1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 10 ஜூலை 2021 (15:29 IST)

Sulli Deals: முஸ்லிம் பெண்களை விற்க உருவாக்கப்பட்ட ஓப்பன் சோர்ஸ் செயலி

சமூக ஊடகங்களில் ஒரு பெண்ணை கேலி செய்வது மக்களுக்கு எளிதான விஷயம். இந்த கேலி பெரும்பாலும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றியதாக இருக்கிறது.

 
ஆனால் முஸ்லிம் பெண்களை துன்புறுத்துவதற்காக கீழ்மையின் அனைத்து வரம்புகளும் உடைக்கப்படுகின்றன.இது மிகவும் ஆபத்தானது. சில சமயங்களில் நான் ஏன் சமூக ஊடகங்களில் இருக்க வேண்டும் என்று யோசிக்க ஆரம்பிக்கிறேன். நான் பேசுவதையும் எழுதுவதையும் நிறுத்திவிடவேண்டுமா?
 
எங்களை சாடும் வசவு சொற்கள், பெண்மையின் மீதான தாக்குதல் மட்டுமல்ல, இஸ்லாமுக்கு எதிரான அச்சுறுத்தலும் கூட." இதை நஸ்ரின் (பெயர் மாற்றப்பட்டது) கூறும்போது, அவருடைய குரலில் பயத்தை விட கோபமே அதிகம் தெரிகிறது.
 
ஒரு நாள் காலை நீங்கள் எழும்போது, உங்கள் புகைப்படங்களும் தனிப்பட்ட தகவல்களும் இணையத்தில் 'ஏலம் விடப்படுவதைப் பார்க்கிறீர்கள். சிலர் உங்களைப் பற்றி ஆபாசமான கருத்துகளைக் கூறி, உங்களை பேரம் பேசுகிறார்கள். அப்போது உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?
 
'சுல்லி' என்பது முஸ்லிம் பெண்களை குறிப்பிட்டுப் பயன்படுத்தப்படும் ஒரு கீழ்த்தரமான சொல். இந்த செயலியில் பயன்படுத்தப்படும் முஸ்லிம் பெண்களின் தகவல்கள், ட்விட்டரில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன. இதில் இருந்த 80க்கும் மேற்பட்ட பெண்களின் படங்கள், அவர்களின் பெயர்கள் மற்றும் ட்விட்டர் கணக்குகள் பற்றிய விவரங்கள் நீக்கப்பட்டுள்ளன.
 
இந்த செயலியில் முதலில் எழுதப்பட்டிருந்த வாசகம் - 'உங்கள் சுல்லி டீலை கண்டுபிடியுங்கள்'. இதைக் கிளிக் செய்தால், ஒரு முஸ்லிம் பெண்ணின் படம், பெயர் மற்றும் ட்விட்டர் கணக்கு, செயலியின் பயனருடன் பகிரப்பட்டது.
 
முஸ்லிம் பெண்கள், பெண் பத்திரிகையாளர்கள் மீதான இந்த தாக்குதலை இந்திய செய்தி ஆசிரியர்கள் கூட்டமைப்பு, வன்மையாக கண்டித்துள்ளது. பெண் ஊடகவியலாளர்களை அச்சுறுத்துவதற்கு, சமூக ஊடகங்கள் மற்றும் டிஜிட்டல் தளங்களை பயன்படுத்தும் வழி கவலை அளிக்கிறது என்று அது குறிப்பிட்டுள்ளது.
 
இந்த ஓபன் சோர்ஸ் செயலி, 'கிட்ஹப்' எனும் தளம் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆயினும் இது திங்கள்கிழமை (ஜூலை 5) மாலை இது கிட்ஹப்பால் அகற்றப்பட்டது. பிபிசி சில கேள்விகளுடன் மின்னஞ்சல் வழியாக கிட்ஹப்பை தொடர்பு கொண்டது. அதற்கு பதிலளித்த கிட்ஹப், "இந்த விவகாரத்தில் செயலியை உருவாக்கியவரின் கணக்கை நாங்கள் முடக்கியுள்ளோம். செய்திகளின் அடிப்படையில், இந்த விஷயம் தொடர்பான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. துன்புறுத்தல், பாகுபாடு மற்றும் வன்முறையை ஊக்குவிக்கும் உள்ளடக்கம், கிட்ஹப்பின் கொள்கைகளுக்கு எதிரானது. இது எங்கள் கொள்கைகளை மீறுவதாகும்," என்று கூறியது.
 
கிட்ஹப்பின் தலைமை செயல் அதிகாரி எரிகா ப்ரெசியா, இந்தச் செயலியை உருவாக்கியவரின் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக ட்வீட் செய்துள்ளார். இருப்பினும், இவை அனைத்தும் எப்படி நடந்தன என்பதை அவர் விளக்கவில்லை.