1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 11 நவம்பர் 2022 (13:53 IST)

சோலைகாடுகளின் அழிவால் கலாசார அடையாளத்தை இழக்கும் தோடர் பழங்குடிகள்

BBC
காலநிலை மாற்றத்தின் தாக்கம் இந்தியாவில் எப்படி உள்ளது எப்படி இருக்கும் என்பது தொடர்பாக தரவுகளின் அடிப்படையில் அறிவியல் பூர்வமான ஆய்வுகள், கணிப்புகள், விவாதங்கள் நடந்தபடி உள்ளன.

ஆனால் நீலகிரி மலையின் தொல்குடிகளான தோடர் இன மக்களோ தங்கள் வாழ்விலும் பண்பாட்டிலும் நிகழும் மாற்றங்களின் ஊடாக காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை எதிர்கொள்கிறார்கள்.

நாளுக்கு நாள், மலையின் உறுதி குலைவதாகக் கருதும் இந்த மக்கள், மலையின் மகுடமாகத் திகழும் சோலைக் காடுகளின் அழிவைத் தங்கள் இனத்தின் அழவாகப் பார்க்கிறார்கள்.

நீலகிரி மலையில் காணப்படும் அரியவகை புல்வெளி குறைந்துகொண்டு போவதால், தங்களது அன்றாட வாழக்கையில் பல மாற்றங்களைச் சந்தித்துள்ளதாக தோடர் இன மக்கள் கூறுகின்றனர்.

வளமான புல்வெளி இருந்த காரணத்தால் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னதாக தங்கள் முன்னோர்கள் செய்த மேய்ச்சல் தொழிலை, தற்போது கைவிட்டு பல இளைஞர்கள் விவசாயத்தை நோக்கி சென்றுவிட்டதாகவும், தங்கள் வீடுகளைக் கட்டுவதற்குக் கூட புல் கிடைப்பதில்லை என்றும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

"நாங்கள் வீடுகட்டும் புல்லைக் காணவில்லை"

தமிழ்நாடு மழைவாழ் மக்கள் சங்கத்தைச் சேர்ந்தவரும் தோடர் இனத்தில் மூத்தவருமான அடையாளக்குட்டனிடம் பேசியபோது, சோலைக் காடுகளுக்கும் தங்கள் இனத்தின் வாழ்க்கைக்கும் நெருங்கிய தொடர்பு இருந்ததாகவும் தற்போது புல்வெளி நிலம் குறைந்து வருவதால் தங்களது கலாசாரத்தை இழந்து வருவதாகவும் கூறுகிறார்.

''ஒரு காலத்தில் எங்கள் வீடுகளையே சோலைக் காடுகளின் புற்களைக் கொண்டுதான் கட்டுவோம். தற்போது, புற்கள் கிடைப்பது பெரிய சவாலாக இருக்கிறது. அதனால், நாங்கள் வசிப்பதற்கு கான்கிரீட் வீடுகளை்க கட்டிவிட்டு, எங்கள் கோயிலை மட்டும் புற்களைக் கொண்டு கட்டுகிறோம். புற்களைத் தேடிச் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது,'' என்கிறார் அவர்.

மேலும், பெண்கள் கர்ப்பமாக இருக்கும்போது தனித்துவமான செடிகளைக் கொண்டு வில் அம்பு செய்யும் சடங்குக்குக்கூட, செடிகள் தென்படுவதில்லை என்று அவர் கூறுகிறார்.    

''நீலகிரி மலையின் வளைவுகளில் நீங்கள் பயணிக்கும்போது இதமான குளிர்ச்சியை உணர்வீர்கள். அதோடு அந்த மலையின் அழகை ரசிக்கும்போது, மலையில் உயரமான மரங்கள், மலை முகடுகள், திட்டுத் திட்டாக கட்டடங்கள் இருப்பதையும் பார்ப்பீர்கள். இன்ப சுற்றுலா செல்லும் இடமாகத்தான் உங்களில் பலருக்கும் நீலகிரி மலையை தெரியும்.


நாங்கள் பூர்வகுடியாக இந்த மலையை வணங்குபவர்கள். தற்போது மலையைப் பார்த்து கும்பிடும்போது அங்கு அடுக்கடுக்காக உள்ள ரிசார்ட்டுகள், தேயிலைத் தோட்டங்கள், உயரமான வெளிநாட்டு மரங்கள் எல்லாம் எங்களது சோலை காடுகளை அழித்துவிட்டதன் அடையாளமாகத் தென்படுகின்றன. இந்த மலையின் அழிவு என்பது, எங்கள் கலாசார அடையாளத்தின் அழிவாக, எங்கள் இனத்தின் அழிவாகத்தான் பார்க்கிறோம். அதனால் காலநிலை மாற்றம் வந்துவிட்டது என்று நாங்கள் நம்புகிறோம்,''என்கிறார் அவர்.

தோடர் இன மக்களின் வாழ்வியல் குறித்த ஆழ்ந்த அறிவை கொண்டிருப்பவர் தருண் சாப்ரா. தோடர்களின் நிலப்பரப்பு குறித்த புத்தகத்தை எழுதியுள்ள இவர், சோலை காடுகளில் உள்ள புற்களைச் சேகரித்து நர்சரி அமைத்துள்ளார். ''இந்த சோலை காடுகளில் உள்ள புற்களை நம்பித்தான் பல ஆயிரம் ஆண்டுகளாக தோடர் மக்கள் வாழ்ந்தார்கள். எருமை என்பது இவர்களின் புனித விலங்கு.

இவர்கள் எருமை மேய்ப்பதை பிரதானமான வேலையாகச் செய்த மேய்ச்சல் இன மக்கள். சோலைக் காடுகள் குறைந்துவிட்டதால், மேய்ச்சல் நிலங்கள் சுருங்கிவிட்டன.

தற்போது பெரும்பாலான தோடர் மக்கள் விவசாயத்திற்கு மாறிவிட்டார்கள். கேரட் உள்ளிட்ட மலைப்பகுதியில் வளரும் பயிர்களை நம்பி தங்களது பாரம்பரிய மேய்ச்சல் தொழிலை விட்டுச் செல்லும் நிலை இவர்களுக்கு ஏற்பட்டுள்ளது,''என்கிறார் தருண்.

''முந்தைய காலங்களில் வீடுகள் எருமைக்கான இடத்தையும் கொண்டிருக்கும். தற்போது உள் கிராமங்களில் மட்டும்தான் எருமை வளர்ப்பு உள்ளது. பாரம்பரிய நிகழ்வுகளில் எருமை மிகவும் முக்கியம் என்பால் ஒரு சிலர் சிக்கல்களுக்கு மத்தியில் வளர்க்கிறார்கள்.

பழங்கால தோடர் மக்களின் வீடுகளில் 40 வீடுகளை சோலைப் புற்களைக் கொண்டு புனரமைததுள்ளோம். குறைந்தபட்சம் அடுத்த தலைமுறை தங்களது முன்னோர்கள் வாழ்ந்த சுவடுகளைப் பார்க்க ஒரு இடம் இருக்கட்டுமே,'' என்கிறார் தருண்.  

சோலைக் காடுகளில் கிடைக்கும் புற்களைக் கொண்டு தோடர்களின் வீடுகள் கட்டப்பட்டது ஏன் என்று விளக்கிய அவர், ''இந்த புற்களில் அமைக்கப்படும் வீடு குளிர் காலத்தில் இதமான வெப்பத்தைத் தரும்.

பேரல் வடிவில் கட்டப்படும் இந்த வீடுகளின் முகப்பு மூங்கில் கழிகளைக் கொண்டு அமைக்கப்படும்.  வீட்டின் மேல்புறம் முழுவதும் இந்தப் புற்களை வைத்துத்தான் கட்டுவார்கள். ஒருமுறை கட்டப்படும் புல்வீடு சுமார் 10 ஆண்டுகளைத் தாண்டி உறுதியாக நிற்கும். சிறிய வாயில்தான் இருக்கும். அதனால் வெப்பம் வீட்டில் நிறைந்திருக்கும்,'' என்கிறார்.

புல்வெளி அழிந்தால் என்ன ஆகும்?

சோலைக் காடுகளின் அவசியம் பற்றியும் அவற்றின் அழிவுக்கான காரணங்களைப் பற்றி தெரிந்துகொள்ள தாவரவியலாளர் ராஜனை தொடர்பு கொண்டோம். நீலகிரி மலையில் வசிப்பவரான ராஜன், அங்குள்ள தாவரங்களைப் பற்றி ஆய்வுகளில் ஈடுபட்டவர்.


''சோலைக் காடுகளின் அழிவுக்குப் பல காரணங்கள் உள்ளன. பிரிட்டிஷ் ஆட்சியில் தேயிலைத் தோட்டங்கள் கொண்டுவரப்பட்டன. வேட்டில், யூகலிப்டஸ் உள்ளிட்ட பல வெளிநாட்டு மரங்கள் இங்கு நடப்பட்டன.

அவை இங்குள்ள உள்நாட்டு தாவரங்களின் பரப்பை சுருக்கிவிட்டன. பல காலமாக கட்டுக்கடங்காத வகையில் தங்குமிடங்கள் உருக்கப்பட்டதும் ஒரு காரணம். புல்வெளிகளை வனப்பகுதியாகப் பார்க்காமல், அவற்றின் முக்கியத்துவத்தை உணராமல் போனதால், நிலச்சரிவுகள் கூட ஏற்பட்டுள்ளன,'' என்கிறார்.

''சோலைக் காடுகளில் உள்ள புற்கள் நெருக்கமான வேர்களைக் கொண்டிருக்கும் என்பதால், பனி பெய்யும்போது, அவை நீரை அதிகளவில் தேக்கிவைக்கும். சிறிய நீரோடைகளுக்கு இந்த சோலைக் காடுகளே ஊற்றுக் கண்.

இவை அழிவதால், அதிக மழைப் பொழிவு ஏற்படும்போது தண்ணீர் நேரடியாக நீலகிரி மலையின் சாலைகளில் ஓடுகிறது. மண் அரிப்பும் ஏற்படுகிறது. அதனால் நிலச்சரிவுகள் அதிகரித்துவருகின்றன. குறைந்தபட்சம், தற்போதுள்ள புல்வெளிகளை அழிக்காமல் இருந்தால், சில காலத்தில் அவை மீண்டும் அதிகரிக்க வாய்ப்புண்டு,'' என்கிறார் ராஜன்.