1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: திங்கள், 15 ஜூலை 2019 (21:37 IST)

ஹெல்மெட்டுக்குள் வைத்து பேசியபடி சென்ற போது செல்போன் வெடித்து வாலிபர் படுகாயம்

ஹெல்மெட்டுக்குள் செல்போனை வைத்து பேசியபடி இருசக்கர வாகனத்தில் வாலிபர் சென்ற போது செல்போன் வெடித்ததில், அவர் படுகாயம் அடைந்தார் என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.
"கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே புலியரசியை அடுத்த குருபரபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 30). இவர் நேற்று காலை சூளகிரியில் தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். ஹெல்மெட் அணிந்தபடி சென்ற அவர், செல்போனை ஹெல்மெட்டுக்குள் வைத்து பேசியபடி சென்றார்.
 
அப்போது அதிக வெப்பம் காரணமாக செல்போன் திடீரென்று வெடித்தது. இதில் ஆறுமுகத்தின் காது, கன்னம் ஆகிய இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டு அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள், ஆறுமுகத்தை மீட்டு சிகிச்சைக்காக சூளகிரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
 
அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்ததும் சூளகிரி போலீசார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்." என்கிறது அந்நாளிதழ்.
 
தினமணி: 'அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தார் சித்து'
பஞ்சாப் மாநிலத்தில் முதல்வர் அமரீந்தர் சிங்குடன் மோதல் போக்கில் ஈடுபட்டு வந்த அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து தனது பதவியை ஞாயிற்றுக்கிழமை ராஜிநாமா செய்தார் என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.
 
பஞ்சாப் மாநிலத்தில் அமரீந்தர் சிங் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அவரது அமைச்சரவையில், சித்துவுக்கு உள்ளாட்சி, சுற்றுலா, கலாசார விவகாரங்கள் துறை வழங்கப்பட்டிருந்து. தொடக்கம் முதலே பல்வேறு விவகாரங்களில் அமரீந்தர் சிங்குக்கும், சித்துவுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது.
 
இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் 6-ஆம் தேதி அமைச்சரவையை அமரீந்தர் சிங் மாற்றியமைத்தார். அதில், சித்துவிடம் இருந்த துறைகள் பறிக்கப்பட்டு, மின்சாரம் மற்றும் மரபுசாரா எரிசக்தித் துறை ஒதுக்கப்பட்டது. அமைச்சரவை மாற்றத்தின்போது, மேலும் சில அமைச்சர்களின் துறைகளும் மாற்றப்பட்டன. அடுத்த இரண்டு நாள்கள் கழித்து, அரசின் திட்டங்களை அமல்படுத்துவதற்கு ஆலோசனைகளை வழங்கும் குழுவை முதல்வர் நியமித்தார். அந்தக் குழுவில் சித்துவுக்கு இடமளிக்கப்படவில்லை.
 
இதைத் தொடர்ந்து, தில்லி சென்ற சித்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியைச் சந்தித்து, தனது சூழ்நிலை எடுத்துரைத்து, அவரிடம் கடிதம் ஒன்றை அளித்தார். அதைத் தொடர்ந்து, காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேலையும் சித்து சந்தித்துப் பேசினார். சித்து-அமரீந்தர் சிங் இடையே அவர் சமரசப்பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
 
அதைத் தொடர்ந்து, ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா, அகமது படேல் ஆகியோருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் சித்து தனது முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் வெளியிட்டிருந்தார்.
 
புதிய துறையின் அமைச்சராக நியமிக்கப்பட்டு ஒரு மாதத்துக்கு மேலாகியும், முதல்வர் உடனான கருத்து வேறுபாடு காரணமாக, பதவியேற்காமல் சித்து தவிர்த்து வந்தார். மேலும், அவரும், அவருடைய மனைவி நஜ்வோத் சிங் கெளரும் எந்த ஊடகத்துக்கும் பேட்டியளிக்காமல் தவிர்த்து வந்தனர்.
 
இந்நிலையில், தனது ராஜிநாமாவை சித்து ஞாயிற்றுக்கிழமை பகிரங்கமாக அறிவித்தார்.
 
- இவ்வாறாக அந்நாளிதழ் விவரிக்கிறது.
அஞ்சல் துறையில் காலியாக உள்ள தபால்காரர், மெயில்கார்டு, உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு சென்னை, கோவை, மதுரை, திருச்சி என தமிழகம் முழுவதும் 4 இடங்களில் நேற்று நடைபெற்றது. இத்தேர்வை 989 பேர் எழுதினர் என்கிறது இந்து தமிழ் நாளிதழ் செய்தி.
 
பின் வருமாறு அந்நாளிதழ் விவரிக்கிறது,
 
இந்திய அஞ்சல் துறையின் கீழ், நாடுமுழுவதும் 1.5 லட்சம் அஞ்சல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் காலியாக உள்ள தபால்காரர், மெயில் கார்டு, உதவியாளர், பன்முகத் திறன் ஊழியர் உட்பட பல்வேறு பணியிடங்கள் போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. இத்தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் இந்தி, ஆங்கிலம் மற்றும் உள்ளூர் மொழி என மூன்று மொழிகளில் அமைந்திருக்கும்.
 
இந்நிலையில், கடந்த 2015-ம் ஆண்டு அஞ்சல் துறையில் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு நடந்தது. இதில் ஹரியாணா, பிகார் உள்ளிட்ட வடமாநில மாணவர்கள் தமிழ் தேர்வுகளில் அதிக மதிப்பெண்களை எடுத்து தேர்ச்சி பெற்றது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் காரணமாக, கடந்த 4 வருடங்களாக அஞ்சல் துறைகளுக்கான தேர்வுகள் ஏதும் நடத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது.
 
இதையடுத்து, காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி அஞ்சல்துறை ஊழியர்கள் விடுத்த தொடர் கோரிக்கையை அடுத்து, கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு அஞ்சல் துறை எழுத்தர் மற்றும் ஏற்கெனவே பதவியில் உள்ளவர்கள் பதவி உயர்வு பெறுவதற்கான தேர்வு, மற்றும் பன்முக திறன் கொண்ட ஊழியர்களுக்கான தேர்வு, தபால் காரர் பதவி உயர்வுக்கான தேர்வு ஆகியவற்றுக்கான அறிவிப்பை அஞ்சல் துறை அண்மையில் வெளியிட்டது. இதற்கான தேர்வு நேற்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
 
இதற்கிடையே, மத்திய தொலை தொடர்பு துறை கடந்த 11-ம் தேதி அனுப்பிய சுற்றறிக்கையில், இனி அஞ்சல் துறை தேர்வுகளில் முதல் வினாத்தாள் இந்தி மற்றும் ஆங்கிலம் என இருமொழிகளில் மட்டுமே கேட்கப்படும். 2-ம் தாள் தேர்வை உள்ளூர் மொழிகளில் எழுதலாம். அதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு தேர்வர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை உண்டாக்கியது. இதை எதிர்த்து மதுரை உயர் நீதிமன்ற கிளையிலும் நேற்று முன் தினம் அவசர வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதி மன்றம் தேர்வை நடத்த அனுமதி வழங்கியது. ஆனால், தேர்வு முடிவு களை வௌளியிட தடை விதித்தது. இதையடுத்து அஞ்சல் துறை தேர்வு நேற்று நடைபெற்றது.
 
கிராமப்புற அஞ்சலக ஊழியர்கள் அஞ்சல் துறை எழுத்தராக பதவி உயர்வு பெறுவதற்கு இத்தேர்வு நடத்தப்பட்டது. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய 4 இடங்களில் நடை பெற்ற இத்தேர்வை அஞ்சல் துறையில் ஏற்கனவே பணியாற்றி வரக்கூடிய 989 பேர் பதவி உயர்வு, பணி நிரந்தரம் பெறுவதற்காக எழுதினர். 150 மதிப்பெண்களை கொண்ட இத்தேர்வு 3 மணி நேரம் நடைபெற்றது. ஆங்கிலம் மற்றும் இந்தியில் தேர்வு நடைபெற்றதற்கு தேர்வர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
 
ஆந்திராவின் கர்னுல் மாவட்டம், பெலகல் கிராமத்தில் உள்ள உறைவிட பள்ளி ஹாஸ்டலில் பேய் நடபாட்டம் இருப்பதாக வதந்தி பரவ, அங்கிருந்த அனைத்து பெண்களும் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பியதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
 
அந்த உயர்நிலைப்பள்ளியில் 75 மாணவிகள் உள்ளனர். பெலகல் கிராமத்திற்கு சற்று வெளியே உள்ள மலைப்பகுதியில் இந்த பள்ளி அமைந்துள்ளது.
 
கடந்த வெள்ளிக்கிழமை அன்று நடு இரவில் எழுந்த 11ஆம் வகுப்பு மாணவி ஒருவர், ஹாஸ்டல் வளாகத்தில் ஏதோ அமானுஷ்ய சப்தங்கள் கேட்டதாக தெரிகிறது. சனிக்கிழமை காலை, அந்த மாணவி தனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்து, தனது சொந்த ஊர் திரும்பியுள்ளார். இந்த விஷயத்தை அவர், மற்ற பெண்களிடம் கூற, அந்த ஹாஸ்டல் முழுக்க இது பரவியது.
 
ஞாயிற்றுக்கிழமை பல பெற்றோர் அங்கு வந்து, அவர்களது பிள்ளைகளை அங்கிருந்து கூட்டிச் சென்றனர்.
 
"வார இறுதி நாட்களில் தங்கள் சொந்த ஊர்களுக்கு போக வேண்டும் என்பதற்காக மாணவிகள் நடத்திய நாடகம் இது" என்று அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் கிஷோர் தெரிவித்தார்.