வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: புதன், 31 மே 2023 (20:24 IST)

புகையிலை: சிகரெட் பழக்கம் உள்ளவர்களுக்கு அதை விடுவது ஏன் கடினமாக உள்ளது?

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஒரு சிறிய நகரத்தில் வளர்ந்தார் ரோஸ். அவர் 13 வயதிலிருந்தே புகைபிடிக்க ஆரம்பித்தார்.
 
புகைபிடிக்கக் கூடாது என்று தன் அம்மா மிகக் கண்டிப்பாகச் சொன்னதாக ரோஸ் கூறுகிறார். ஆனால் அதன் மீது இருந்த போதையை விடமுடியவில்லை. அவர் அப்பாவின் சிகரெட்டை திருடுவார். கூடவே பள்ளிக்கூடத்தில் மதிய சாப்பாட்டுக்குக் கிடைக்கும் பணத்தையும் இதற்காக செலவு செய்வார்.
 
அடுத்த 45 ஆண்டுகளுக்கு அவர் தினமும் இரண்டு பாக்கெட் சிகரெட்டுகளை ஊதித்தள்ளினார். பிறகு ஒரு நாள் அவர் காலில் பிரச்சனை ஏற்பட்டது. இது புகை பிடிப்பதால் ஏற்பட்ட பிரச்னை என்றும் புகை பிடிப்பதை நிறுத்தாவிட்டால் காலை இழக்க நேரிடும் என்றும் மருத்துவர் எச்சரித்தார்.
 
அவர் சிகரெட்டை விட்டுவிட்டார். ஆனால் அவருக்கு நுரையீரல் புற்றுநோய் இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். அவர் கீமோதெரபி எடுக்க வேண்டியிருந்தது. பின்னர் அறுவை சிகிச்சை நடந்தது. அதன் பிறகு அவரது மூளையில் இரண்டு கட்டிகள் இருப்பது கண்டறியப்பட்டது.
 
தங்களுக்கு புற்றுநோய் வராது என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் புற்றுநோயுடன் போராடிய ரோஸிடம், தங்கள் பக்கம் பார்க்குமாறு அவர்கள் அறிவுரை கூறினார்கள்.
 
பிறகு ஒரு நாள் ரோஸ் காலமானார். அப்போது அவருக்கு வயது அறுபது.
 
புகை பிடிப்பவர்களும் இதுபோன்ற பல பயமுறுத்தும் கதைகளைக் கேட்கிறார்கள். புகைபிடிப்பதால் ஏற்படும் எல்லா ஆபத்துகளையும் அவர்கள் அறிந்திருக்கிறார்கள். அரசுகளும் அமைப்புகளும் புகை பிடிப்பதை நிறுத்த விழிப்புணர்வு பிரசாரங்களை நடத்துகின்றன.
 
அப்படியிருக்கும் போதிலும், உலகம் முழுவதும் சுமார் 100 கோடி பேர் புகை பிடிக்கிறார்கள்.
 
ஒவ்வோர் ஆண்டும் சுமார் 60 லட்சம் பேர் புகை பிடித்தல் தொடர்பான நோய்களால் தங்கள் உயிரை இழக்கின்றனர். 2030 ஆம் ஆண்டுக்குள் புகை பிடிப்பதால் ஆண்டுக்கு 80 லட்சம் பேர் இறக்கக்கூடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனாலும் மக்களால் புகை பிடிப்பதை நிறுத்த முடியவில்லை.
 
அது ஏன்? எல்லாவற்றிற்கும் மேலாக மக்களால் ஏன் சிகரெட்டை விட முடியவில்லை என்ற கேள்விக்கு பதில் பெற நான்கு நிபுணர்களுடன் பிபிசி பேசியது.
 
"நான் புகை பிடிப்பதைக் கடுமையாக எதிர்த்தேன். ஆனால் ஒரு நாள் நான் புகைபிடிக்க ஆரம்பித்துவிட்டேன்," என்கிறார் சுகாதார உளவியலாளர் பேராசிரியர் ராபர்ட் வெஸ்ட்.
 
பேராசிரியர் ராபர்ட் 'தி ஸ்மோக் ஃப்ரீ ஃபார்முலா' என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். தனது காதலியின் விருப்பத்தின் பேரில் புகை பிடிப்பதை விட்டுவிட்டதாக அவர் கூறுகிறார்.
 
காதலியுடனான உறவு 30 ஆண்டுகளுக்குப் பிறகு முறிந்தது. ஆனால் மக்கள் ஏன் புகை பிடிக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளும் முயற்சி தொடர்ந்தது என்று அவர் கூறினார்.
 
புகையிலையில் உள்ள நிகோட்டினில் இதன் பதில் உள்ளது என்று அவர் கருதுகிறார். சிகரெட்டை பற்ற வைத்தவுடன் இந்த ரசாயனம் வெளியே வருகிறது.
 
"நீங்கள் சிகரெட் புகையை உள்ளிழுக்கும் போது, நிகோட்டின் நுரையீரலின் பக்கங்களில் மிக விரைவாக உறிஞ்சப்பட்டு சில நொடிகளில் அது நேரடியாக மூளையைச் சென்றடைகிறது. அங்கு அது நரம்பு செல்களுடன் தொடர்பு கொள்கிறது.
 
மேலும் அதன் விளைவு காரணமாக ஒரு வேதிப்பொருள் டோபமைன் வெளியே வருகிறது," என்று பேராசிரியர் ராபர்ட் விளக்குகிறார்.
 
"மேலும் ஒரு நல்ல காரியத்தைச் செய்ததற்காக நீங்கள் 'வெகுமதி' பெறப் போகிறீர்கள் என்று இது மூளைக்கு சமிக்ஞை செய்கிறது. நீங்கள் அதை உணராவிட்டாலும், மூளை அதை மீண்டும் செய்யும்படி கேட்கிறது," என்று ராபர்ட் கூறுகிறார்.
 
"அலுவலகத்திற்கு வெளியில், பான் கடை, மதுக்கடை என முதன்முறையாக சிகரெட் பற்ற வைத்த இடத்திற்கு நீங்கள் மீண்டும் செல்லும்போது, அதே "சிறப்பான" பொருள் தனக்குக் கிடைக்கப் போகிறது என்று மூளை நினைக்கும்."
 
அந்த சூழ்நிலைகளுக்கும் புகைபிடிக்கும் அவசியத்திற்கும் இடையே ஒரு தொடர்பு இருப்பதாகவும் அது உங்களை தொடர்ந்து இழுத்துக் கொண்டே இருப்பதாகவும் ராபர்ட் கூறுகிறார்.
 
நிகோட்டின் பழக்கத்தின் பிடி எவ்வளவு வலிமையானது என்பதை ராபர்ட் அறிய விரும்பினார்.
 
அளவுக்கு அதிகமாகப் புகை பிடித்ததால் தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை ஆய்வு செய்தார். அவர்கள் அனைவரின் குரல் வளையையும் வெட்டி அகற்ற வேண்டியிருந்தது.
 
"தொண்டையில் போடப்பட்ட துளைகள் மூலமே அவர்களால் சுவாசிக்கமுடியும். அறுவை சிகிச்சைக்குப் பிறகு, அவர்களில் பலர் மீண்டும் புகைபிடிக்க விரும்பினர். இப்போது அவர்களால் வாய் மூலம் புகையை உள்ளே இழுக்க முடியாது. ஏனென்றால் இப்போது அவர்களின் வாய் நுரையீரலுடன் இணைந்திருக்கவில்லை. ஆகவே தொண்டை துளை வழியாக பலர் புகை பிடிக்கிறார்கள். இந்த சூழ்நிலை மிகவும் இனிமையானது அல்ல. அவர்களுக்கு பிரச்னைகளும் உள்ளன. புகை பிடிப்பவர்கள் நிகோட்டின் பசியை அகற்ற விரும்புகிறார்கள் என்பதை இது காட்டுகிறது,"என்று ராபர்ட் விளக்குகிறார்.
 
சிகரெட்டில் உள்ள நிகோட்டினுக்கு அடிமையாவது ஹெராயின், கொகேயின் அல்லது ஓபியம் போன்ற வேறு எந்த போதைப் பொருளுக்கும் அடிமையாவதைப் போன்றது தான் என்று சுட்டிக்காட்டுகிறார் ராபர்ட் வெஸ்ட்.
 
மூளையின் 'அனிமல் பார்ட்' என்று கூறப்படும் பகுதியின் மூலம் நிகோட்டின் போதையைக் கட்டுப்படுத்தலாம் என்கிறார்கள். சிகரெட் ஆசையை சமாளிப்பது ஒரு போரைப் போன்றது என்று ராபர்ட் கூறுகிறார்.
 
"போதை மருந்துகள் விலங்குகளின் மூளையைத் தூண்டுகிறது. மூளையின் இந்தப் பகுதி 'ஆசையை நிறைவேற்று' என்று சொல்கிறது. மூளையின் மற்ற பகுதி 'இது முட்டாள்தனம்' என்று சொல்கிறது. 'நான் ஏன் இதைச் செய்கிறேன்?' போதைக்கு அடிமையானவர்கள் தினமும் இந்தப் போராட்டத்திற்கு உள்ளாகிறார்கள்."
 
எந்த ஒரு நபருக்கும் அதிலிருந்து தப்ப எதிர்ப்பு சக்தி இல்லை என்று கூறிய ராபர்ட், அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா பல தசாப்தங்களாக புகை பிடித்தார் என்றும் பின்னர் அவர் 'நிகோட்டின் மாற்று சிகிச்சை' மேற்கொண்டார் என்றும் குறிப்பிட்டார்.
 
நீங்கள் எத்தனை புத்திசாலி என்பதற்கும் இந்தப் பழக்கத்திற்கு அடிமையாவதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. உங்கள் மூளை நிகோட்டினுக்கு எவ்வாறு பதிலளிக்கிறது என்பதுதான் முக்கியமான விஷயம்.
 
மரபணு ரீதியாகவும் நீங்கள் இந்த அடிமைத்தனத்தின் பிடியில் இருக்க வாய்ப்புள்ளது என்று ராபர்ட் கூறுகிறார். உங்களை உருவாக்கும் மரபணுக்கள் உங்கள் நிகோட்டின் போதைக்கு வழிவகுக்கலாம். ஆனால் எல்லா விஷயத்திலும் இப்படியிருக்க வேண்டிய அவசியமில்லை.
 
"நான் பார்த்தது நெறிமுறையற்றது, சட்டவிரோதமானது மற்றும் விதிகளுக்கு எதிரானது. அவர்களின் சந்தைப்படுத்தல் மற்றும் தயாரிப்பு பற்றி மக்களிடையே செய்யப்பட்ட ஆராய்ச்சி தொடர்பாக நான் இவ்வாறு சொல்கிறேன்," என்று உயிர்வேதியியல் நிபுணர் டாக்டர். ஜெஃப்ரி வைகைட் கூறுகிறார்.
 
டாக்டர். ஜெஃப்ரி வைகைட் 1994 ஆம் ஆண்டில் 'விசில் ப்ளோவர்' ( விஷயத்தை அம்பலபடுத்துபவர்) ஆக அனைவரின் பார்வைக்கு முன் வந்தார். பெரும் புகையிலை நிறுவனங்களின் பொய்களை அவர் அம்பலப்படுத்தினார். இதன் அடிப்படையில் ஹாலிவுட், 'இன்சைடர்' என்ற படத்தைத் தயாரித்தது.
 
டாக்டர். ஜெஃப்ரியின் கதை 1988 இல் அமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்தின் லூயிவில்லில் தொடங்கியது. பிரவுன் & வில்லியம்சன் புகையிலை நிறுவனத்தில் லட்சக்கணக்கான டாலர் சம்பளத்துடன் உயர் அதிகாரி பதவியை ஜெஃப்ரி பெற்றார்.
 
அவர் ஓர் உயிர்வேதியியலாளர் மற்றும் சுகாதாரத் துறையில் பணியாற்றியவர். புகை பிடிப்பதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்த நிறுவனத்தின் நிலைப்பாடு, திசை திருப்புவதாக இருப்பதைக் கண்டறிந்த அவர், அதைப் பற்றிய கேள்விகளைக் கேட்கத் தொடங்கினார்.
 
"தங்கள் தயாரிப்புகள், பயனர்களையும் அவர்களைச் சுற்றியுள்ளவர்களையும் கொல்லக்கூடும் என்ற தெளிவான புரிதல் நிறுவனத்திற்கு இருந்தது. இது போதைக்கும் வழிவகுக்கும் என்று அவர்கள் அறிந்திருந்தனர். ஆனால் அந்த நிறுவனம் வெளியுலகுக்கு வேறு கதையைச் சொல்லிக் கொண்டிருந்தது," என்று ஜெஃப்ரி விளக்குகிறார்.
 
'இந்தப் பொருள் பாதுகாப்பானது. எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. இதைப் பயன்படுத்துவது உங்கள் சொந்த விருப்பதின் பேரிலானது' என்று அந்த நிறுவனம் வெளியுலகுக்குச் சொல்லிக் கொண்டே இருந்ததாக டாக்டர் ஜெஃப்ரி கூறுகிறார்.
 
ஜெஃப்ரி ஐந்தாண்டுகளாக கேள்விகள் கேட்டு ரகசியங்களின் அடுக்குகளை உடைத்தார். பின்னர் ஒரு நாள் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டு அமைதியாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டார்.
 
ஒரு வருடம் கழித்து, அதாவது 1994 இல், ஜெஃப்ரியின் முன்னாள் முதலாளி உட்பட உலகின் மிகப்பெரிய ஏழு புகையிலை நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் உண்மையைச் சொல்வதாக உறுதியளித்தனர். ஆனால் அமெரிக்க காங்கிரஸ் முன் பொய் கூறினர். அது சூழலை முற்றிலுமாக மாற்றியது. உலகத்திடம் உண்மையைச் சொல்ல ஜெஃப்ரி முடிவு செய்தார்.
 
"என்னை விசில் ப்ளோவர் என்று அழைத்தார்கள். அதன் பிறகு, எல்லா பிரச்னையும் தொடங்கியது. என் குழந்தைகளைக் கொல்லப் போவதாக எனக்கு இரண்டு முறை தபால் மூலம் மிரட்டல் வந்தது. என் வீட்டிற்கு வெளியே, ஊடகங்களின் கூட்டம் கூடியது. ஆயுதம் ஏந்திய இரண்டு முன்னாள் ரகசிய ஏஜெண்டுகள் எங்களுடன் 24 மணி நேரமும் இருந்தனர்," என்று அவர் கூறினார்.
 
தனக்கு வந்த அச்சுறுத்தல்களுக்குப் பின்னால் 'பிரவுன் & வில்லியம்சன்' இருப்பதாக ஜெஃப்ரி தொடர்ந்து நம்பினார். ஆனால், இது ஒருபோதும் நிரூபிக்கப்படவில்லை. நிகோட்டினுக்கு மனிதன் அடிமையாகக் கூடும் என்றும் மனித உடலுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடும் என்பதையும் இதற்குப் பிறகு பெரிய புகையிலை நிறுவனங்களால் மறுக்க முடியவில்லை.
 
இதற்குப் பிறகு சில நாடுகள் புகை பிடிப்பதில் இருந்து மக்களை விலக்கி வைக்க நெடுநோக்கு நடவடிக்கைகளை எடுத்தன. சிகரெட் பாக்கெட்டுகளின் பேக்கேஜிங்கில் மாற்றங்கள், பொது இடங்கள் மற்றும் பணியிடங்களில் புகை பிடிப்பதைத் தடை செய்தல், வரி விதித்து விலையை பன்மடங்கு உயர்த்துதல் ஆகியவை இதில் அடங்கும்.
 
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் விதிகள் மாற்றப்பட்டபோது, புகையிலை நிறுவனங்கள் தங்கள் கவனத்தை மற்ற நாடுகளுக்குத் திருப்பியதாக ஜெஃப்ரி கூறுகிறார்.
 
"புகையிலை நிறுவனங்கள் லாபத்தைத் தக்கவைக்க ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. எனவே அவர்கள் பழைய வழியை முயன்று பார்க்கத் தொடங்கினர். அவர்கள் வளரும் நாடுகள் அல்லது விதிகள் கடுமையாக இல்லாத நாடுகளுக்குத் தங்கள் கவனத்தைத் திருப்பினர். அங்கு மக்கள் ஒப்பீட்டளவில் குறைவாகப் படித்தவர்கள் மற்றும் ஏழைகள். அங்கு புகையிலை பொருட்களை அவர்கள் சந்தைப்படுத்த தொடங்கினர்," என்று ஜெஃப்ரி கூறுகிறார்,
 
புகையிலை தொழிலுடன் தொடர்புடைய நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை விற்பதன் மூலம் கிடைக்கும் பணத்தை அதே தயாரிப்புகளை சந்தைப்படுத்தப் பயன்படுத்துகின்றன. இந்த தயாரிப்புகள் மக்களைக் கொல்லக்கூடும் என்பதை அறிந்தும் அவர்கள் இதைச் செய்கின்றனர்," என்று ஜெஃப்ரி கூறினார்.
 
இருப்பினும், யாரையும் புகை பிடிக்க தாங்கள் கட்டாயப்படுத்தவில்லை என்று புகையிலை நிறுவனங்கள் வாதிடுகின்றன. ஒருவேளை அவர்கள் சொல்வதும் சரியாக இருக்கலாம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் மக்கள் ஏன் புகை பிடிக்கத் தொடங்குகிறார்கள் என்ற கேள்விக்கு அடுத்த நிபுணரிடம் பதிலைக் கேட்போம்.
 
"என் அம்மா அதிகம் புகை பிடிப்பார். நான் குழந்தையாக இருந்தபோது, சிகரெட் புகை என்னைச் சூழ்ந்திருந்தது," என்று சுகாதார உளவியலாளர் டாக்டர் இல்டிகோ டோம்போர் கூறுகிறார்.
 
தன் தாய் கர்ப்பமானபோது சிகரெட்டை கைவிட்டார் என்றும் ஆனால் குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டுவதை நிறுத்தியவுடன், அவர் மீண்டும் புகை பிடிக்கத் தொடங்கினார் என்றும் டாக்டர் இல்டிகோ தெரிவித்தார்.
 
இல்டிகோ தனது முதல் ஆய்வை தனது தாயிடம் செய்தார். மக்கள் தங்களைப் பற்றி வைத்திருக்கும் கருத்து அவர்களின் நடத்தையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை அவர் தனது ஆய்வில் கண்டறிந்தார்.
 
"அடையாளத்தின் உந்து சக்தி மிகப் பெரியது. அது நடத்தையைத் தீர்மானிக்கிறது. பல வகையான நடத்தைகள் அதாவது புகைபிடித்தல், குடிப்பது, உடற்பயிற்சி செய்தல் அல்லது ஒரு குறிப்பிட்ட பிராண்ட் பொருட்கள் அல்லது உபகரணங்களை வாங்குவது."
 
"இது உங்கள் சொந்த அடையாளத்தை உருவாக்குவதைப் போன்றது. ஒரு குறிப்பிட்ட குழு அல்லது சாதியுடன் தொடர்புடைய அடையாளம். அதை அனைவரும் அறிந்திருப்பதை நீங்கள் உறுதி செய்கிறீர்கள்.
 
"பல நேரங்களில் அடையாளம் தெளிவாகத் தெரியும். நீங்கள் பல்கலைக்கழக சீருடை அல்லது உங்களுக்குப் பிடித்த கால்பந்து கிளப்பின் ஜெர்சியை அணிந்தால், நீங்கள் குறிப்பிட்ட சமூகக் குழுவின் ஒரு பகுதியாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம். பல நேரங்களில் அது உங்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கிறது," என்று டாக்டர் இல்டிகோ கூறுகிறார்.
 
ஒரு குழு எவ்வளவு சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறதோ அவ்வளவு அதிகமாக அதில் நுழைய ஆசை இருக்கும். தனிச்சிறப்பு என்ற அடையாளத்தைத் தக்கவைக்க, புதியவர்கள் தங்கள் அர்ப்பணிப்பைக் காட்டும் ஒன்றைச் செய்ய வேண்டும்.
 
பெரும்பாலான புகை பிடிப்பவர்கள் 26 வயதிற்கு முன்பே புகை பிடிக்கத் தொடங்குகிறார்கள் என்று டாக்டர் இல்டிகோ கூறுகிறார். ஒரு டீன் ஏஜருக்கு 'கூல் க்ரூப்பில்' இடம் பிடிப்பது மிகவும் முக்கியம்.
 
புகை பிடிப்பது ஒரு 'சமூக பாஸ்போர்ட்' போன்றது என்கிறார் டாக்டர் இல்டிகோ. புகை பிடிப்பதை தவறு என்று கருதாதவர்கள், அது சமூக ரீதியாகவும் தொழில் வளர்ச்சியிலும் நன்மை பயக்கும் என்று நினைக்கிறார்கள் என்று தனது ஆராய்ச்சியில் அவர் தெரிந்து கொண்டார். அப்படிப்பட்டவர்கள் அதை விடுவது மிகவும் கடினம் என்று அவர் குறிப்பிட்டார்.
 
"புகை பிடிப்பவர் என்ற அடையாளத்தை விரும்புகிறீர்களா என்று புகை பிடிப்பவர்களிடம் நாங்கள் கேட்டோம். 18 சதவிகிதம் பேர் அதை விரும்புவதாகக் கூறினர். ஆறு மாதங்களுக்குப் பிறகு அத்தகைய நபர்கள் மீண்டும் தொடர்பு கொள்ளப்பட்டனர். அவர்களில் மிகச் சிலரே இந்தக் காலகட்டத்தில் சிகரெட்டை நிறுத்த முயன்றதாக அறியப்பட்டது. இந்த பிம்பம் நன்றாக உள்ளது என்று கருதுபவர்களுக்கு இந்த சிந்தனையானது, சிகரெட்டை விடுவதில் ஒரு பெரிய தடையாக இருப்பதைப் பார்க்கமுடிகிறது," என்று டாக்டர் இல்டிகோ கூறினார்.
 
புகை பிடிப்பதில் ஆபத்துகள் உள்ளன, அது உங்களைக் கொல்லக் கூடும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் ஆபத்தை எல்லோரும் ஒரே மாதிரியாக பார்ப்பதில்லை.
 
"நான் அலுவக வேலை செய்யும் குடும்பத்தில் இருந்து வருகிறேன். என் 14ஆவது வயதில் என் தந்தை இறந்தார். குடும்பத்தின் பொறுப்பு என் அம்மா மீது விழுந்தது. நாங்கள் நியூ ஜெர்சியில் ஒரு எளிய பகுதியில் வாழ்ந்தோம்," என்று ஆராய்ச்சியாளர் கார்ல் லேஷ்வே கூறுகிறார்.
 
கார்ல் லேஷ்வே, புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களை ஆய்வு செய்துள்ளார். விளைவுகளை அறிந்திருந்தாலும் தங்கள் ஆரோக்கியத்தைப் பணயம் வைக்க தயாராக இருந்த புகை பிடிப்பவர்கள் மீது, அவரும் அவரது குழுவினரும் ஆர்வமாக இருந்தனர். "நாங்கள் ஒரு விளையாட்டை உருவாக்கினோம். இது கணினியில் உருவாக்கப்பட்ட பலூனை அடிப்படையாகக் கொண்டது. இதில் பலூனை ஊதுவதற்குப் பணம் கொடுக்கப்பட்டது. எத்தனை பெரிதாக நீங்கள் பலூனை ஊதுகிறீர்களோ அத்தனை அதிக பணத்தை வெல்ல முடியும். ஆனால் ஓர் இடத்தில் வரும்போது இந்த பலூன் வெடிக்கக்கூடும்," என்று அவர் விளக்குகிறார்.
 
புகை பிடிக்காதவர்களை விட புகை பிடிப்பவர்கள் பலூன்களைப் பெரிதாக ஊதுவதை கார்ல் குழு கண்டறிந்தது. புகை பிடிப்பவர்கள் ஆபத்துகளைச் சந்திக்கத் துணிகிறார்கள் என்பதை இந்த சோதனை நிரூபித்தது மட்டுமல்லாமல், அவர்கள் எந்த அளவிற்குச் செல்லக்கூடும் என்பதையும் இது காட்டுகிறது என்று கார்ல் கூறுகிறார்.
 
கார்ல் அதை பஞ்சி ஜம்பிங்குடன் ஒப்பிடுகிறார். அங்கே பாலத்தில் இருந்து குதிக்கும் போது, தரையில் மோதாமல் காப்பது உங்கள் உடலில் கட்டப்பட்டிருக்கும் ரப்பர் பேண்ட் தான். அது உடைந்தால் ஆட்டம் முடிந்துவிடும்.
 
புகை பிடிக்கும் விஷயத்தில் முன்னோக்கிச் செல்லும்போது உங்களைக் கொல்லக்கூடிய நோய் ஏற்படலாம், ஆனால் அது நடக்காமலும் போகலாம் என்ற எண்ணம் உள்ளது.
 
புகை பிடிப்பவர்கள் தங்கள் உணர்ச்சிகளை, குறிப்பாக மன அழுத்தத்தை எவ்வாறு நிர்வகிக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதும் முக்கியம் என்று அவர் கூறுகிறார்.
 
"என் அம்மாவின் கதைக்குத் திரும்பினால், அவர் உயர்நிலைப் பள்ளியை விட்டுவிட்டு தன் குடும்பத்திற்கு உதவினார். அவருடைய முழு வாழ்க்கையும் பொறுப்புகள் நிறைந்ததாக இருந்தது. அவர் புகை பிடிப்பதை நான் கவனித்துப் பார்த்தபோது, அது அவருக்கு ஓர் 'இடைவேளை' போல இருந்ததை நான் கண்டேன். அவரைச் சுற்றி நடப்பது அப்போது அவர் சிந்தனையில் இருக்காது," என்று கார்ல் குறிப்பிட்டார்.
 
இரண்டு வேளை உணவுக்காகப் போராட வேண்டிய தனது தாயைப் போன்றவர்கள் ஒவ்வொரு நாளும் பல சவால்களை எதிர்கொள்வதாக கார்ல் கூறுகிறார். இப்படிப்பட்டவர்களை உந்து சக்தி குறைந்தவர்கள் என்று வர்ணிப்பது சரியாக இருக்காது. இதேபோன்ற நிதிப் பிரச்னைகளை எதிர்கொள்ளாதவர்களால் அத்தகையவர்களின் நிலையை ஊகிக்க முடியாது என்று கார்ல் சுட்டிக்காட்டினார்.
 
ஆனால் புகைபிடிப்பதன் இன்பம் அல்லது ஆறுதல், ஒவ்வொரு முறையும் ஆபத்தின் சுமையை அதிகரிக்கிறது. இதை இப்போது கார்லின் தாயார் உணர்ந்துள்ளார்.
 
"சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு என் அம்மா நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அவர் குணமடைந்தார். பின்னர் அவருக்கு மூளை புற்றுநோய் ஏற்பட்டது. தனிப்பட்ட முறையில் நான் உணரக்கூடிய ஒரு வலி இது," என்கிறார் கார்ல்.
 
எல்லாவற்றுக்கும் மேலாக, மக்கள் ஏன் சிகரெட்டை விடமுடிவதில்லை என்ற அதே கேள்விக்கு மீண்டும் வருவோம்.
 
சிலருக்கு வாழ்க்கையின் அழுத்தத்தைச் சமாளிக்க இது ஒரு வழி என்கிறார்கள் நமது நிபுணர்கள். சிலருக்கு, இது அவர்களின் அடையாளத்தை வெளிப்படுத்தும் ஒரு வழி. சிலர் மரபணு ரீதியாக நிகோட்டின் போதைக்கு ஆளாகிறார்கள் என்பதையும் நாம் புரிந்துகொண்டோம். இவர்கள் அனைவரும் புகையிலை விற்பனை செய்யும் பெரிய நிறுவனங்களின் இலக்காக உள்ளனர்.
 
மேலும் புகை பிடிப்பவர்கள் நிகோட்டினுக்கு அடிமையாகி விடுவதும் மிக முக்கியமான காரணம். இந்த அடிமைத்தனத்தின் பிடி ஒருவேளை ஹெராயினை விட இன்னும் வலுவாக இருக்கலாம்.