திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By bala
Last Updated : வியாழன், 12 அக்டோபர் 2017 (16:12 IST)

உள்ளே அழுகை; வெளியில் சிரிப்பு: கால்பந்து வீரருக்கு வந்த விநோத நோய்

"உள்ளே அழுகிறேன். வெளியில் சிரிக்கிறேன். நல்ல வேஷம்தான் வெளுத்து வாங்குறேன்..." என்கிற பழைய தமிழ்த் திரைப்படப் பாடலை நினைவுபடுத்துகிறது பால் பியூவுக்கு வந்திருக்கிற விநோத நோய். தன் வாழ்க்கையில் ஒரு முக்கியமான கட்டத்தில் இருந்தார் பால் பியூ. பலமாகத் தாக்கப்பட்டதால் அவரின் மூளையில் ஏற்பட்ட காயத்தால் அவரது வாழ்க்கை இனி எப்படி இருக்கும் என்பதை மருத்துவர்கள் அப்போது தெரிவித்தனர்.





அந்த சந்திப்பு நிறைவடையும் வரை அவர் கட்டுக்கடங்காமல் சிரித்துக்கொண்டே இருந்தார். ஆனால், தேம்பித் தேம்பி அழுவதாகவே அவர் உணர்ந்தார். அது ஒரு நோய் என்று அவருக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை. தற்போது 37 வயதாகும் பால், கடந்த ஜனவரி 2007-இல் தன் கால்பந்துக் குழுவின் நண்பர்களுடன், தனது சொந்த ஊரான மேற்கு வேல்சில் உள்ள அம்மன்ஃபோர்டில், இரவைக் கழிக்க வெளியே சென்றிருந்தபோது அடையாளம் தெரியாத நான்கு பேரால் கடுமையாகத் தாக்கப்பட்டார். அவரது மண்டை ஓட்டில் காயம் ஏற்பட்டது. பின்னர் இரண்டு மாதங்கள் கோமா நிலையில் இருந்தார். அவரது மூளையில் 10 செ.மீ நீளமும், 4 செ.மீ அகலமும் கொண்ட ஒரு ரத்தக் கட்டு உருவானது.


பேசுவதிலும் நடப்பதிலும் கடுமையான சிக்கலை எதிர்கொண்ட அவர் சக்கர நாற்காலியில் தன் வாழ்வின் மீதமிருக்கும் காலத்தைக் கழிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். மொத்தமாக 13 மாதங்கள் மருத்துவமனையில் கழித்த அவர், நான்காம் மாதம்தான் இந்த நோய்க்கு ஆளானார். "மருத்துவர்களும், மறுவாழ்வு சிகிச்சை நிபுணர்களும் என் குடும்பத்தினர் இருக்கும்போதே என் எதிர்காலம் இனி எப்படி இருக்கும் என்பதைப் பேச ஆரம்பித்தனர். எனக்கு அப்போது மிகவும் பயமாக இருந்தது," என்று கூறும் அவர், அந்த உணர்வு தன் மூளைக்குள் எதையோ தூண்டியதாகவும், அதனால்தான் தொடர்ந்து சிரித்துக்கொண்டே இருந்ததாகவும் அவர் கூறினார்.

"நான் உண்மையில் அழுதுகொண்டு இருந்தேன். ஆனால், அது எனக்கு சிரிப்பாக வெளியானது," என்கிறார் பால். முதலில் அவர் அவ்வாறு சிரிப்பது பிறரின் கவனத்தை ஈர்க்கத்தான் என்று அவரது குடும்பத்தினர் நினைத்தனர். ஆனால், அது சூடோபல்பர் அஃபெக்ட் (Pseudobulbar Affect (PBA)) எனப்படும் நோய்ச் சிரிப்பு என்பது சில ஆண்டுகள் கழித்தே கண்டுபிடிக்கப்பட்டது.


 



உணர்வுகளைக் கட்டுப்படுத்தும் மூளையின் முன் பகுதியுடன், உணர்வுகளை வெளிப்படுத்துவத்தைக் கையாளும் சிறு மூளை மற்றும் மூளைத் தண்டு ஆகியவற்றுக்கு இடையே உள்ள இணைப்பு சேதமடையும்போது இந்த நிலை உண்டாகிறது. நரம்பியல் நோய்கள், அல்சைமர் நோய் மற்றும் உடலில் உள்ள திசுக்களின் இறுக்கம் உள்ளிட்ட உடல்நலக் கோளாறுகள் இருப்பவர்களுக்கு இந்த நோய் வரும். "உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியாமல், சமூக சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் அல்லாமல் முறையற்ற வகையில் உணர்வுகளை வெளிப்படுத்துதல் மற்றும் ஒரு நபர் தான் உணர்வதை சீரற்ற வகையில் வெளிப்படுத்துவது ஆகியவையே இந்த நோய்," என்கிறார் நரம்பியல்-உளவியல் நிபுணர் ஆண்டி டயர்மேன்.


"நான் சிரிக்கும்போது உண்மையில் அழுகிறேன் என்று எனக்குத் தெரியும். ஆனால், அதை அறியாமல், நான் நேரெதிராக நடந்துகொள்வதால், சிலர் என்னிடம் கோபமாகவும், என் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையிலும் நடந்து கொள்வார்கள்," என்கிறார் பால்.
"நாம் சிரிப்பை மிகவும் சாதாரணமாக எடுத்துக் கொள்கிறோம். ஆனால், உங்களுக்குப் பிடித்த ஒருவரிடம் ஒரு நகைச்சுவையைப் பகிர்ந்துகொள்ளும்போது, சிரிப்பு மிகவும் வலிமையான தாக்கத்தை உண்டாக்கும்," என்கிறார் பால்.


பாலின் தாய் நெஸ்டா அவரை முழு நேரமும் கவனித்துக் கொள்கிறார். 72 வயதான அவரது தந்தையும், பாலின் இரண்டு சகோதரர்களும் அவருக்கு உதவியாக இருக்கின்றனர். தன் குடும்பம் தன்னை புரிந்து நடந்து கொள்வதாக பால் கூறுகிறார்.






சிரிப்பு வருவதற்கு சில நொடிகள் முன்பே அதை என்னால் உணர முடிவதால் சில நேரங்களில் அதை என்னால் கட்டுப்படுத்த முடியும். சிரிப்பு வந்தாலும் அதிகபட்சமாக ஒரு நிமிடமே நீடிக்கும். அதைப் பிறர் புரிந்துகொள்ளாமல் போனால் பிரச்சனை உண்டாக அந்த ஒரு நிமிடமே போதும்," என்கிறார் பால்.
உணர்வுகளுக்கு ஆட்படாமல் மோசமான சூழ்நிலைகளையும், மனிதர்களையும் நினைத்துப் பார்ப்பதன் மூலம் சிரிப்பால் நிகழும் விபரீதங்களை அவர் தவிர்த்து வருகிறார். பத்தில் ஒன்பது முறை அவரால் தனது சிரிப்பைக் கட்டுப்படுத்த முடிவதாகக் கூறுகிறார்.

பால் பியூ தாக்குதலுக்கு உள்ளாகி 10 ஆண்டுகள் ஆகின்றன. தான் பார்த்து வந்த எலெக்ட்ரீஷியன் வேலையை அவர் விட்டுவிட்டார். உள்ளூரில் உள்ள ஹெட்வே கார்மர்தென்ஷைர் (Headway Carmarthenshire ) எனும் ஒரு தொண்டு நிறுவனத்துக்கு செல்வதன் மூலம், மூளையில் காயமடைந்தவர்களை பற்றி புரிந்துகொள்ள முடிவதாகவும், தான் தனியாக இல்லை என்பதையும் உணர்வதாக அவர் கூறுகிறார்.

அந்தத் தாக்குதலுக்குப் பிறகு, எனக்கு உதவ விரும்பும் மிகச்சிறந்த மனிதர்கள் பலரையும் சந்தித்துள்ளேன். இன்னொரு புறமோ, என்னால் வெளியில் நடமாட முடியாததால் வீட்டுச் சிறையில் இருப்பதைப் போல உணர்கிறேன்," என்கிறார். 2014-இல் பால்ஸ் பிலெட்ஜ் (Paul's Plegde) எனப்படும் மதுப்பழக்கத்தால் உண்டாகும் வன்முறைகளுக்கு எதிரான பிரசாரம் ஒன்றை டைஃபெட் - போவிஸ் காவல் துறையுடன் இணைந்து செய்து வருகிறார். பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் இளைஞர் மன்றங்களுக்கு பால் செல்கிறார். "இது உண்மையானதுதான், அரங்கேற்றப்பட்டது அல்ல என்பதை அவர்கள் பார்க்கிறார்கள்," என்கிறார் பால்.

"என்னால் செய்ய முடியாத விடயங்கள் பல இருக்கின்றன. ஆனால், இந்தப் பிரசாரத்தை என்னால் செய்ய முடியும். இது இந்த உலகிற்கு ஒரு வலிமையான செய்தியைத் தெரிவிக்கும் என்று நான் நம்புகிறேன். நானும் என் குடும்பமும் இருக்கும் இத்தைகைய சூழ்நிலை வேறு யாருக்கும் ஏற்படுவதை நான் விரும்பவில்லை," என்கிறார் பால். பாலைத் தாக்கிய நான்கு நபர்களும் ஒன்பது மாதங்கள் முதல் நான்கு ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கப்பட்டனர்.

"என் உயிரே போகும் அளவுக்கு, என் தலையில் வேகமாக உதைத்த அந்த நபரும் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுவிட்டார். ஆனால், என்னுடைய நிலை என்ன? பத்து ஆண்டுகள் கழித்தும், நான்தான் இன்னும் தண்டனையை அனுபவித்துக்கொண்டு இருக்கிறேன்," என்று முடிக்கிறார் பால்.