திங்கள், 9 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 7 அக்டோபர் 2024 (18:00 IST)

அரசு மருத்துவமனைகளுக்கு சப்ளை செய்யப்பட்ட டால்கம் பவுடர், மாவு கலந்த போலி மாத்திரைகள்; எப்படி நடந்தது?

Pills

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரிக்கு போலி மருந்துகள் சப்ளை செய்யப்பட்டது சமீபத்தில் தெரிய வந்துள்ளது. இதன் பின்னணியில் செயல்பட்ட கும்பலை காவல்துறை கைது செய்துள்ளது.

 

 

நாக்பூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு 'ரிக்லேவ் 625' என்ற ஆன்டிபயாடிக் மருந்து சப்ளை செய்யப்பட்டது. இந்த மருந்துகள் மருத்துவமனைக்கு வந்த நோயாளிகளுக்கு வழங்கப்பட்டது.

 

இந்த விவகாரம் தொடர்பாக நான்கு நிறுவனங்களின் இயக்குநர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

 

காவல்துறை வெளியிட்ட விவரங்களின்படி, ஆகஸ்ட் 21, 2023 அன்று, உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகத்துறை அதிகாரிகள், அரசு மருத்துவக் கல்லூரியின் மருந்து விற்பனையகத்தில் இருந்து சில மருந்து மாதிரிகளை மும்பையில் உள்ள ஆய்வகத்திற்கு சோதனைக்காக அனுப்பினர்.

 

2024-ஆம் ஆண்டு ஜூலை 31-ஆம் தேதி உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகத்துறை மாவட்ட அலுவலகத்திற்கு அந்த ஆய்வு முடிவுகள் பற்றிய அறிக்கை கிடைத்தது. இந்த மருந்துகள் போலியானவை என்பதை ஆய்வு அறிக்கை தெளிவுபடுத்தியது.

 

அதன்பிறகு, உணவு மற்றும் மருந்துகள் நிர்வாக ஆய்வாளர் நிதின் பண்டார்கர் அக்டோபர் 2-ஆம் தேதி காவல்துறையில் புகார் செய்தார். நான்கு நிறுவனங்களின் இயக்குநர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

 

நாக்பூரில் உள்ள அஜ்னி காவல் நிலைய ஆய்வாளர் நிதின் சந்திர ராஜ்குமார், இதில் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் மற்றவர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக பிபிசியிடம் தெரிவித்தார்.

 

மாநிலம் முழுவதும் போலி மருந்துகள் விநியோகம்?

 

உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகத்துறையின் விசாரணையில், நாக்பூர் மட்டுமின்றி, மகாராஷ்டிரா முழுவதும் பல இடங்களில் போலி மருந்துகள் விநியோகம் செய்யும் மோசடி நடப்பது தெரியவந்தது.

 

இதற்கு முன்னர் கமலேஷ்வர் நகரில் விஜய் சவுத்ரி மற்றும் மிஹிர் திரிவேதி ஆகியோர் மீது போலி மருந்துகளை சப்ளை செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர்கள் மீது தற்போது நாக்பூரில் போலி மருந்து விநியோகம் செய்தது தொடர்பாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தற்போது சிறையில் உள்ளனர்.

 

இவர்கள் இருவர் மீதும் தானே, நாந்தேட், வார்தா ஆகிய இடங்களில் மூன்று வழக்குகள் உள்ளன. தற்போது நாக்பூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு போலி மருந்துகள் விநியோகம் செய்யப்பட்டது தொடர்பாக மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

இவர்கள் வழங்கிய 'ரிக்லேவ் 625' என்ற மருந்தில் அமோக்ஸிசிலின்/ கிளாவுலானிக் (Amoxicillin or Clavulanic Acid) அமிலம் ஆகிய முக்கிய பொருட்கள் இல்லை. மருந்து தயாரித்த நிறுவனங்களின் பெயர்களும் வேறு.

 

மேலும், உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் ஆய்வாளர் நிதின் பண்டார்கர் கூறுகையில், இந்த இரண்டு நிகழ்வுகளிலும் ஒரே மருந்துதான் சப்ளை செய்யப்பட்டுள்ளது என்றார்.

 

டால்கம் பவுடர் கலந்த மருந்தா?

 

பிப்ரவரி 2023 இல், உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை , கலமேஷ்வர் கிராமப்புற மருத்துவமனையிலிருந்து 500 மாத்திரைகளின் மாதிரியை சேகரித்தது.

 

இந்த மாத்திரைகளின் மாதிரிகள் மும்பையில் உள்ள ஆய்வகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டன. இந்த மருந்துகள் போலியானவை என்றும் உண்மையான மூலப்பொருட்கள் இல்லை என்றும் ஆய்வக சோதனைகள் தெரிவித்தன.

 

ஆய்வக அறிக்கைக்குப் பிறகு உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகத்துறை பிப்ரவரி 2024 இல் கலமேஷ்வர் போலீசில் புகார் அளித்தது. போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 

இந்த மருந்துகள் நாக்பூர் மாவட்ட அறுவை சிகிச்சை மருத்துவ அலுவலகத்தில் இருந்து கலமேஷ்வர் மருத்துவமனைக்கு விநியோகம் செய்யப்பட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

 

இந்த மருந்துகள் நாக்பூர் மாவட்ட அறுவை சிகிச்சை மருத்துவ அலுவலகத்தால் டெண்டர்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டன. பின்னர் அவை மாவட்டத்தில் உள்ள கிராமப்புற மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வழங்கப்பட்டது.

 

மாவட்ட அறுவை சிகிச்சை மருத்துவ அலுவலகம், லத்தூரின் ஜெய் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம் டெண்டரை ஒப்படைத்தது.

 

ஜெய் எண்டர்பிரைசஸ் நிறுவனப் பிரதிநிதிகளிடம் நடத்திய விசாரணையில் போலி மருந்துகள் தயாரிக்கும் கும்பல் பற்றிய விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததாக உதவி காவல் கண்காணிப்பாளர் அனில் மாஸ்கே தெரிவித்தார்.

 

போலி மருந்துகள் தயாரிக்கும் கும்பல் எவ்வாறு செயல்படுகிறது
 

அனில் மஸ்கே பிபிசியிடம் போலி மருந்து தயாரிப்பு மோசடி எப்படி செயல்படுகிறது என்பதை விளக்கினார், ஒரு நிறுவனம் அரசு மருத்துவமனைகளுக்கு மருந்து விநியோகம் செய்வதற்கான டெண்டரை கைப்பற்றியது. இந்த நிறுவனம் மிஹிர் திரிவேதியிடம் இருந்து மருந்துகளை வாங்கியது.

 

மிஹிர் திரிவேதி இந்த மருந்துகளை கபிஜ் ஜெனரிக்ஸ் (Kabij Generics) நிறுவனத்தை சேர்ந்த விஜய் சவுத்ரியிடம் இருந்து பெற்று வந்தார். இந்த நிறுவனங்கள் அனைத்தும் மருந்துகளை மட்டுமே சப்ளை செய்கின்றன. இவற்றை தயாரிக்கும் நிறுவனம் உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ளது.

 

ராபின் தனேஜா என்கிற ஹிமான்ஷு உத்தரகாண்ட் மாநிலத்தில் போலி மருந்துகளை வாங்கினார். அவற்றை சஹாரன்பூரில் உள்ள ராமன் தனேஜா என்பவருக்கு சப்ளை செய்து வந்தார். இவற்றை ராமன் தனேஜாவிடம் இருந்து விஜய் சவுத்ரி வாங்கினார்.

 

விஜய் சவுத்ரி முதல் மிஹிர் திரிவேதி வரை போலி மருந்துகள் கைமாறியுள்ளது. அவரிடமிருந்து அரசு மருத்துவமனைக்கு டெண்டர் எடுத்தவர்களிடம் போலி மருந்துகள் கிடைத்துள்ளன.

 

இந்த வழக்கில் மேல் மட்டத்திலிருந்து கீழ் மட்டம் வரை முக்கியப் பங்காற்றிய நால்வரும் மும்பையில் உள்ள ஒரு ஹோட்டலில் சந்தித்து போலி மருந்து தயாரிக்கத் திட்டமிட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

 

கலமேஷ்வர் கிராமப்புற மருத்துவமனைக்கு வழங்கப்பட்ட ஆன்டிபயாடிக் மாத்திரையில் அசல் மூலப்பொருள் (API) இல்லை. ஏபிஐ எந்த ஆண்டிபயாடிக் மருந்திலும் 80 சதவீதம் இருக்கும். ஆனால் போலி மருந்துகளில் அது இல்லை.

 

இந்த மருந்து டால்கம் பவுடர், மாவு மற்றும் கால்சியம் சேர்த்து தயாரிக்கப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.

 

இதுமட்டுமின்றி, மருந்துகளை விற்பனை செய்ய அவர்கள் காட்டிய சான்றிதழும் போலியானது என அனில் மாஸ்கே தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து நாக்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர் ராஜ்கஜ்பியாவின் பதிலைப் பெற முயற்சித்தோம். ஆனால் அவர் பதிலளிக்கவில்லை.