1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: புதன், 19 ஜூன் 2019 (21:19 IST)

அட்லாண்டிக் பெருங்கடலின் மரண ஓலமும், அதனை காக்க பெரும் திட்டமும்

ஒரு பெருங்கடல் ஆரோக்கியமாக இருக்கிறதா என்று பார்க்க மிகப் பெரிய ஆய்வு திட்டமொன்று தொடங்கப்பட்டுள்ளது. ஆம், அட்லாண்டிக் பெருங்கடல், அதில் வாழும் உயிரினங்கள், அதிலுள்ள பவளப்பாறைகள் அனைத்தும் நலமாக இருக்கிறதா என்பதை பரிசோதிக்க ஐ-அட்லாண்டிக் திட்டம் எனும் ஒரு சர்வதேச ஆய்வு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

 
அட்லாண்டிக் பெருங்கடல்தான் இந்த கிரகத்தின் இரண்டாவது பெரிய கடல்.
 
பருவநிலை மாற்றமும், பெருங்கடல்களும்
ஐரோப்பிய ஒன்றியத்தால் நிதி அளிக்கப்பட்ட இந்த திட்டத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட அமைப்புகள் இணைந்துள்ளன. இதனை ஒருங்கிணைப்பது எடின்பர்க் பல்கலைக்கழகம்.
 
இதற்காக கடலுக்குள் ஆய்வு செய்யும் ரோபோக்கள் உள்ளிட்ட உயர் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இது ஆர்க்டிக் முதல் தென் அமெரிக்கா முதல் உள்ள கடல்பரப்பை ஆய்வு செய்யும்.
 
பருவநிலை மாற்றம் கடலுக்கடியில் உள்ள தாவரங்கள் மற்றும் பிற உயிரினங்கள் மீது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்று மதிப்பிடும்.
 
இந்த் ஆய்வின் முடிவுகள் அட்லாண்டிக் குறித்த திட்டங்களை அரசு முன்னெடுக்க உதவும்.
 
மும்முனை தாக்குதல்
 
மும்முனைத் தாக்குதலில் அட்லாண்டிக் பெருங்கடல் மூச்சுத் திணறுவதாக கூறுகிறார் ஐ-அட்லாண்டிக் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் மர்ரி ரோபர்ட்ஸ்.
 
மேலும் அவர், "அட்லாண்டிக் பெருங்கடல் பிராண வாயுவை இழந்து வருகிறது," என்கிறார்.
 
இதற்கு முக்கிய காரணம் பருவநிலை மாற்றம். புவி வெப்பத்தில் 90 சதவிகிதத்தை பெருங்கடல்களே உறிஞ்சுகின்றன.
 
இந்த குழுவானது 12 இடங்களில் ஆய்வை மேற்கொள்ள இருக்கிறது. வளப்பாறைகளும் அழிந்து வருவதாக கூறுகிறார் பேராசிரியர் லாரண்ஸ்.
 
பவளப்பாறைகள் பல கடல்வாழ் உயிரினங்களின் வாழ்விடம். பவளப்பாறைகள் அழிவென்பது பல உயிரினங்களின் அழிவு.
 
கடல் வெப்பம், உப்புத்தன்மை, மற்றும் பிராண வாயு ஆகியவை இந்த ஆய்வில் முதன்மையாக கருத்தில் எடுத்துக்கொள்ளப்படும் என்கிறார் பேராசிரியர் கன்னின்கம்.
 
அதுபோல எவ்வளவு சூரிய ஒளி பெருங்கடலுக்குள் நுழைகிறது என்பதையும் கருத்தில் எடுத்துக் கொள்ளப்படும் என்கிறார் அவர்.
 
'உண்மையான சவால்'
 
இந்த திட்டத்திற்காக ஐரோப்பிய ஒன்றியம் 10 மில்லியன் யூரோக்கள் வழங்குகிறது.
 
இந்த திட்டத்தில் இணைந்துள்ள பிற அமைப்புகள், நிதி மற்றும் இதற்கான தொழில்நுட்பத்தை வழங்குகின்றன. இதனுடைய மதிப்பு முப்பது மில்லியன் யூரோக்கள்.
 
"கடலின் இயல்பு எப்படி மாறுகிறது? எதனால் மாறுகிறது? என்பதை ஆராய்வதே எங்கள் நோக்கம். இதனை புரிந்து கொள்வதன் மூலம் எதிர்காலத்தில் என்ன சவாலை நாம் எதிர்கொள்ள போகிறோம் என்பதை புரிந்துகொள்ள முடியும்.
 
இதனை புரிந்து கொண்டபின், இதற்கு என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுக்கலாமென அரசுக்கு அழுத்தம் கொடுக்க முடியும்” என்கிறார் பேராசிரியர் ராபர்ட்.
 
பிற செய்திகள்: