வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Updated : புதன், 30 மே 2018 (13:01 IST)

புகைப் பழக்கத்தை கைவிட விரும்பும் 'உலகின் மிக வயதான நபர்'

தென்னாப்பிரிக்காவை சேர்ந்த ஃப்ரெடி ப்ளோம், தனது வாழ்நாள் முழுவதும் பண்ணையிலும், கட்டுமான துறையிலும் தொழிலாளராகப் பணியாற்றினார். அவர் விரைவில் உலகின் வயதான நபராக அங்கீகரிக்கப்படலாம். பல ஆண்டுகளுக்கு முன்பு ஃப்ரெடி ப்ளோம் மதுப்பழக்கத்தை விட்டபோதிலும், இன்னும் புகைபிடித்துக்கொண்டிருக்கிறார்.

 
''நான் சிகரெட்டுகளை பிடிப்பதில்லை. எனது புகையிலையை, செய்தித்தாளின் துண்டின் உள்ளே வைத்துச் சுருட்டி புகைப்பேன். ஒரு நாளைக்கு இரண்டு, மூன்று முறை புகைப்பேன்'' என்கிறார் அவர். ''புகைப்பதை விட போகிறேன் என சில சமயம் எனக்குள் சொல்லிக்கொள்வேன். ஆனால், இது என்னை ஏமாற்றும் செயலே. புகை ஊத வேண்டும் என மார்பு கேட்கும். பிறகு நான் புகைபிடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.'' என்கிறார்.
 
நூறு வயதுக்கு மேலான இவரை ஒருவர் பார்க்கும் போது, எப்படி இவர் இவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறார் என முதல் கேள்வியாக இருக்கும்.முன்னாள் பண்ணை பணியாளரான இவர், மே 8-ம் தேதி 114 வயதை அடைந்தார். உலகில் உயிருடன் இருக்கும் மிக வயதான நபர் இவர் என கூறப்படுகிறது. ஆனால், இதனை கின்னஸ் உலக சாதனை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
 
இந்த பட்டத்தை கடைசியாக ஜமைக்காவை சேர்ந்த வயலட் மோஸ்-பிரவுன் எனும் பெண் வைத்திருந்தார். 2017 செப்டம்பரில் தனது 117 வயதில் அவர் இறக்கும் வரை இப்பட்டம் அவரிடம் இருந்தது. தனது நீண்ட வாழ்நாளுக்கான எந்த சிறப்பு ரகசியமும் ஃப்ரெடி ப்ளோமிடம் இல்லை.
'
'ஒரே ஒரு விஷயம் இருக்கிறது - அது நமக்கு மேலே உள்ளவன்(கடவுள்). அவரிடம் எல்லா சக்தியும் உள்ளது. என்னிடம் எதுவும் இல்லை. நான் எப்போது வேண்டும் என்றாலும் விழலாம், ஆனால் கடவுள் என்னைக் காப்பாற்றுவார்'' என்கிறார் அவர். ''நான் மிகவும் ஆரோக்கியமாக உணர்கிறேன். என் இதயம் பலமாக இருந்தாலும், கால்கள் பலமாக இல்லை. முன்பு போல நடக்க முடியவில்லை'' என உரத்த மற்றும் தெளிவான குரலில் பேசுகிறார்.
 
அவர் தவிர்க்கமுடியாத ஒரு பிரபல அந்தஸ்தைப் பெற்றுள்ளார். உள்ளூர் மக்கள் முதல் அமைச்சர்கள் வரை பலரும் இவரை வந்து பார்த்து செல்கின்றனர். 48 ஆண்டுகளாக ப்ளோமினின் மனைவியாக இருக்கும் ஜெனேட்டா, ப்ளோமினை விட 29 வயது இளையவர்.
 
பல ஆண்டுகளுக்கு முன்பு முழங்கால் பிரச்சனையின் காரணமாக ஒரே ஒரு முறை ப்ளோமின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக ஜெனேட்டா கூறுகிறார். தனது கணவரின் உண்மையான வயது குறித்து முதலில் பலருக்கு சந்தேகம் இருந்ததாக ஜெனேட்டா கூறுகிறார்.
 
''1904-ம் ஆண்டு 8-ம் தேதியை, ப்ளோமின் பிறந்த தேதியாக பதிவு செய்தும் ஒரு அடையாள ஆவணத்தை அரசு வழங்கியுள்ளது. இந்த ஆவணமே போதுமானது'' என்கிறார் மேற்கு கேப்பின் சமூக மேம்பாட்டு துறையின் செய்தி தொடர்பாளர் ஷீலே.
 
தனது இளம் வயதில் தான் பிறந்த இடமான அடிலெய்டை விட்டு வெளியேறி கேப் டவுனுக்கு குடிபெயர்ந்தார் ப்ளோம். அவருக்கு எழுத படிக்க தெரியாது. ''காலை நான் கண் விழித்தவுடன், வெளியே சென்று உலகத்தைப் பார்க்க ஆசைப்படுவேன். அடிக்கடி உண்டி கோலை எடுத்து பறவைகளை வேட்டையாடுவேன்'' என தனது பதின்ம கால நினைவுகளை நினைவு கூர்கிறார்.
 
முதலில் பண்ணை தொழிலாளராகத் தனது பணியை ஆரம்பித்தார். பிறகு கட்டுமான நிறுவனத்தில் வேலை செய்தார். கேப் டவுனில் பல பகுதிகளுக்கு சென்று, சுவறுகளை அமைப்பேன். எனது 80 வயதில் ஓய்வு பெறும் வரை அதே பணியை செய்தேன். '' என்கிறார். ப்ளோமின் சிறப்பான உணவுகள் எதையும் உன்னுவதில்லை. மூன்று வேளையும் இறைச்சி கேட்பார். அதே சமயம் நிறைய காய்கறிகளையும் சாப்பிடுவார் என்கிறார் அவர் மனைவி.
 
ப்ளோமின் தனது உடைகளைத் தானே துவைத்து கொள்வார். ஆனால், ஷூ அணியச் சிரமப்படுவார் என்கிறார் அவரின் மனைவி. சவரம் செய்ய சில சமயம்அவரது பேரனின் உதவி அவருக்குத் தேவைப்படுகிறது. '' சும்மாகூட உட்காந்திருப்பேன். ஆனால், என்னால் டிவியில் ஓடும் நான்சென்ஸை பார்க்க முடியாது'' என்கிறார். அதற்கு பதில் வீட்டு வாசலுக்குச் சென்று, செய்தித்தாளின் துண்டை சுருட்ட ஆரம்பிப்பார் ப்ளோம்.