செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By papiksha joseph
Last Updated : சனி, 12 மார்ச் 2022 (10:10 IST)

மாறன் - பட விமர்சனம்

நடிகர்கள்: தனுஷ், மாளவிகா மோகனன், ஸ்மிருதி வெங்கட், போஸ் வெங்கட், ஜெயப்ரகாஷ், நரேன், ராம்கி, சமுத்திரக்கனி, இளவரசு, அமீர்; இசை: ஜி.வி. பிரகாஷ் குமார்; இயக்கம்: கார்த்திக் நரேன். வெளியீடு: டிஸ்னி ஹாட்ஸ்டார்
 
'துருவங்கள் பதினாறு' படத்தின் மூலம் வெகுவாக கவனத்தை ஈர்த்த இயக்குநர் கார்த்திக் நரேனுடன் தனுஷ் இணைகிறார் என்றபோது, ஒரு சிறந்த திரைப்படம் வரக்கூடும் என்ற எதிர்பார்ப்பு ஏற்படுவது இயல்பானது. ஆனால், ஓடிடி தளங்கள் வந்த பிறகு, பல நல்ல இயக்குநர்கள் நல்ல நடிகர்களை வைத்து ஓடிடிக்காக படம் எடுக்கும்போது சுமாரான படங்களைத் தந்திருக்கிறார்கள் என்ற எச்சரிக்கை உணர்வையும் தவிர்க்க முடியவில்லை.
 
மாறனின் தந்தை (ராம்கி) ஒரு பத்திரிகையாளர். அவர் ஒரு கல்வித் தந்தையின் ஊழலை அம்பலப்படுத்தியதற்காக கொல்லப்படுகிறார். பிறகு தன் மாமாவின் (நரேன்) அரவணைப்பில் தனது தங்கையுடன் (ஸ்மிருதி வெங்கட்) வளர்கிறார் மாறன் (தனுஷ்). அவரும் ஒரு நேர்மையான பத்திரிகையாளராக உருவெடுக்கிறார். ஒரு அமைச்சரின் (சமுத்திரக்கனி) சதிவேலையை மாறன் அம்பலப்படுத்த, மாறனின் தங்கையை எரித்துக் கொன்றுவிடுகிறார்கள். மாறன் என்ன செய்கிறார் என்பது மீதிக் கதை.
 
ஊடகங்கள் ஊழலை அம்பலப்படுத்து குறித்தும் அதனால் ஏற்படும் பிரச்னைகள் குறித்தும் மிக மேலோட்டமான புரிதலுடன் தொலைக்காட்சித் தொடர்களுக்கே உரிய திரைக்கதையுடன் உருவாக்கப்பட்ட படம்தான் இந்த மாறன். 80களில் வந்த திரைப்படங்களில் அரசியல்வாதிகளை அம்பலப்படுத்தும் பத்திரிகையாளர்கள் கத்தியால் குத்திக் கொல்லப்படுவார்கள். சத்யராஜ், ஜெய்சங்கர் போன்றவர்கள் பலமுறை இதுபோல கொல்லப்பட்டிருக்கிறார்கள். கிட்டத்தட்ட அதே பாணியில், மனைவி கர்ப்பிணியாக இருக்கும்போது கொல்லப்படுகிறார் ராம்கி.
 
துவக்கமே இவ்வளவு பழைய காட்சியுடன் ஆரம்பிக்கிறதே என்று பார்த்தால், இதற்குப் பிறகு வரும் காட்சிகள் அதைவிட சாதாரணமாக இருக்கின்றன. கதாநாயகன் ஊழலை அம்பலப்படுத்தும் விதமும், அதற்காக வில்லனின் ஆட்கள் துரத்துவதும் பார்வையாளர்களின் பொறுமையை வெகுவாகவே சோதிக்கின்றன. "டேய் அந்த எவிடன்ஸை மட்டும் கொடுத்துரு" என்ற அடியாட்கள் கேட்கும் காட்சியுடன் துவங்குகின்றன பல சண்டைகள். அல்லது சண்டையின் முடிவில், "டேய் அந்த எவிடன்ஸை மட்டும் கொடுத்துரு" என யாராவது கேட்கிறார்கள். அப்படி என்ன எவிடன்சைத்தான் கதாநாயகன் வைத்திருக்கிறார்?
 
படத்தின் பெரும்பகுதி எவ்வித நோக்கமும் இல்லாமல் நகர்கிறது. ஓடிடியில் படங்களைப் பார்க்கும்போது சுவாரஸ்யமில்லாத பாடல்கள், சண்டைகளை வேகமாக ஓட்டிப்பார்ப்பது பலருக்கு வழக்கம். ஆனால், இந்தப் படத்தில் பல காட்சிகளையே அப்படி ஓட்டிவிடலாமா என்று தோன்றுகிறது.
 
இந்தப் படத்தில் உற்சாகமாக நடித்திருப்பவர் தனுஷின் தங்கையாக வரும் ஸ்மிருதி வெங்கட் மட்டும்தான். தனுஷைப் பொறுத்தவரை அவர் நடித்த படங்களின் எண்ணிக்கையில் ஒன்று கூடியிருக்கிறது. மாளவிகா மோகனன் கிட்டத்தட்ட பாதி படம்வரை எதுவும் பேசாமல் வருகிறார். வில்லனாக வரும் சமுத்திரக்கனியின் நடிப்பிலும் பெரிய சுரத்தில்லை.
 
படத்தின் பிற்பகுதியில் திடீரென அமீர், பார்த்திபன் என்ற அடியாள் பாத்திரத்தில் அறிமுகமாகிறார். "நீங்க பாட்டுக்கு ஊழலை அம்பலப்படுத்துறேன்னு எதையாவது செய்வீங்க. அதனால நாங்க பாதிக்கப்படுறதா?" என்ற கேள்வியை, மிக நியாயமான கேள்வியைக் கேட்பது போன்ற தொனியுடன் கேட்கிறார். அப்போது தனுஷைப் போலவே நமக்கும் திகைப்பு ஏற்படுகிறது.
 
மிக சுமாரான படங்களில் ஏதாவது ஒரு அம்சமாவது ஈர்ப்பை ஏற்படுத்தும். இந்தப் படத்தில் அப்படி ஒரு அம்சத்தைத் தேடுவதே கடினமாக இருக்கிறது.