1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 20 நவம்பர் 2019 (18:20 IST)

ஜாமின் கோரி சிதம்பரம் மனுத்தாக்கல்: அமலாக்கப் பிரிவுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

ப.சிதம்பரம் தொடுத்துள்ள வழக்கில் பதிலளிக்குமாறு அமலாக்கப் பிரிவுக்கு உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
 
ஆம், ஐஎன்எக்ஸ் வழக்கில் தனது ஜாமின் மனுவை நிராகரித்த டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் தொடுத்துள்ள வழக்கில் பதிலளிக்குமாறு அமலாக்கப் பிரிவுக்கு உச்சநீதிமன்றம் இன்று (புதன்கிழமை) உத்தரவிட்டுள்ளது.
 
விளக்கம் கோரி அமலாக்கப் பிரிவுக்கு உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள் பானுமதி, போபண்ணா, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த வழக்கு குறித்த அடுத்தகட்ட விசாரணையை நவம்பர் 26ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
 
இந்த வழக்கு குறித்த விசாரணையின்போது, சிதம்பரம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர்களான கபில் சிபல், அபிஷேக் சிங்வி ஆகியோர், சிதம்பரம் 90 நாட்களுக்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
 
மேலும், ப. சிதம்பரத்தின் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை முடிந்த நிலையிலும், அவரது ஜாமின் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் நிராகரித்துவிட்டதாக தெரிவித்தனர்.
 
முன்னதாக, கடந்த 15ஆம் தேதி சிதம்பரத்தின் ஜாமின் மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், இந்த வழக்கில் சிதம்பரத்தின் மீது தீவிரமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர் குற்றத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளதாகவும் தெரிவித்திருந்தது.
 
2007-ம் ஆண்டு சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்தபோது ஐ.என்.எக்ஸ். மீடியா என்ற நிறுவனம் வெளிநாட்டில் இருந்து 305 கோடி ரூபாய் முதலீடு பெறுவதற்கு வெளிநாட்டு முதலீட்டு மேம்பாட்டு வாரியம் (FIPB) அனுமதி அளித்ததில் முறைகேடு நடந்திருப்பதாக 2017ம் ஆண்டு சி.பி.ஐ. ஒரு வழக்குப் பதிவு செய்தது.
 
ப.சிதம்பரத்தின் மீதான ஊழல் புகார் தொடர்பாக அவரை சிபிஐ விசாரித்து வருகிறது. இதில் சமீபத்தில் சிதம்பரம் மீதும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மீதும் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்யப்பட்டது.