் எலும்புகள் கிடைத்ததை வைத்துப் பார்த்தால், கீழடியின் பொருளாதாரத்தில் அவை முக்கியப் பங்கை வகித்திருக்கக்கூடும். எருமை, ஆடு, செம்மறியாடு ஆகியவையே கீழடி மக்களின் உணவுகளில் முக்கியப் பங்கு வகித்தன. அவற்றோடு ஒப்பிட்டால், உணவில் பன்றியின் பங்கு குறைவாகவே இருந்தது.
 
வீடுகளில் இந்த விலங்குகளை வளர்த்ததுபோக, கொம்புகள், தோல் போன்ற பொருட்களுக்காக மிருகங்களை வேட்டையாடுவதும் கீழடியில் நடந்திருக்கிறது. காட்டு மாடுகள், காட்டெருமைகள் போன்றவை வேட்டையாடப்பட்டிருக்கின்றன. நாய்கள் செல்லப் பிராணிகளாகவோ, பாதுகாப்புக்காகவோ வளர்க்கப்பட்டிருக்கக்கூடும்.
 
ஆனால், கீழடியில் கிடைத்த விலங்கு ஆதாரங்களிலேயே மிகவும் கவனிக்கத்தக்கது குதிரை பற்றியதுதான். கீழடியில் இருந்த மக்கள் குதிரைகளை வளர்த்ததற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பது தொல்லியல்ரீதியில் மிக முக்கியமானது.
 
"நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்,
 
காலின் வந்த கருங்கறி மூடையும்,
 
வடமலைப் பிறந்த மணியும், பொன்னும்,
 
குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்" என்கிறது சங்க காலப் பாடலான பட்டினப்பாலை.
 
அதாவது, "கடல் மூலம் கொணடுவரப்பட்ட வேகமாகச் செல்லக்கூடிய நிமிர்ந்த குதிரைகள், சரக்கு வண்டிகளில் கொண்டுவரப்பட்ட மிளகு மூட்டைகளும் வடமலையில் இருந்து வந்த தங்கமும் மேற்கு மலைகளில் இருந்து வந்த சந்தனமும் அகிலும்" என்பது இந்த வரிகளின் அர்த்தம்.
 
ஆனால், தமிழ்நாட்டில் மட்டுமல்ல, தென்னிந்தியாவிலேயே தொல்லியல் தளங்களில் குதிரைகள் வளர்க்கப்பட்டதற்கான ஆதாரங்கள் மிகக் குறைவாகவே கிடைத்திருக்கின்றன. (ஆந்திர பிரதேசத்தில் உள்ள வரலாற்று ஆரம்ப கால தொல்லியல் தளமான கொட்டிப்ரோலுவில் நடந்த தொல்லியல் ஆய்வில் சமீபத்தில் குதிரை இருந்ததற்கான சான்றுகள் கிடைத்திருக்கின்றன.)
 
இந்தப் பின்னணியில் பார்க்கும்போது, குதிரைகள் சங்க காலப் பாடலான பட்டினப்பாலையில் சொல்லப்படுவதைப்போல, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டிருக்கக்கூடும்.
முயல் மற்றும் பறவைகளின் எலும்புகளும் கிடைத்திருக்கின்றன. ஆனால், மீனின் எலும்புகள் ஏதும் கிடைக்கவில்லை. நன்னீர் சங்குகள் கிடைத்திருக்கின்றன. இப்போதைப் போலவே அப்போதும் நத்தைகள் உணவாக இருந்திருக்கக்கூடும்.
 
கீழடி பொருளாதாரத்தில் கால்நடைகளின் பங்கு
 
ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, கீழடியின் பொருளாதாரத்தில் கால்நடைகளுக்கு மிகவும் முக்கியமான பங்கு இருப்பது தெரிய வருகிறது. இது தொடர்பாக கூடுதல் ஆய்வு அங்கு நடத்தப்பட வேண்டும் என்கிறார் அமர்நாத் ராமகிருஷ்ணா.
 
இந்த இரண்டு அகழாய்வுகளிலும் சேர்த்து மொத்தமாக 2,447 பானை ஓட்டு கிறுக்கல்கள் கிடைத்துள்ளன. பல தமிழ் பிராமி எழுத்துகளும் கிடைத்துள்ளன. 'திசன்' போன்ற பிராகிருத வார்த்தைகளும் கிடைத்துள்ளன.
 
"ஆனால், கீழடியில் கிடைத்த பிராகிருத வார்த்தைகள் இலங்கையின் தாக்கத்தில் வந்தவை. அதேபோல, இங்குள்ள தமிழ் பிராமி அல்லது தமிழி எழுத்து, அசோக பிராமியின் தாக்கத்தைக் கொண்டதல்ல. மாறாக இலங்கையில் கிடைத்த பிராமி எழுத்துகளோடு ஒத்துப்போகக்கூடியவை.
 
எடுத்துக்காட்டாக, இங்கு கிடைத்த 'இ', 'எ' பிராமி எழுத்துகளுக்கும் அசோக பிராமிக்கும் வித்தியாசம் உண்டு. அவை இலங்கையில் கிடைக்கும் பிராமி எழுத்துகளுடன் நெருக்கமாக உள்ளன. அதேபோல, 'm' என்ற ஒலிக்குறிப்பைக் கொண்ட அசோக பிராமி எழுத்து பானை ஓடுகளில் இதுவரை கிடைத்ததில்லை," என்கிறார் அமர்நாத் ராமகிருஷ்ணா
 
இந்திய தொல்லியல் துறை நடத்திய இரண்டு அகழாய்வுகளிலும் 88 கரிம பொருட்கள் கிடைத்தன. இவற்றில் 18 கரிமப் பொருட்கள் ஃப்ளோரிடாவில் உள்ள பீட்டா அனலிடிகள் லெபோரட்டரியில் ஏஎம்எஸ் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. 5 கரிமப் பொருட்கள் புது டெல்லியில் உள்ள இன்டர் யுனிவர்சிடி அக்சலரேட்டர் சென்டரில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
 
இங்கு கிடைத்த பெரும் எண்ணிக்கையிலானை ஓடுகளை தெர்மோலூமினசென்ஸ் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்றும் இங்கு கிடைத்த காசுகளைத் தவிர பிற உலோகப் பொருட்களும் அவற்றின் உலோகத் தன்மை குறித்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் அமர்நாத் சுட்டிக்காட்டுகிறார்.
இந்த இரண்டு அகழாய்வுகளில் கிடைத்த முடிவுகளை வைத்துப் பார்க்கும்போது, தமிழ்நாட்டின் ஆரம்பகால வரலாற்றையும் சங்க காலத்தையும் மேலும் அறிந்துகொள்ள கீழடி மிக மிக முக்கியமான தொல்லியல் தளமாக இருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள முடியுமென அமர்நாத் ராமகிருஷ்ணா கூறியிருக்கிறார்.
 
தொடர் ஆய்வுகளுக்கான தேவை
 
வைகை நதிக் கரையில் அமைந்த ஒரு நகர நாகரீகத்தின் ஆரம்பக்கட்டத் தகவல்களை மட்டுமே இந்தத் தொல்லியல் ஆய்வு முடிவுகள் அளித்திருக்கின்றன என்றும் அந்தத் தொல்லியல் தளத்தில் மேலும் பல ஆய்வுகளைச் செய்ய வேண்டுமென்றும் அவர் கூறியிருக்கிறார்.
 
பெருங்கற்கால வாழிடங்களைப் பற்றி அறிந்துகொள்ளத் தேவையான மிகப்பெரிய ஆய்வுகள் ஏதும் தென்னிந்தியப் பகுதியில் பெரிய அளவில் செய்யப்பட்டதில்லை. மாறாக, இங்குள்ள பெருங்கற்காலப் பகுதிகள் அனைத்தும் இரும்புக் காலத்தோடு தொடர்புபடுத்தி முடிக்கப்பட்டுவிடுகின்றன. அதற்கு அருகில் உள்ள வாழிடப் பகுதிகள், அவற்றில் வாழ்ந்த மக்கள் ஆகியோர் குறித்து தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதில்லை.
 
ஒரு பெருங்கற்காலத் தலமும் அதை ஒட்டிய வாழிடத்தலமும் கண்டறியப்படும்போது, எப்படித் தொடர் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்பதற்கு தற்போது கீழடியில் செய்யப்பட்டுள்ள ஆய்வுகளை சான்றாகக் கொண்டு செயல்படலாம்.
 
அப்படிச் செய்யும்போது தமிழ்நாட்டில் பெருங்கற்காலப் பண்பாடு எப்படி வளர்ந்தது, தென்னிந்தியாவில் அதை ஒட்டிய பண்பாடுகள் தொடர்ந்து வளர்ச்சியடைந்தன என்பதைப் புரிந்துகொள்ள முடியும் என்கிறார் அமர்நாத் ராமகிருஷ்ணா.
 
ஒட்டுமொத்தமாக இந்த ஆய்வின் முடிவுகளை எப்படிப் புரிந்துகொள்ளலாம்?
 
பெருங்கற்காலப் பண்பாடு என்பது தமிழ்நாட்டில் சங்க காலம் எப்படி இருந்தது என்பதைச் சுட்டிக்காட்டுவதாகச் சொல்லலாம். சங்க கால நகர நாகரீகம் எப்படி இருந்தது என்பதை மேலும் அறிய, கீழடியில் விரிவான ஆய்வுகளைச் செய்ய வேண்டும்.
 
வேறு வார்த்தைகளில் சொல்வதாக இருந்தால், சங்க காலத்தில் தமிழ்நாட்டின் நகர வாழ்க்கை எப்படியிருந்தது என்பதை சங்கப் பாடல்கள் விரிவாக உரைக்கின்றன. கீழடியில் கிடைத்த சில சான்றுகள், இந்த இலக்கிய ஆதாரங்களுக்கான தொல்லியல் ஆதாரங்களின் மூலம் சிறிய அளவிலாவது உறுதிப்படுத்துகின்றன. ஆனால், மேலும் ஆய்வுகள் செய்யப்பட வேண்டும்.