வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 9 பிப்ரவரி 2023 (14:59 IST)

துளசிதாசர் ராம காவியம் வட இந்தியாவில் திடீரென எதிர்க்கப்படுவதும், கொளுத்தப்படுவதும் ஏன்?

Ram Charith Manas
ராமாயணம் போல இந்துக் கடவுளான ராமரின் கதையைப் பேசும் 16-ம் நூற்றாண்டு காவியம் ஒன்று இந்திய அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

துளசிதாசர் அவதி மொழியில் எழுதிய இந்தக் காவியத்தின் சில வரிகள் சாதிரீதியாக இழிவுபடுத்தும் வரிகளைக் கொண்டிருப்பதாகவும், அவற்றை நீக்கவேண்டும் என்றும் குரல்கள் வட இந்திய அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளன. இந்த நூலின் பிரதியை கொளுத்தியதாக சிலரை உத்தரப்பிரதேச அரசு தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்துள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளன.

இது குறித்த கட்டுரை:

உலகின் மிகச்சிறந்த இலக்கியங்களில் ஒன்றாக ராம்சரிதமானஸை மொழியியலாளர்கள் பலரும் குறிப்பிடுகின்றனர். இந்த ஆழமான தத்துவப் படைப்பு இந்துக்களுக்கு பைபிள் போன்றது என்கிறார் புகழ் பெற்ற எழுத்தாளரான பவன் வர்மா.

2,500 ஆண்டுகளுக்கு முன்பு வால்மீகியால் எழுதப்பட்ட சமஸ்கிருத காவியமான ராமாயணத்தை கவிதை வடிவில் துளசிதாசர் இயற்றியுள்ளார். இந்தியை மிகவும் ஒத்த பேச்சு வழக்கான அவதி மொழியில் துளசிதாசர் இதனை இயற்றியதாக நம்பப்படுகிறது. இதுவே ராமரின் கதை வெகுஜன மக்களை சென்றடையக் காரணம் என்று கூறப்படுகிறது.
அயோத்தியின் பட்டத்து இளவரசனான ராமன், தீய சக்தியான ராவணனை வென்றதை சித்தரிக்கும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் தசரா விழா இந்தியாவின் பல மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது. ராமர் பல கோடி மக்களால் கடவுளாக வணங்கப்படுகிறார்.

ஆனால், இந்திய சாதிய கட்டமைப்பில் அடி மட்டத்தில் உள்ள பெண்கள், தாழ்த்தப்பட்டோர் ஆகியோரை இழிவுபடுத்தும் வகையில் இந்த காவியம் இருப்பதாகக் கூறி அரசியல் மட்டத்தில் கடந்த சில வாரங்களாக விவாதம் எழுந்துள்ளது.

600 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட துளசிதாசரின் காவியம் விமர்சிக்கப்படுவது இதுவே முதல் முறை அல்ல. ஆதரவாளர்கள் - எதிர்ப்பாளர்களின் அளவுதான் இம்முறை அதனை வேறுபடுத்துகிறது. இன்னும் ஓராண்டில் பொதுத் தேர்தல் வரவுள்ள நிலையில், சாதி அடிப்படையில் மக்களை அணி திரட்ட புத்தகத்தின் சர்ச்சைக்குரிய பகுதியைப் பயன்படுத்துவதாக இரு தரப்பு அரசியல்வாதிகளும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டுகின்றனர்.

நூலை கொளுத்தியதற்காக பாய்ந்த தேசிய பாதுகாப்பு சட்டம்

ஜனவரி முதல் நீடிக்கும் போராட்டங்களில் புத்தகத்தின் சில பகுதிகளை போராட்டக்காரர்கள் எரித்துள்ளனர். அதற்கு எதிராக, ராம்சரிதமானசை விமர்சிப்போரை கைது செய்யக் கோரியும் போராட்டங்கள் நடந்தன.

புனித நூலை இழிவுபடுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், அவர்களில் 2 பேருக்கு எதிராக தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வார இறுதியில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஜனவரி மாதம் வட மாநிலமான பீகாரில் ஒரு அமைச்சர் இந்தப் புத்தகம் "சமூகத்தில் வெறுப்பை பரப்புகிறது" என்று கூறியதால் பிரச்சனை தொடங்கியது. பல்கலைக்கழக மாணவர்களின் கூட்டத்தில், கல்வி அமைச்சர் சந்திரசேகர் (ஒரு பெயரை மட்டுமே பயன்படுத்துகிறார்) தனது கருத்தை நிரூபிக்க ராம்சரிதமானஸின் சில வரிகளை வாசித்தார்.

கல்வி பற்றி நூல் கூறுவது என்ன?

"கீழ் சாதி மக்கள் கல்வி கற்றால், பாம்பு குடித்த பாலைப் போல விஷமாகிவிடுவார்கள் என்று கூறுகிறது.

சில நாட்களுக்குப் பிறகு, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த முக்கிய தலைவரும் உத்தரபிரதேச மாநிலத்தில் செல்வக்குப் பெற்ற சமாஜ்வாதி கட்சியின் உறுப்பினருமான சுவாமி பிரசாத் மௌரியாவும் இதேபோன்ற உணர்வுகளை வெளிப்படுத்தினார்.

ராம்சரிதமானஸின் சில வசனங்கள் "அபாண்டமானவை" என்பதால் அவற்றை புத்தகத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று அவர் கோரினார்.

"மதத்தின் பெயரால் துஷ்பிரயோகம் செய்வது ஏன்? நான் எல்லா மதங்களையும் மதிக்கிறேன். ஆனால் மதத்தின் பெயரால் ஒரு சமூகம் அல்லது ஜாதி இழிவுபடுத்தப்பட்டால் அது ஆட்சேபனைக்குரியது" என்று அவர் கூறியதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழ் குறிப்பிட்டது.

'சாதி ரீதியாக இழிவுபடுத்தும் வரிகள்'

புதன்கிழமையன்று, குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமருக்கு எழுதிய கடிதத்தை அவர் ட்வீட் செய்தார், "பெண்கள், பழங்குடியினர், தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களை இழிவுபடுத்தும் மற்றும் அவமதிக்கும் ஆட்சேபனைக்குரிய கருத்துகளை அகற்ற வேண்டும்" என்று அவர் கேட்டுக் கொண்டார்.

பிகாரை ஆளும் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியைச் சேர்ந்த சந்திரசேகர் மற்றும் மௌரியா ஆகியோரின் கருத்துகளை, மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா உள்ளிட்ட இந்து தேசியவாத குழுக்கள் எதிர்ப்பதால் அரசியலில் புதிய புயல் கிளம்பியுள்ளது.

பாஜக அரசியல்வாதி நந்த்கிஷோர் குர்ஜார், மவுரியாவுக்கு மரண தண்டனை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்திற்கு கடிதம் எழுதியதாகக் கூறினார். கோவில் நகரமான அயோத்தியில், பிகார் அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும் மற்றும் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று ஒரு முக்கிய இந்து சமய அறங்காவலர் கோரிக்கை விடுத்தார்.
Ramayan

உத்தரபிரதேசத்தில், மவுரியாவின் உருவ பொம்மைகளை எரித்த போராட்டக்காரர்கள், அவரை கைது செய்யக் கோரி போலீசில் புகார் அளித்தனர்.

புதிதாக எழுந்த அரசியல் புயலில் மவுரியாவை ஆதரிக்கும் குழுக்களும் விரைவில் இணைந்தன. லக்னோ நகரில் அவருக்கு ஆதரவாக அகில் பாரதிய ஓபிசி மகாசபை உறுப்பினர்கள் நடத்திய போராட்டத்தில், ராம்சரிதமனாஸின் சர்ச்சைக்குரிய பகுதிகள் அடங்கிய சில பக்கங்கள் எரிக்கப்பட்டன. போலீசாரால் கைது செய்யப்பட்ட 5 பேரும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள்.

இந்த சர்ச்சை ராம்சரிதமானஸைச் சுற்றியுள்ள விவாதத்தை புதுப்பித்திருப்பதுடன், இந்தியர் அனைவரும் சமம் என்று அரசியலமைப்பு உறுதிப்படுத்துவிட்ட நிலையில், இந்த விமர்சனம் ஏற்புடையதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

யாரை அடிக்கச் சொல்கிறது நூல்?

பல ஆண்டுகளாகவே அதை விமர்சித்து வரும் பெண்ணியவாதிகள், குறிப்பாக "ஒரு பறை, ஒரு படிக்காத ஆண், ஒரு தலித் மற்றும் ஒரு பெண், அனைவரும் அடிக்கப்பட வேண்டும் அல்லது கண்டிக்கப்பட வேண்டும்" என்ற வரிகளை கடுமையாக கண்டிக்கின்றனர்.

பிபிசி இந்தியிடம் பேசிய டெல்லி ஜாமியா பல்கலைக்கழக பேராசிரியை ஹேம்லதா மகிஷ்வர், "ஒன்று அல்லது இரண்டு வரிகள் மட்டுமல்ல, இதுபோன்ற பெண்கள் மற்றும் தலித்துகளை இழிவுபடுத்தும் பல வசனங்கள் ராம்சரிதமானஸில் உள்ளன" என்றார்.

"பிராமணன் கெட்ட குணங்கள் நிறைந்தவனாக இருந்தாலும் வணங்கப்பட வேண்டும் என்று ஒரு செய்யுள் கூறுகிறது. அதேசமயம் ஒரு தலித், அவன் வேத அறிஞனாக இருந்தாலும், அவனை மதிக்க முடியாது. இவ்வளவு பக்கச்சார்பான புத்தகத்தை நாம் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?"

இருப்பினும், சில வல்லுநர்கள், துளசிதாஸ் ஒரு சீர்திருத்தவாதி அல்ல என்றும், அவர் தனக்கான சார்புகளைக் கொண்டிருந்தார் என்றும் கூறுகிறார்கள். ஆனால், சர்ச்சைக்குரிய வரிகள் அவரது கதாபாத்திரங்களால் பேசப்படுகின்றன என்பதால் அவை ஆசிரியரின் கருத்தை பிரதிபலிப்பதாக எடுத்துக்கொள்ள முடியாது என்றும் குறிப்பிடுகின்றனர்.

ஆனால், பிபிசி இந்தியிடம் பேசிய ராம்சரிதமானஸ் காவியத்தில் வல்லுநரான அகிலேஷ் சாண்டில்யாவோ, "அதன் பின்னணியில் இருந்து தனியாகப் பிரித்துப் பார்த்தால் இந்த வரிகள் தலித்துகள் மற்றும் பெண்களை இழிவுபடுத்துவதாகத் தோன்றும்" என்று குறிப்பிட்டார்.

ஆனால், இந்தியர்களின் மனதில் ஆழப் பதிந்துள்ள ராம்சரிதமானஸ் நூல் இன்றைய சூழலில் அணுகப்பட வேண்டும், அது ஆய்வுக்கும் விவாதத்திற்கும் உரியது என்று விமர்சகர்கள் கூறுகிறார்கள்.