ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 11 ஜூன் 2021 (10:34 IST)

காதலுக்காக 10 ஆண்டு பூட்டிய அறையில் யாருக்கும் தெரியாமல் வாழ்ந்த பெண்

கேரளாவின் ஒரு கிராமத்தில் ஒரு சிறிய அறை ஒன்றில் பத்து வருடங்களாக பெண் ஒருவர் பூட்டி வைக்கப்பட்டிருந்தார்.
 
அவருக்கு எந்த தண்டனையும் வழங்கப்படவில்லை. அந்த சிறிய அறையில் துன்புறுத்தப்படவும் இல்லை.
 
ஒரே அறையில் பத்து வருடங்களாக அடைபட்டு கிடந்து ஒருவர் மகிழ்ச்சியாக இருந்தார் என்றால் சற்று விசித்திரமாகதான் இருக்கும்.
 
காரணம் என்னவாக இருக்கும் என நீங்கள் பல்வேறு விதமாக யோசிக்கலாம். அவர் மன நலம் பாதிக்கப்பட்டவரும் இல்லை. அவர் ஒருவரை காதலித்தார். அதுதான் காரணம்.
 
32 வயது ரஹ்மான் மற்றும் 28 வயது சஜிதாவின் கதையை கேட்டபின் காவல்துறையினர் இந்த முடிவுக்குதான் வந்தனர்.
 
"நாங்கள் அவர்களை தனித்தனியாக விசாரித்தோம். அவர்கள் கூறியதில் எந்த வித்தியசமும் இல்லை. அவர்கள் கண்மூடித்தனமாக ஒருவரை ஒருவர் காதலிக்கின்றனர். இதில் சந்தேகப்படும்படி ஏதும் இல்லை." என பாலக்காடு மாவட்டத்தில் உள்ள நென்மாராவின் காவல் ஆய்வாளர் பிபிசி ஹிந்தி சேவையிடம் தெரிவித்தார்.
 
இந்த கதை எப்படி வெளியே வந்தது?
 
அருகேயுள்ள கிராமம் ஒன்றில் ரஹ்மானின் சகோதரர், ரஹ்மானும் சஜிதாவும் வாகனத்தில் செல்வதை பார்த்ததும் இந்த கதை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
 
தனது சகோதரர் ரஹ்மான் காணாமல் போனதாக தனது பெற்றோர் புகார் தெரிவித்திருப்பதாக போக்குவரத்து காவல்துறையினரிடம் தெரிவித்தார் ரஹ்மானின் சகோதரர்.
 
மூன்று மாதங்களுக்கு முன் தனது பெற்றோரின் வீடு உள்ள அயிலூர் கிராமத்திலிருந்து ரஹ்மான் தீடீரென காணாமல் போனார்.
 
ரஹ்மானை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்குதான் ரஹ்மான் தனது கதையை விளக்கியுள்ளார்.
 
ரஹ்மானும், சஜிதாவும் அருகேயுள்ள ஊரில் வாழ்ந்தவர்கள். சஜிதா, அயிலூரில் ரஹ்மானின் பெற்றோர் இருக்கும் வீட்டிற்கு 2010ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி வந்துள்ளார்.
 
சஜிதாவை காணவில்லை என அவரின் குடும்ப உறுப்பினர்களும் புகார் தெரிவித்திருந்தனர். சஜிதாவை கண்டுபிடிக்க முடியாமல் இருந்தது.
 
ரஹ்மான், எலக்ட்ரீஷியன் மற்றும் பெயிண்டராக வேலைப் பார்ப்பார். பணி காரணமாக வெளியே செல்வார் ஆனால் தினமும் இல்லை.
 
அவரின் பெற்றோரும் தினக்கூலி செய்பவர்கள். தினமும் பணியின் காரணமாக வெளியே செல்வார்கள்.
 
சஜிதா எப்படி இத்தனை காலம் தனி அறையில் இருந்தார்?
 
"ஒவ்வொரு நாளும் சமைலறையிருந்து உணவை எடுத்துக் கொண்டு அவர்(ரஹ்மான்) தனது அறைக்கு சென்று அறையை தாளிட்டுக் கொள்வார். பின் சஜிதாவுக்கு உணவு வழங்குவார், " என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
 
ரஹ்மான் தனது அறைக்கு அருகில்கூட யாரையும் வரவிடமாட்டார். அந்த அறை எப்போதும் பூட்டியே இருந்தது. அவர் உள்ளே இருந்தாலும் தாளிட்டு கொண்டுதான் இருப்பார்.
 
"ரஹ்மானின் பெற்றோர் தூங்க சென்றவுடன் சஜிதா குளிக்கவும் தனது அன்றாட கடமைகளுக்காகவும் வெளியே செல்வார். அது ஒரு பெரிய வீடு கூட கிடையாது. அது மூன்று அறைகள் கொண்ட ஓட்டு வீடு. " என்கிறார் தீபக் குமார்.
 
"ஒரே வீட்டில் சஜிதா இருந்தது குறித்து ரஹ்மானின் பெற்றோருக்கு தெரியாமல் இருந்தது மிக ஆச்சரியமளிக்கிறது," என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
அதன்பின் ஒரு நாள், மார்ச் மாதம் ரஹ்மான் காணாமல் போனார்.
 
"ரஹ்மான் ஒரு பெயிண்டிங் வேலைக்கு சென்றுள்ளார். இரு மாதங்கள் தொடர்ந்து வேலைக்கு சென்றுள்ளார். அப்போது போதுமான அளவு பணம் சம்பாதித்து கொண்டு அவர் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார்" என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
 
ரஹ்மான் தனது பெற்றோரின் வீட்டை விட்டு தனியாக வாழ முடிவு எடுத்தார். அவரின் அந்த முடிவுக்கு எந்த ஒரு காரணத்தையும் அவர் சொல்லவில்லை.
 
பூட்டிய அறையில் இருந்தது ஏன்?
 
ரஹ்மானும் சஜிதாவும் வெவ்வேறு மதங்களை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களின் திருமணத்திற்கு குடும்பத்தினர் ஒப்புக் கொள்ளமாட்டார்கள் என இருவரும் அஞ்சியதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
 
இருவரும் காணாமல் போனதாக புகார் பதியப்பட்டுள்ளதால் உள்ளூர் நீதிமன்றத்தில் இருவரும் ஆஜர் படுத்தப்பட்டனர்.
 
அவர்கள் தரப்பை கேட்டவுடன் நீதிமன்றம் அவர்களை விடுவித்தது.
 
அந்த தம்பதியினர் ஊடகங்களிடம் பேச மறுத்துவிட்டனர்.