வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 26 செப்டம்பர் 2019 (16:37 IST)

டிரம்ப்பின் அரசியல் எதிரியை வீழ்த்த வெளிநாட்டு உதவி - விவரங்களை வெளியிட்ட வெள்ளை மாளிகை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும், உக்ரைன் அதிபரும் பேசிய தொலைபேசி உரையின் விவரங்களை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது. டிரம்பை பதவி நீக்கம் செய்யும் நடவடிக்கையை அமெரிக்க நாடாளுமன்றம் தொடங்க இந்த விவரங்கள் காரணமாகியுள்ளன.
 
ஜனநாயக கட்சியின் உறுப்பினரும், முன்னாள் துணை அதிபரமான ஜோ பைடனின் செயல்பாடுகளை விசாரிக்க உக்ரைன் அதிபர் வாலடிமீர் ஸெலன்ஸ்கியிடம் ஜூலை 25ம் தேதி அதிபர் டிரம்ப் கேட்டுக்கொண்டதாக வெள்ளை மாளிகை வெளியிட்ட விவரங்கள் காட்டுகின்றன. ஜோ பைடனின் மகன் உக்ரைன் எரிவாயு நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார்.
 
தனது அரசியல் எதிரியான ஜோ பைடனை களங்கப்படுத்தும் நோக்கில் உக்ரைனுக்கு வழங்கும் ராணுவ உதவியை நிறுத்தி வைத்தாக கூறப்படுவதை டிரம்ப் மறுத்து வருகிறார். டிரம்ப் - வாலடிமீர் தொலைபேசி அழைப்பு, இந்த ஊழலை முதன் முதலில் வெளிப்படுத்திய குற்றச்சாட்டின் ஒரு பகுதியாகும்.
 
புதன்கிழமை காலை நியூ யார்க் நகரின் ஐநா பொது பேரவையில் இந்த சர்ச்சை பற்றி கருத்து தெரிவிக்கையில், "அமெரிக்க வரலாற்றில் மிக பெரியதொரு பழிவாங்கல் நடவடிக்கை," என்று அதிபர் டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்.
 
அதிபரின் செயல்பாடுகளில் பதவி நீக்கத்திற்கு வகை செய்கின்ற அதிகாரபூர்வ நடவடிக்கை மேற்கொள்ள நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் அவையில் ஜனநாயக கட்சி தலைவரும், அவைத் தலைவருமான நான்சி பலோசி செவ்வாய்கிழமை தொடங்கினார்.
 
ஜூலை 25ம் தேதி தொலைபேசியின் “முழுமையான, முற்றிலும் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்ட மற்றும் மாற்றியமைக்கப்டாத பதிப்பு வெளியிடப்படும்” என்று டிரம்ப் வாக்குறுதி அளித்திருந்தார்.
 
ஆனால், புதன்கிழமை காலை வெள்ளை மாளிகை வெளியிட்ட விவரங்கள் இந்த தொலைபேசி உரையாடலை கேட்டு குறிப்பு எடுக்கப்பட்டவைகளாகும்.
 
உக்ரைனுக்கு வழங்கப்படும் ராணுவ உதவியான 391 மில்லியன் டாலரை நிறுத்தி வைக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்ட நாட்களில்தான் இந்த ஜூலை மாத தொலைபேசி உரையாடல் நடைபெற்றது. வெள்ளை மாளிகை வெளியிட்ட குறிப்பாணையில் பணம் பற்றிய எந்த உரையாடலும் இடம்பெறவில்லை.
 
வெளியாகியுள்ள குறிப்புகளின்படி, அமெரிக்காவின் துணை அதிபராக ஜோ பைடன் 2016ம் ஆண்டு உக்ரைனின் அரசு தலைமை வழக்கறிஞர் விக்டோர் ஷோகினை பதவியில் இருந்து அகற்ற முயற்சி மேற்கொண்டார் என ஸெலன்ஸ்கியிடம் டிரம்ப் தெரிவிப்பதாக உள்ளது.
ஹண்டர் பைடன் குழும உறுப்பினராக இருக்கின்ற புரிஸ்மா எரிவாயு நிறுவனத்தில் ஷோகினின் அலுவலகம் புலனாய்வு ஒன்றை தொடங்கியுள்ளது.
 
ஊழலை மிக மென்மையாக கையாண்ட காரணத்தால் ஷோகின் பதவியில் இருந்து அகற்றப்பட வேண்டுமென பிற மேற்குலக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
 
உக்ரைன் அதிபரோடு நடத்திய தொலைபேசி உரையாடலில் ஜோ பைடன் பற்றியும், அவரது மகன் பற்றியும் டிரம்ப் பேசியதாக தெரிவிக்கப்படுகிறது. ஜோ பைடனின் செயல்பாட்டை சுட்டிக்காட்டி, உக்ரைன் அதிபர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென டிரம்ப் கூறியுள்ள தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
 
“அதனை நாங்கள் பார்த்து கொள்வோம். இந்த வழக்கு பற்றிய புலனாய்வை நாங்கள் செய்வோம்,” என்று ஸெலன்ஸ்கி தெரிவித்துள்ளதும் வெளிவந்துள்ளது.