இஸ்ரேல் மற்றும் ஹெஸ்பொலா ஆகிய இருதரப்பும் ஞாயிற்றுக்கிழமை தங்கள் எல்லை தாண்டிய தாக்குதல்களை அதிகரிக்கும் என்ற அச்சம் நிலவியது. போரிலிருந்து பின்வாங்குமாறு சர்வதேச அளவில் அழுத்தம் கொடுக்கப்பட்ட போதிலும் தாக்குதல்கள் தொடர்கின்றன.
இஸ்ரேலிய ராணுவத்தின் கூற்றுப்படி, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் சுமார் 150 ராக்கெட்டுகள், ஏவுகணைகள் மற்றும் பிற எறிகணைகள் இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்டன. பெரும்பாலான ஏவுகணைகள் லெபனானில் இருந்து வந்தவை.
சில ஏவுகணைகள் முந்தைய தாக்குதல்களை விட அதிக தூரத்தை எட்டின. இதனால் ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் பாதுகாப்பு தேடி பதுங்கு குழிகளுக்குச் சென்றனர். ஹைஃபா நகருக்கு அருகில் உள்ள வீடுகள் சேதமடைந்து விட்டன.
இதையடுத்து தெற்கு லெபனானில் உள்ள இலக்குகள் மீது இஸ்ரேல் தாக்குதல்கள் மேற்கொண்டது. இந்த தாக்குதல் ஆயிரக்கணக்கான ஹெஸ்பொலாவின் ராக்கெட் லாஞ்சர்களை அழித்ததாக இஸ்ரேல் தரப்பு கூறியது.
லெபனானில் ஹெஸ்பொலாவின் நிலைகளைக் குறிவைத்து தீவிர வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருவதாக இஸ்ரேல் ராணுவம் தரிவித்துள்ளது. ஹெஸ்பொலா ராணுவ நோக்கத்திற்காக பயன்படுத்தும் இடங்களை விட்டு உடனே வெளியேறுமாறு லெபனான் மக்களை இஸ்ரேல் ராணுவம் கேட்டுக் கொண்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை, இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு, "நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இஸ்ரேல் எடுக்கும்" என்றார். "இஸ்ரேல்-லெபனான் எல்லைப் பகுதியைச் சேர்ந்த மக்களைப் பாதுகாப்பாக அவர்களது வீடுகளுக்குத் திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கும்” என்றும் கூறினார்.
ஹெஸ்பொலா நினைத்துப் பார்க்க முடியாத பல தாக்குதல்களை அதன் மீது இஸ்ரேல் நடத்தியிருப்பதாக அவர் கூறினார்.
ஹெஸ்பொலா குழுவின் துணைத் தலைவர் நைம் காசிம், "அச்சுறுத்தல்கள் எங்களைத் தடுக்காது. அனைத்து சாத்தியமான தாக்குதல்களையும் எதிர்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம்" என்றார்.
கொல்லப்பட்ட இப்ராஹிம் அகில் யார்?
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் வெள்ளிக்கிழமை இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹெஸ்பொலாவின் உயர்மட்ட தளபதி இப்ராஹிம் அகில் என்பவரின் இறுதிச் சடங்கில் அவர் கூறுகையில் : "நாங்கள் ஒரு புதிய கட்டத்தில் இருக்கிறோம். இஸ்ரேல் செய்த எல்லாவற்றிருக்கும் திருப்பி கொடுக்க வேண்டிய நேரம் இது” என்றார்.
ஷேக் நதீம் காசிம் துக்கம் அனுசரிப்பவர்களிடம், "இஸ்ரேல் அதன் நோக்கங்களில் எதையும் நிறைவேற்றவில்லை. கடந்த மூன்று நாட்களாக, ஹெஸ்பொலா தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தி வருகிறது" என்றார்.
இஸ்ரேல் குடியிருப்பாளர்கள், நாட்டின் வடக்கில் உள்ள அவர்களது வீடுகளில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று கூறிய அவர், ஹெஸ்பொலாவின் எதிர்ப்பையும் காஸாவுடனான தொடர்பையும் உடைக்க இஸ்ரேல் தவறிவிட்டது என்றும் கூறினார்.
இப்ராஹிம் அகில் இறுதிச் சடங்கின் போது, பெரியளவில் திரண்ட மக்கள் சவப்பெட்டியை ஏற்றி சென்ற டிரக்கை பின் தொடர்ந்தார்கள்.
இறுதிச் சடங்கில் துக்கம் மற்றும் கோபத்திற்கு மத்தியில், அமெரிக்கா எதிர்ப்பு உள்ளிட்ட முழக்கங்களை ஹெஸ்பொலா ஆதரவாளர்கள் எழுப்பினர்.
பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதியான தாஹியில் ஒரு சதுக்கத்தில் இறுதி சடங்கு நடந்தது.
இப்ராஹிம் அகில் மற்றும் அவருக்கு கீழ் இயங்கிய 15 பேர் உட்பட 45 பேர் கொல்லப்பட்டதாக லெபனான் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அகில் தலைக்கு $7 மில்லியன் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது. 1980 களில் பெய்ரூட்டில் அமெரிக்க தூதரகம் உள்ளிட்ட இடங்கள் மீதான தாக்குதலில் நூற்றுக்கணக்கான அமெரிக்கர்கள் கொல்லப்பட்டது தொடர்பாக அவரை தேடப்படும் குற்றவாளியாக அமெரிக்கா அறிவித்தது.
லெபனானை போருக்குள் இழுக்கும் இஸ்ரேல்?
வெள்ளிக்கிழமை இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் குடும்பங்கள் உட்பட சுமார் 30 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். தற்போது சம்பவம் நடந்த இடத்தில், உடல்கள் கண்டுபிடிக்கப்படும் என்று நம்பி ஒரு பெரிய பள்ளத்தின் விளிம்பில் இறந்தவர்களின் உறவினர்கள் காத்திருக்கின்றனர்.
ஹெஸ்பொலாவுடன் தொடர்புடைய லெபனான் பொதுப்பணித்துறை அமைச்சர் அலி ஹாமி - இஸ்ரேல் எங்கள் பிராந்தியத்தை போருக்குள் இழுக்கிறது” என்று குற்றம்சாட்டியுள்ளார்.
தாக்குதல் நடந்த இடத்தில் இருந்து பிபிசியிடம் பேசிய அவர் "லெபனான் போரை நாடவில்லை," என்றார்.
“லெபனான் மக்களும் கூட போரை விரும்பவில்லை. ஆனால் இஸ்ரேல் போருக்கு வாருங்கள் என்று எங்களை அழைக்கிறது” என்றார்.
போர் மூளும் என்று நினைக்கிறீர்களா என்று கேட்டதற்கு, "எனக்குத் தெரியாது. பார்ப்போம்" என்று பதிலளித்தார்.
ஹெஸ்பொலா லெபனானில் மிகவும் சக்தி வாய்ந்த அரசியல் மற்றும் ராணுவ அமைப்பு ஆகும். இந்த ஷியா முஸ்லீம் அமைப்பு சிறந்த ஆயுத பலம் கொண்டது. இது பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளால் பயங்கரவாத அமைப்பாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
ஹெஸ்பொலாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதல் 2023-ஆம் ஆண்டு 8 அக்டோபர் 8-ஆம் தேதி அதிகரித்தது. காஸாவில் இருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய மறுநாள், ஹெஸ்பொலா இஸ்ரேலிய நிலைகளை தாக்கியது.
தெற்கு இஸ்ரேல் மீதான ஹமாஸ் அமைப்பின் தாக்குதல்களில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 250 க்கும் மேற்பட்டோர் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். அதே நேரத்தில் இஸ்ரேலின் வடக்கு பகுதியில் 60,000 பேர் ஹெஸ்பொலாவின் தினசரி ராக்கெட் தாக்குதல்களின் விளைவாக வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
சர்வதேச தலைவர்கள் எச்சரிக்கை
சமீபத்திய எல்லை தாண்டிய தாக்குதல்கள் சர்வதேச அளவில் புதிய கலக்கத்தை தூண்டியுள்ளது.
சிஎன்என் ஊடகத்திடம் பேசிய ஐ.நா. தலைவர் அன்டோனியோ குட்டெரெஸ், "லெபனான் மற்றொரு காஸாவாக மாற சாத்தியம் இருப்பதாக அவர் அச்சம் தெரிவித்துள்ளார்.
லெபனானில் உள்ள ஐநாவின் சிறப்பு ஒருங்கிணைப்பாளர் ஜீனைன் ஹென்னிஸ்-பிளாஷேர்ட் தனது எக்ஸ் பக்கத்தில், மத்திய கிழக்கு தற்போது `பேரழிவின் விளிம்பில் இருப்பதாக பதிவிட்டுள்ளார்.
"இரு தரப்பிலும் பாதுகாப்பான சூழலை உருவாக்கும் எந்த ராணுவ தீர்வும் தற்போதைக்கு இல்லை" என்று அவர் ஞாயிற்றுக்கிழமை பதிவிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், "ஒரு பெரியளவிலான போர் வெடிக்காமல் இருக்க தன்னால் முடிந்த அனைத்தையும் அமெரிக்கா செய்யும்" என்றார்.
ஐரோப்பிய ஒன்றியம் இது "மிகவும் கவலைக்குரியது" என்று கூறியது.
பிரிட்டன் வெளியுறவு செயலாளர் டேவிட் லாம்மி "உடனடியான போர் நிறுத்தத்திற்கு" அழைப்பு விடுத்தார்.
அதிகரித்து வரும் மோதல்
இராக்கில் இருந்து ஏவப்பட்ட இரண்டு ஏவுகணைகள் உட்பட பல எறிகணைகள் சனிக்கிழமை ஒரே இரவில் இஸ்ரேல் மீது ஏவப்பட்டவை என்று அந்நாட்டு ராணுவம் கூறியுள்ளது.
இரான் ஆதரவு குழுவான இராக் இஸ்லாமிய எதிர்ப்பு குழு, இஸ்ரேல் மீது ஏவுகணை மற்றும் ஆளில்லா விமான தாக்குதல்களை நடத்தியதாக கூறியது.
பள்ளிகள் மூடப்பட்டு மருத்துவமனைகள் நோயாளிகளை நிலத்தடி தளங்களுக்கு நகர்த்தி வருகின்றனர். வடக்கு இஸ்ரேல் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளது. பத்து நபர்களுக்கு மேல் வெளியில் ஒன்று கூடுவதை கட்டுப்படுத்த உள்ளூர் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஹைஃபாவின் புறநகரில் உள்ள கிராய்ட் பியாலிக்கில் வசிக்கும் ஒருவர், ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் கூறுகையில், "சுமார் 06:30 மணியளவில் ஒரு அலாரம் கேட்டது, பின்னர் உடனடியாக ஒரு மிகப் பெரிய வெடிப்பு நிகழ்ந்தது. இங்கிருந்து மூன்று அல்லது நான்கு வீடுகள் தள்ளி இது நிகழ்ந்தது. எங்கள் வீட்டில் பிரதான அறையில் ஜன்னல்கள் முற்றிலும் நாசமாயின" என்றார்.
இந்த வார தொடக்கத்தில், லெபனான் முழுவதும் இரண்டு நாட்களில் ஹெஸ்பொலா அமைப்பால் பயன்படுத்தப்பட்ட பேஜர்கள் மற்றும் வாக்கி-டாக்கிகள் வெடித்ததில் 39 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர்.
வியாழன் அன்று, ஹெஸ்பொலா தலைவர் ஹசன் நஸ்ரல்லா, தாக்குதல்களுக்கு இஸ்ரேலைக் குற்றம் சாட்டினார், இஸ்ரேல் "எல்லா சிவப்புக் கோடுகளையும் தாண்டிவிட்டதாகக் கூறி இனி அவர்களுக்கு தண்டனை மட்டுமே பதில் சொல்லும்" என்றும் அவர் கூறினார். ஆனால் இஸ்ரேல் இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்கவில்லை.
இந்த மோதல் ஒரு முழு அளவிலான போராக வெடிக்கலாம் என்ற அச்சம் அதிகரித்துள்ள நிலையில், தற்போது லெபனானில் உள்ள தனது குடிமக்களுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை புதிய பயண ஆலோசனையை வழங்கியது.
பெய்ரூட்டில் உள்ள அமெரிக்க தூதரகம், "வணிக விமான சேவைகள் இருக்கும் போதே லெபனானை விட்டு வெளியேற வேண்டும்" என்று தனது குடிமக்களை வலியுறுத்தியுள்ளது.
அண்டை நாடான ஜோர்டானின் வெளியுறவு அமைச்சகமும் அதன் குடிமக்களுக்கு இதேபோன்ற ஆலோசனையை வழங்கியுள்ளது. லெபனானில் உள்ள தனது குடிமக்கள் விரைவில் வெளியேறுமாறு அது வலியுறுத்தியுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.