வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: ஞாயிறு, 13 மார்ச் 2022 (00:29 IST)

யுக்ரேன் Vs ரஷ்யா: மேரியோபோலில் தொடரும் தாக்குதல்கள் - கீயவ் சுற்றிவளைப்பு

யுக்ரேனின் மேரியோபோலில் இருந்து வெளியேறும் மக்களை ரஷ்ய படையினர் தடுத்து வருவதால் அங்கு நிலைமை மோசமாகியுள்ளதாக யுக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பு இன்று பதினேழாவது நாளை எட்டியுள்ளது. யுக்ரேனின் மோதல் மண்டலங்களில் சிக்கியிருந்த பொதுமக்களின் வெளியேற்றத்துக்காக தலைநகர் கீயவ், கார்ஹிவ், மேரியோபோல் போன்ற நகரங்களில் சில மணி நேரத்துக்கு சண்டை நிறுத்தத்தை அறிவித்த ரஷ்யா தற்போது அந்த நகரங்களில் மீண்டும் தாக்குதலைத் தொடங்கியிருக்கிறது.
 
தலைநகர் கீயவுக்குள் ரஷ்ய படையினர் நுழைந்தபோதிலும், அங்கு அவர்கள் ஆரம்ப நாட்களில் நடத்தியது போன்ற தாக்குதலை மேற்கொள்ளவில்லை.
 
சமீபத்திய நடவடிக்கையாக ரஷ்ய படையினர் மேரியோபோலில் உள்ள வணிக வளாகம் மற்றும் கப்பேறு மருத்துவமனையை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
 
மேரியோபோலில் 1,500-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும் மீதமுள்ளவர்கள் உறைய வைக்கும் பனியில் வாடுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
நகரத்தில் தற்போது மின்சாரம் இல்லை. சிறிதளவு மட்டுமே உணவு மற்றும் தண்ணீர் இருக்கின்றது.
 
தனது சமீபத்திய காணொளி உரையில், யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி, மக்களின் வெளியேற்றத்தை தடுக்கும் வகையில் நகரிலேயே அவர்களை சிக்க வைத்ததற்காகவும் அவசரமாக தேவைப்படும் மனிதாபிமான உதவிகளை படையினர் அனுமதிக்க மறுத்ததற்காகவும் குற்றம்சாட்டினார்.
 
ரஷ்ய பீரங்கிகளின் தொடர்ச்சியான தாக்குதலால் சமீபத்திய நாட்களில், நான்கு முக்கிய நகரங்களில் இருந்து குறைந்தளவிலேயே மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக ஸெலென்ஸ்கி கூறினார்.