செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By bala
Last Modified: திங்கள், 9 அக்டோபர் 2017 (18:49 IST)

சீனாவின் ‘கழுதைப் பசி’க்கு பலியாகும் ஆப்ரிக்க கழுதைகள்

சீனாவில் ஆரோக்கிய உணவு பொருட்களை உருவாக்கவும், பாரம்பரிய மருந்துகளை உற்பத்தி செய்யவும் கழுதைகளின் தோல்கள் தேவைப்படுவதால் தற்போது அதற்கு பெரியளவில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், ஆப்ரிக்கக் கழுதைகள், நெருக்கடி ஒன்றை எதிர்கொண்டுள்ளன. சீனாவில், கழுதையின் இறைச்சி பிரபலமான உணவாகவும் இருக்கிறது . ஆனால் சீனாவில் உள்ள கழுதைகளின் எண்ணிக்கையில் பெரியளவிலான வீழ்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில், கழுதையின் தோலுக்காக சீனாவை தவிர்த்து பிற நாடுகளில் அதனை பெறும் சூழலுக்கு கழுதை இறைச்சி விநியோகஸ்தர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.







இதனால் ஆஃப்ரிக்கா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. காரணம், கழுதைகள் அங்குள்ள மக்களின் அன்றாட வாழ்வியலில் போக்குவரத்து மற்றும் விவசாயத்திற்காக பயன்பட்டு வருகின்றன. அதிலும், குறிப்பாக அந்நாட்டிலுள்ள ஏழ்மையான சமூகங்களில் கழுதைகள் மிகவும் முக்கியமான விலங்குகள்.


கடந்த சில ஆண்டுகளில் மட்டும், ஆப்ரிக்காவின் பல பகுதிகளில் கழுதையின் விலை இரட்டிப்பாகியுள்ளது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு திருடர்கள் கழுதைகளை திருடுவதால், குடும்பங்கள் புதிய கழுதையை வாங்க முடியாத நிலைக்குத் தள்ளப்படுகின்றன.

கழுதையை இழந்த அந்தோனி


 


கென்யாவில் தண்ணீர் விநியோகிக்கும் தொழில் செய்து வரும் அந்தோனி மெளப் வனியமாவுக்கு 29 வயதாகிறது. சுமார் நான்கு ஆண்டுகளாக கார்லோஸ் என்ற கழுதையை தன்னோடு வைத்திருந்தார் அவர். தொழிலும் நல்லபடியாக சென்றுகொண்டிருந்தது. '' தலைநகருக்கு வெளியே உள்ள பகுதியில் இடமும், வீடு ஒன்றையும் வாங்கினேன், பள்ளிக்கான கட்டணங்களை செலுத்தியது மட்டுமின்றி என்னுடைய குடும்பத்தையும் நன்கு பார்த்து கொண்டேன்'' என்கிறார் இரு பிள்ளைகளுக்கு அப்பாவான அந்தோணி.



 



கென்யா தலைநகர் நைரோபிக்கு வெளியே இருக்கும் ஒங்காட்டா ரோங்கை என்ற கிராம வாழ்வியல் சூழலில் அந்தோணியும், அவரது கழுதையும் ஒரு அங்கமாக இருந்தனர். ''ஒரு காலை நேரத்தில் நான் விழித்தெழுந்த போது என்னுடைய கழுதை காணாமல் போயிருந்தது. ஊர் முழுக்க சுற்றித் திரிந்த பிறகு, அதன் தோல் உரிக்கப்பட்ட நிலையில் இறந்து கிடைந்ததை கண்டுபிடித்தேன்'' என்று தான் மிகவும் நேசித்த கழுதையின் மரணத்தை பற்றி விவரிக்கையில் அந்தோணியின் கண்களிலிருந்து நீர் வடிகிறது.

தற்போது, வேறொரு கழுதை ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ள அந்தோணி, தண்ணீர் விநியோகத்திற்கு பயன்படுத்தப்படும் நீல நிற பிளாஸ்டிக் ஜெர்ரி கேன்களை சுமந்து செல்லும் வண்டியை இழுப்பதற்காக பயன்படுத்துகிறார். தொழில் நன்றாக இருக்கும் நாளில் கூட, அவர் தினசரி சம்பாதிக்கும் மூன்று அல்லது நான்கு டாலர்களில் பாதி தொகையை கழுதையின் உரிமையாளருக்கு வழங்கிவிட வேண்டும். புதிய கழுதை ஒன்றை வாங்க பணமில்லாமல் சிரமப்படுகிறார் அந்தோணி.


துன்பம்

கென்யாவில் கழுதைகளின் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு , அந்நாட்டில் மூன்று கழுதை இறைச்சி வெட்டும் கூடங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில், அதிகரித்துள்ளது. அந்நிறுவனங்கள் தலா, ஒரு நாளைக்கு சுமார் 150 விலங்குகளை வெட்டி, அதன் இறைச்சியை பேக் செய்து குளிரூட்டி மற்றும் அதன் தோலை ஏற்றுமதிக்காக பதப்படுத்தும் திறன் கொண்டவை. நைவாஷாவில் உள்ள 'ஸ்டார் பிரில்லியண்ட்' என்ற கழுதை தோல் ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தில், சமீபத்தில் கூடத்திற்கு கொண்டுவரப்பட்ட கழுதைகள் தட்டையான உலோக தராசுகள் மீது தரதர இழுத்து எடை பார்க்கப்படுகின்றன. நேரடி எடை கொண்டு அவை விற்கப்படுகின்றன. கழுதையின் இறைச்சி மற்றும் தோல் பதப்படுத்துவதற்காக எடுக்கப்படுவதற்கு முன் ஒரு துப்பாக்கியை கொண்டு அதன் தலையில் சுடப்படுகிறது.


''முன்பு கழுதைகளுக்கு சந்தை இருக்கவில்லை. அப்போது, மக்கள் தங்களிடமிருந்த மாடுகளை விற்று வந்தனர். ஆடுகளை விற்று குழந்தைகளின் பள்ளி கட்டணத்தை கட்டினார்கள்,'' என்கிறார் ஸ்டார் பிரில்லியண்ட் என்ற அந்நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஜான் கரியூகி. ''ஆனால், தற்போது மாடுகளை காட்டிலும் கழுதைகளை பொதுமக்கள் அதிகளவில் விற்று வருகிறார்கள் என்பதை நான் நேரிடையாக பார்க்கிறேன்.'' என்கிறார் அவர்.


'சீனாவினால்தான் தற்போது கழுதைகளுக்கு கிராக்கி ஏற்பட்டு அதனால் பலருக்கு லாபம் கிடைக்கின்றது. முன்பு, கழுதைகளால் லாபம் எதுவும் கிடையாது.'' என்கிறார் அவர். சீன வியாபாரிகள் இந்த நடைமுறையை கண்காணிக்கிறார்கள். அதாவது, கழுதைகள் முறையாக பேக் மற்றும் பதப்படுத்தப்படுகின்றனவா என்று.

கழுதை சித்ரவதைக்கு எதிராக குரல்கள்

கழுதையின் தோல்கள் கொதிக்க வைக்கும்போது, பழுப்புநிறத்திலான ஜெலட்டின் என்ற ஒருவகை வழுவழு பொருளை உற்பத்தி செய்கிறது. அது, சீனாவின் பிரபலமான ஆரோக்கிய உணவுகள் மற்றும் பாரம்பரிய மருந்துகளை தயார் செய்யும் எஜியோ என்ற பொருட்களை தயாரிக்க அத்தியாவசிய மூலப்பொருளாக இருக்கிறது.ஆனால் கழுதைகள் நடத்தப்படும் விதம் விமர்சனங்களுக்குள்ளாகிறது.




 

இந்த கழுதைகள் கொல்லப்படுவதற்காக காத்திருக்கும் நிலையில், மிகவும் மோசமான நிலைமைகளை எதிர்கொள்கின்றன. இவ்விலங்குகள் துஷ்பிரயோகம் செய்யப்படும் சம்பவங்களையும் பிரிட்டனைச் சேர்ந்த கழுதை நல அறக்கட்டளை ஒன்றும், தென்னாப்ரிக்காவைச் சேர்ந்த 'ஆக்ஸ்பெக்கர்ஸ்' என்ற அமைப்பைச் சேர்ந்த சுற்றுச்சூழல் புலனாய்வு செய்தியாளர்கள் சிலரும் கண்டறிந்துள்ளனர்.கழுதைகளின் தோலை எளிதாக உரிப்பதற்கு ஏதுவாக, அவை பட்டினி போடப்படுகின்றன என்றும் , முனை மழுங்கிய ஆயுதங்களால் அடித்துக் கொல்லப்படுகின்றன என்றும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஆனால் சர்வதேச அழுத்தம் இப்போது தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியிருப்பதாகக் கூறுகிறார் , இந்த கழுதை உடல் பொருட்கள் வர்த்தகத்தை, அது ஒழுங்குபடுத்தப்படும் வரை நிறுத்த பிரசாரத்தை முன்னெடுக்கும் 'டாங்க்கி சேன்க்ச்சுவரி' என்ற அமைப்பைச் சேர்ந்த மைக் பேக்கர். உகாண்டா, தான்சானியா, போட்ஸ்வானா, நைஜர், புர்க்கினோ ஃபாஸோ மாலி மற்றும் செனகல் போன்ற நாடுகள் , சீனா தங்கள் நாடுகளிலிருந்து கழுதை உடல் பொருட்களை வாங்குவதற்குத் தடை விதித்துள்ளன.