1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By sinoj
Last Modified: வெள்ளி, 9 ஜூலை 2021 (00:09 IST)

ஜப்பானில் திடீர் அவசரநிலை - பார்வையாளர்களுக்கு தடை

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் நடைபெறும் அனைத்து நாட்களும் தலைநகர் டோக்கியோவில் அவசரநிலை அமலில் இருக்கும் என ஜப்பான் அரசு அறிவித்துள்ளது.
 
ஜூலை 12-ஆம் தேதியன்று தொடங்கும் இந்த அவசரநிலை ஆகஸ்ட் 22-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று அந்த நாட்டின் பிரதமர் யோஷீஹிடே சுகா தெரிவித்துள்ளார்.
 
இந்தத் தேதிகளில் உணவகங்களிலும் மதுபான விடுதிகளிலும் மதுபானங்களை விற்பனை செய்ய தடை விதிக்கப்படும் என்றும் உள்ளூர் நேரப்படி இரவு 8 மணிக்கே மூடப்பட வேண்டும் என்றும் அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
 
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் போது பார்வையாளர்களை அனுமதிக்கலாமா வேண்டாமா என்பது குறித்த கடினமான முடிவை எடுக்க அரசு அதிகாரிகளும் ஒலிம்பிக் போட்டி அமைப்பாளர்களும் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
 
வரும் ஜூலை 23ஆம் தேதி அன்று டோக்கியோவில் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில் ஜப்பானில் வைரஸ் தொற்றின் காரணமாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
 
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை ஜப்பானில் நடத்துவதற்கு அந்த நாட்டில் கடுமையான எதிர்ப்பும் உள்ளது.
 
ஒலிம்பிக் போட்டிகளை ரத்து செய்ய வேண்டும் அல்லது தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.
 
ஒலிம்பிக்கை எதிர்க்கும் மக்கள்
 
கொரோனா வைரஸ் திரிபுகளின் விளைவுகளை கருத்தில் கொண்டும், நாட்டின் பிற பகுதிகளுக்கு வைரஸ் தொற்று பரவாமல் இருக்க வேண்டும் எனும் நோக்கத்திற்காகவும், நாம் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது என ஜப்பான் பிரதமர் தெரிவித்துள்ளார்.
 
இதன் காரணமாக டோக்கியோவில் அவசர நிலை அமலில் இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
 
அனைத்து ஒலிம்பிக் விளையாட்டு நிகழ்வுகளிலும் பார்வையாளர்களை தடை செய்வதற்காக அதன் ஏற்பாட்டாளர்கள் பரிசீலனை செய்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
ஒலிம்பிக் கனவுடன் தடைகளை உடைத்த 3 தமிழ்நாட்டுப் பெண்கள்: சாதித்தது எப்படி?
டோக்கியோ ஒலிம்பிக்: 40 ஆண்டுகளுக்குப் பின் தங்கம் வெல்லுமா இந்திய ஹாக்கி அணி?
 
கொரோனா வைரஸ் மேலதிகம் பரவுவதை தடுப்பதற்காக நாம் வலிமையான மற்றும் எளிதில் புரிந்துகொள்ள வேண்டிய செய்தியை வழங்க வேண்டும், ஆனால் இது மிகவும் கடினமான முடிவாக இருக்கப் போகிறது என்று டோக்யோ 2020 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் தலைவர் செய்யக்கோரி மோட்டோ தெரிவித்துள்ளார்.
 
ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழு மற்றும் ஜப்பான் அதிகாரிகள் ஆகியோரின் சந்திப்பிற்கு பிறகு அவசரநிலை தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவரும் தாமஸ் பேக் ஜப்பான் வந்துள்ளார்.
 
ஜப்பானில் ஜூலை 23-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8-ஆம் தேதி வரை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன.
 
மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ஆகஸ்ட் 24 முதல் செப்டம்பர் 5ஆம் தேதி வரை நடைபெற உள்ளன.
 
ஜப்பானிய மக்கள் ஒலிம்பிக் போட்டியை விரும்புகிறார்களா?
 
கடந்த ஏப்ரல் மாதம் புதிய கொரோனா அலை தொடங்கியது. ஒப்பீட்டளவில் குறைவான கொரோனா வைரஸ் பாதிப்பை சந்தித்திருந்த ஜப்பானில் இதுவரை ஜப்பானில் சுமார் 14,900 பேர் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக உயிரிழந்துள்ளனர்.
 
புதன்கிழமை அன்று 2,150 பேர் ஜப்பானில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 920 பேர் டோக்கியோவில் உள்ளவர்கள்.
 
ஜப்பானில் கொரனோ வைரஸ் தடுப்பூசி வழங்கும் பணிகள் சற்று மந்தமாகவே உள்ளன. இதுவரை அந்த நாட்டின் ஒட்டு மொத்த மக்கள் தொகையில் 15 சதவீதம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி முழுமையாக வழங்கப்பட்டுள்ளது.
 
டெல்டா திரிபின் அச்சுறுத்தல் அங்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
 
கொரோனா வைரஸ் நெருக்கடி காரணமாக எழுந்த எதிர்ப்பால் சென்ற ஆண்டு நடைபெறுவதாக இருந்த ஒலிம்பிக் போட்டி இந்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
 
இதன் காரணமாக பல பின்னடைவுகளும் நிதி நெருக்கடியும் ஏற்பட்டன.
 
அசாகி சிம்புன் எனும் ஜப்பானிய செய்தித்தாள் கடந்த ஜூன் மாதம் நடத்திய கருத்துக் கணிப்பில் ஜப்பானில் உள்ள 80 சதவீதம் பேர் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் ரத்து செய்யப்பட வேண்டும் அல்லது ஒத்தி வைக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தனர்.
 
பார்வையாளர்கள் பகுதியும் ஒலிம்பிக் நிகழ்வுகள் நடக்கும் இடங்களில் அமைக்கப்படவில்லை.
 
ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கு இருக்கும் பரவலான எதிர்ப்பு காரணமாக பல நிறுவனங்களும் விளம்பரம் செய்ய முன்வரவில்லை.