பாரதிய ஜனதா கட்சியை நிராகரித்த தமிழகம் - இந்தியளவில் டிரெண்டாகும் ஹாஷ்டேக்
பாரதிய ஜனதா கட்சியை நிராகரித்த தமிழகம் என்ற ஹாஷ்டேக் இந்தியளவில் ட்விட்டரில் டிரெண்டு பட்டியலில் இடம்பிடித்துள்ளது.
இந்தியாவில் நடைபெற்று முடிந்த 17வது மக்களவைத் தேர்தலில், 542 தொகுதிகளில், 351 தொகுதிகளை கைப்பற்றி பாரதிய ஜனதா கட்சி பிரம்மாண்ட வெற்றி பெற்றது. 2014ஆம் ஆண்டோடு ஒப்பிடும்போது, பாஜக கைப்பற்றிய தொகுதியின் எண்ணிக்கை அதிகம். ஆனால் தமிழகத்திலோ, நிலைமை வேறாக இருக்கிறது. புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் உட்பட 40 மக்களவைத் தொகுதிகளில் தேனியை தவிர்த்து தி.மு.க கூட்டணி 39 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
தேனியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட தமிழக அரசின் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் சுமார் 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இச்சூழலில், ட்விட்டரில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை முதல் #TNRejectsBJP என்ற இந்த ஹாஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. பாஜகவை தமிழக வாக்காளர்கள் நிராகரித்ததை விமர்சித்தும், ஆதரவு தெரிவித்தும் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.
இந்த ஹாஷ்டேக்கை பயன்படுத்தி சமூக ஊடக பயனர்கள் என்னென்ன கருத்துகளை விவாதித்து வருகிறார்கள் என்பதை இங்கு தொகுத்து அளித்துள்ளோம்.
"மத்திய அரசின் உதவியின்றி மாநில அரசால் செயல்பட முடியாது. வெள்ள பேரழிவு, சுனாமி, புயல் போன்ற இயற்கை சீற்றங்களை தொடர்ந்து ஒவ்வொரு முறையும் மத்திய அரசிடம் மாநில அரசு பிச்சைக் கேட்கும். பாஜகவை நிராகரித்ததற்கு தமிழகம் அசிங்கப்பட வேண்டும்." என்று பதிவிட்டுள்ளார் ராஜி ராஜன்.