"ரஷ்யாவின் தாக்குதல் இரக்கமற்ற செயல்"- மேரியோபோல் மேயர் வாடிம் போய்ச்சென்கோ
ரஷ்ய படையின் தாக்குதலுக்கு மத்தியில் குடியிருப்போர் வெளியேற கால அவகாசம் வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார் யுக்ரேனின் மேரியோபோல் நகர மேயர் வாடிம் போய்ச்சென்கோ.
ரஷ்ய படையினரால், தற்போது இந்தப் பகுதியில் யாரும் வெளியேற கூடாது என்ற தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இது "இரக்கமற்ற தாக்குதல்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேரியோபோல் துறைமுக நகரம், கடந்த வியாழன் முதல் ரஷ்ய படை வீரர்களால் முற்றுகையிடப்பட்டுள்ளது மற்றும் முன்னதாக மேரியோபோல் நகரின் மேயர் ஏற்கனவே அங்கு ஒரு மனித பேரழிவு ஏற்படக்கூடும் என குறிப்பிட்டிருந்தார். தற்போது மரியுபோல் நகரத்தில் சுமார் 4,50,000 மக்கள் வசிக்கின்றனர்.
மேலும் கடுமையான பீரங்கி தாக்குதலுக்கு மத்தியில் மின்சாரம் மற்றும் நீர் விநியோகம் அந்தப் பகுதியில் துண்டிக்கப்பட்டுள்ளது.
யுக்ரேனின் மிகப்பெரிய துறைமுகங்களில், மேரியோபோல் துறைமுக நகரமும் ஒன்று. இந்த நகரத்தை ரஷ்யா தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் பட்சத்தில் இது கிரிமியாவையும், ரஷ்ய ஆதரவுடைய பகுதிகளான லுஹான்ஸ்க் மற்றும் டொனெட்ஸ்க் ஆகியவற்றையும் இணைப்பதற்கான ஒரு முக்கிய பகுதியாக பார்க்கப்படும் என குறிப்பிடுகிறார்கள்.