செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 12 செப்டம்பர் 2020 (15:47 IST)

பணத்துக்காக வினோத திட்டம்: காப்பீட்டுத் தொகைக்கு ஆசைப்பட்டு கையை வெட்டிக்கொண்ட பெண்

காப்பீட்டுத் தொகையை பெறும் நோக்கில் வேண்டுமென்றே தனது கையை வெட்டிக்கொண்டதாக குற்றச்சாட்டப்பட்ட ஸ்லோவேனியாவை சேர்ந்த பெண், குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

22 வயதாகும் ஜூலிஜா அட்லெசிக் என்ற அந்த பெண் தனது கையை வேண்டுமென்றே வெட்டிக்கொள்வதற்கு முந்தைய ஆண்டில் ஐந்து காப்பீடுகளுக்கு புதிதாக பதிவு செய்திருந்ததை அந்த நாட்டின் தலைநகர் லூப்யானாவில் உள்ள நீதிமன்றம் கண்டறிந்தது.

எனினும், மரத்தின் கிளைகளை வெட்டும்போது இந்த சம்பவம் நடந்தேறிவிட்டதாக கூறிய அந்த இளம்பெண், காப்பீடுகளின் வாயிலாக சுமார் ஒரு மில்லியன் யூரோக்கள், அதாவது இந்திய மதிப்பில் சுமார் எட்டு கோடியே எழுபது லட்சம் ரூபாய் இழப்பீடாக பெறவிருந்தார்.

இந்த நிலையில், முறைகேடான வழியில் காப்பீட்டுத் தொகையை பெறுவதற்கு முயற்சி செய்ததாக கூறி ஜூலிஜா அட்லெசிக்கு இரண்டு ஆண்டுகளும், அவருக்கு உடந்தையாக இருந்த ஆண் தோழருக்கு மூன்றாண்டுகளும் சிறை தண்டனை விதித்தும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மணிக்கட்டுக்கு மேலுள்ள பகுதி துண்டிக்கப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு மருத்துவமனைக்கு வந்த ஜூலிஜா மற்றும் அவரது உறவினர்கள் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டனர்.

அதாவது, வீட்டில் வேண்டுமென்றே கையை வெட்டிக்கொண்ட அவர் ஊனம் நிரந்தரமாக இருக்க வேண்டுமென்ற எண்ணத்துடன் அறுபட்ட கைப்பகுதியை எடுக்காமலேயே மருத்துவமனைக்கு சென்றதை நீதிமன்றம் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளது.

எனினும், உடனடியாக அறுபட்ட கைப்பகுதியை கைப்பற்றிய அதிகாரிகள் மீண்டும் அறுவைசிகிச்சை மூலம் அதை இணைத்துவிட்டனர்.

இவை மட்டுமின்றி, அந்த இளம்பெண் தனது கையை வெட்டிக்கொள்வதற்கு சில நாட்களுக்கு முன்னதாக அவரது ஆண் தோழர் செயற்கை கைகள் குறித்த தேடலை இணையத்தில் மேற்கொண்டுள்ளதும் விசாரணையின்போது தெரியவந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது இளம்பெண்ணும் இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களும் வேண்டுமென்றே திட்டமிட்டு கையை வெட்டிக்கொண்டதை உறுதிசெய்வதாக நீதிபதிகள் தங்களது தீர்ப்பின்போது குறிப்பிட்டனர்.

இந்த வழக்கில் ஜூலிஜாவின் ஆண் தோழரின் தந்தைக்கும் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது

ஆனால், நீதிமன்ற விசாரணை முழுவதுமே தான் கையை வேண்டுமென்றே வெட்டிக்கொள்ளவில்லை என்ற கருத்தை ஜூலிஜா முன்வைத்து வந்தார்.

ஒருவேளை இவர்கள் கோரிய காப்பீடு உறுதிசெய்யப்பட்டிருந்தால், ஒரே சமயத்தில் நான்கரை கோடிக்கும் அதிகமான பணமும், அதைத்தொடர்ந்து மீதமுள்ள தொகை மாத தவணைகளாகவும் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும்.