வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 14 நவம்பர் 2024 (13:36 IST)

சூரியனார் கோவில் ஆதீனம் திருமண சர்ச்சை - மடத்தில் இருந்து வெளியேறியது ஏன்?

Kumbakonam Adheenam

அறநிலையத்துறையிடம் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு மடத்தை விட்டு வெளியேறியிருக்கிறார், கும்பகோணம் சூரியனார் கோவில் ஆதீனம்.

 

 

உள்ளூர் மக்களின் எதிர்ப்பு காரணமாகவே, மடத்தைவிட்டு ஆதீனம் வெளியேறியதாகக் கூறுகின்றனர், மடத்தின் நிர்வாகிகள்.

 

இதன் பின்னணியில் திருவாவடுதுறை ஆதீன மடத்தின் தூண்டுதல் உள்ளதாகக் கூறுகிறார், சூரியனார் கோவில் ஆதீனம்.

 

மடத்தின் நிர்வாக பொறுப்புகளில் இருந்து சூரியனார் கோவில் ஆதீனம் விலகியது ஏன்?

 

தமிழ்நாட்டில் உள்ள சைவ மடங்களில் கும்பகோணத்தில் உள்ள சூரியனார் கோவில் ஆதீனமும் ஒன்று. இந்த மடத்தின் 27-வது சந்நிதானமாக சங்கரலிங்க தேசிக சுவாமிகள் இருந்தார்.

 

இவர் கடந்த 2022-ஆம் ஆண்டு பரிபூரணம் (மரணம்) அடைந்ததைத் தொடர்ந்து, 28-வது ஆதீனமாக மகாலிங்க தேசிகப் பண்டார சுவாமிகள் ஆதீனமாக பொறுப்பில் அமர்த்தப்பட்டார். இதற்கு முன்னதாக, இவர் திருவாவடுதுறை ஆதீன மடத்தில் தம்பிரானாக இருந்துள்ளார்.

 

திருமண சர்ச்சை
 

கடந்த இரண்டு ஆண்டுகளாகச் சூரியனார் கோவில் ஆதீனமாகப் பொறுப்பில் இருக்கும் மகாலிங்க தேசிக சுவாமிகள், அண்மையில் பெங்களூருவைச் சேர்ந்த ஹேமாஸ்ரீ என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதனை கர்நாடக மாநிலத்தில், இந்து திருமணச் சட்டத்தின்படி பதிவு செய்துள்ளார்.

 

ஆதீனம் திருமணம் செய்து கொண்டதாகத் தகவல்கள் பரவவே, "ஆமாம். நான் திருமணம் செய்து கொண்டது உண்மைதான். நான்கு பேருக்குத் தெரிந்து வெளிப்படையாகத் திருமணம் செய்து கொண்டேன்," என ஆதீனம் விளக்கம் அளித்தார்.

 

மேலும், மடத்தின் விதிகளுக்கு மாறாக தான் நடந்து கொள்ளவில்லை எனவும் கூறியிருந்தார்.

 

ஆனால், மடத்துக்குச் சொந்தமான சுமார் ரூ.1,000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அபகரிக்கவே இந்தத் திருமணம் நடைபெற்றதாக, சூரியனார் கோவில் மடத்தின் ஸ்ரீகார்யம் (சமய, நிர்வாகப் பணிகளை மேற்கொள்பவர்) சுவாமிநாத தேசிக சுவாமிகள் குற்றம் சுமத்தினார்.

 

பிபிசி தமிழிடம் அவர் முன்னர் பேசும்போது, "சூரியனார் கோவில் மடத்தின் மரபுப்படி இல்லறத்தில் இருந்து துறவறம் மேற்கொள்ளலாம். ஆனால், துறவறம் வந்த பிறகு இல்லறம் ஏற்கக் கூடாது. இந்த மரபை ஆதீனம் மீறிவிட்டார்," என்றார்.

 

இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தவே, கடந்த வாரம் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மடத்தில் நேரில் விசாரணை நடத்தியுள்ளனர்.

 

அவர்களிடம் பேசிய சூரியனார் கோவில் ஆதீனம், 'கர்நாடகாவில் அமைய உள்ள ஆசிரமத்தின் நிர்வாகப் பொறுப்புகளை மட்டும் ஹேமாஸ்ரீ கவனிப்பார். தமிழ்நாட்டில் உள்ள மடத்துக்கு உரிமை கோர மாட்டார்' என விளக்கம் அளித்தார்.

 

இதை பிபிசி தமிழிடமும் சூரியனார் கோவில் ஆதீனம் கூறியிருந்தார்.

 

ஆதீனம் எடுத்த முடிவு
 

இந்த நிலையில், திங்கட்கிழமையன்று (நவம்பர் 11) சூரியனார் கோவில் ஆதீனத்துக்கு எதிராகக் கும்பகோணத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, செவ்வாய்க்கிழமை (நவம்பர் 12) அன்று உள்ளூர் மக்கள், மடத்தின் முன்பாகத் திரண்டனர்.

 

மடத்தின் மரபுகளை மீறியதால் ஆதீனப் பொறுப்பில் இருந்து வெளியேறுமாறு கூறி அவர்கள் கோஷம் எழுப்பியுள்ளனர். அங்கு அசம்பாவிதம் நடக்காமல் தடுப்பதற்குப் காவல் துறை குவிக்கப்பட்டனர்.

 

இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்படவே, மடத்தின் நிர்வாகப் பொறுப்புகளில் இருந்து விலகுவதாகக் கூறி, அறநிலையத்துறை அதிகாரிகளிடம் மடத்தின் சாவியை ஒப்படைத்திருக்கிறார், சூரியனார் கோவில் ஆதீனம்.

 

இதன்பிறகு நடந்த விவரங்களை பிபிசி தமிழிடம் விவரித்தார், சூரியனார் கோவில் மடத்தின் ஸ்ரீகார்யம் சுவாமிநாத சுவாமிகள், "மடத்தின் முன்பு மக்கள் திரண்டதால், 'சொத்துகளுக்குச் சேதம் வரக் கூடாது' என்பதற்காக, நிர்வாகப் பொறுப்பில் இருந்து விலகுவதாக ஆதீனம் அறிவித்தார்.''

 

“அப்போது அறநிலையத்துறை அதிகாரிகள், மடத்தின் நிர்வாகப் பொறுப்பை திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைக்குமாறு கூறியுள்ளனர். 'அவர்களிடம் கொடுக்க விரும்பவில்லை. அறநிலையத்துறையிடமே ஒப்படைக்கிறேன்' என ஆதீனம் கூறிவிட்டார்." என்றார்.

 

ஒன்று கூடும் சைவ ஆதீனங்கள்
 

நிர்வாகப் பொறுப்பில் இருந்து மகாலிங்க தேசிக சுவாமிகள் விலகியுள்ள நிலையில், ஆதீன பொறுப்பில் இருந்தும் அவரை நீக்குவது குறித்து பிற சைவ மடங்களின் ஆதீனங்கள் ஒன்று சேர்ந்து முடிவெடுக்க உள்ளதாகக் கூறுகிறார், சுவாமிநாத சுவாமிகள்.

 

"ஆதீனப் பொறுப்பில் இருந்து அவரை விலக்குவது தொடர்பாக, 16 மடங்களின் ஆதீனங்கள் கூட்டு அறிக்கை கொடுக்க வேண்டும் எனவும், திருவாவடுதுறை ஆதீனம் மட்டும் தனியாக கருத்துரு கொடுக்க வேண்டும் எனவும் அறநிலையத்துறை கூறியுள்ளது," என்கிறார்.

 

பிபிசி தமிழிடம் தொடர்ந்து பேசிய அவர், "மடத்தின் சம்பிரதாயத்தில் இருந்து ஆதீனம் விலகியதுதான் பிரச்னை. மடத்தின் சொத்துகளை மீட்கும் முயற்சியில் இறங்கியதால், தனக்கு எதிராகச் சிலர் செயல்பட்டதாக ஆதீனம் கூறுகிறார். அப்படியானால், மடத்தின் மரபை மீறித் திருமணம் செய்து கொண்டதை எவ்வாறு ஏற்பது?" எனக் கேள்வி எழுப்புகிறார்.

 

"இனிவரும் நாட்களில் ஆதீனமாக மகாலிங்க தேசிக சுவாமிகள் தொடர்வது சிரமம் தான்," எனக் கூறும் சுவாமிநாத சுவாமிகள், "திருமணம் என்ற சூழ்ச்சி வலையில் ஆதீனம் சிக்க வைக்கப்பட்டுள்ளார். இதன் பின்னணியில் யார் உள்ளனர் என்பதை அவர்தான் உணர வேண்டும். திருமணம் செய்யாமல் இருந்திருந்தால் எந்தப் பிரச்னையும் வந்திருக்காது," என்கிறார்.

 

சூரியனார் கோவில் ஆதீனம் சொல்வது என்ன?
 

மடத்தின் நிர்வாகப் பொறுப்புகளில் இருந்து விலகியது குறித்து, பிபிசி தமிழிடம் பேசிய சூரியனார் கோவில் ஆதீனம் மகாலிங்க தேசிக சுவாமிகள், "உள்ளூரில் சிலர் தேவையற்றப் பிரச்னைகளை ஏற்படுத்தியதால், அறநிலையத்துறையிடம் நிர்வாகப் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டேன்," என்றார்.

 

ஆனால், சூரியனார் கோவில் ஆதீனமாகத் தான் தொடர்வதாக பிபிசி தமிழிடம் கூறிய ஆதீனம், "இந்த விவகாரத்தின் பின்னணியில் திருவாவடுதுறை ஆதீனத்தின் தூண்டுதல் இருக்கிறது," என்கிறார்.

 

இதுகுறித்து விவரித்த ஆதீனம், "சூரியனார் கோவில் மடத்தின் சொத்துகள் பெருமளவு திருவாவடுதுறை ஆதீன மடத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. அதைச் சட்டரீதியாக மீட்கும் முயற்சியில் இறங்கியதால், எனக்கு எதிராகச் செயல்பட்டுள்ளனர். இதைச் சட்டரீதியாக எதிர்கொள்வேன்," என்றார்.

 

ஆதீனங்கள் ஒன்றுகூடி முடிவெடுக்க உள்ளது தொடர்பாகக் கேட்டபோது, "அது வழக்கமான ஒன்றுதான்," என்று மட்டும் பதில் அளித்தார்.

 

திருவாவடுதுறை மடத்தின் நிர்வாகிகள் பதில்
 

ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து பிபிசி தமிழிடம் பேசிய திருவாவடுதுறை ஆதீன மடத்தின் பொதுமேலாளர் ராஜேந்திரன், "சூரியனார் கோவில் மடத்தின் ஆதீனத்தை நியமிப்பது மட்டும்தான் எங்களின் வேலை. அதன் நிர்வாகத்துக்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை," என்கிறார்.

 

துவக்கத்தில் இருந்தே தங்கள் மீது சூரியனார் கோவில் ஆதீனம் குறை கூறிவருவதாகக் கூறும் ராஜேந்திரன், "ஆதீனத்துக்கு எதிராக உள்ளூரில் உள்ள மக்கள் பிரச்னை செய்துள்ளனர். அதைக் கேள்விப்பட்டு அங்கே சென்றோம். அவர் மீதான சர்ச்சையை மறைப்பதற்காக எதையோ பேசி வருகிறார். இதில் எங்களுக்கு எந்தவிதத் தொடர்பும் இல்லை," என்றார்.

 

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.