1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 11 ஏப்ரல் 2022 (13:39 IST)

இலங்கை பொருளாதார நெருக்கடி: இரண்டு நாட்களாக டீசலுக்காக வரிசையில் காத்திருந்த நபர் உயிரிழப்பு

srilanka
இலங்கையின் பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் அங்கு செய்தித்தாள்களில் வெளியாகும் முக்கிய செய்திகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

இரண்டு நாட்களாக டீசலுக்காக வரிசையில் காத்திருந்தவர் உயிரிழப்பு

இலங்கையின் தங்கொட்டுவ நகரிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் சுமார் இரண்டு நாட்களாக டீசலுக்காக காத்திருந்த ஒருவர், சனிக்கிழமை இரவு 7 மணியளவில் கீழே விழுந்து தங்கொடுவ வைத்தியசாலையில் அனுமதிப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார் என தமிழ் மிரர் செய்தித்தாளில் செய்தி வெளியாகியுள்ளது.

உயிரிழந்தவர், ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் செல்லும் பஸ் ஓட்டுநர் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இவர் இலங்கையின் பன்னல, கோனவில பகுதியை சேர்ந்தவர். வயது 47.

அதேபோல வென்னப்புவவில் எரிபொருள் வாங்குவதற்காக வரிசையில் நின்ற 51 வயது நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"இலங்கை விரைவில் திவாலாகும்"

இலங்கை விரைவில் வங்குரோத்து நிலைமையை அடைவதை எவராலும் தடுக்க முடியாது என முன்னாள் கணக்காளர் தெரிவித்துள்ளார் என வீரகேசரி பத்திரிகையில் செய்தி வெளியிட்டுள்ளது.

அரசியல்வாதிகளுக்கு வழங்கப்படும் வரப்பிரசாதம் முழுமையாக நீக்கப்பட்டால் மாத்திரமே படித்த இளம் தலைமுறையினர் அரசியலுக்குள் பிரவேசிப்பார்கள் என முன்னாள் கணக்காளர் நாயகம் காமினி விஜயசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், டாலர் நெருக்கடி தீவிரமடைந்து வருகிறது. டாலர் பரிவர்த்தனை குறித்து அதிக அவதானம் செலுத்துமாறு பல வருடகாலமாக அறிவித்தும் அதனை பொருட்படுத்தாமல் தன்னிச்சையாக செயற்பட்டதன் விளைவை தற்போது நாடு முழுவதும் எதிர்கொள்கிறது. நாடு விரைவில் வங்குரோத்து நிலைமையை அடையும் என கவலையுடன் தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

எரிபொருள் விநியோகத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை

இலங்கையின் ஆற்றல்துறை அமைச்சகம், எரிபொருள் விநியோக நிலையங்களை கண்கானித்து எரிபொருளை விநியோகிக்க வேண்டும் என உள்துறை அமைச்சகத்திடம் தெரிவித்துள்ளது என டெய்லி மிரர் என்னும் ஆங்கில செய்தித்தாளில் செய்தி வெளியாகியுள்ளது

இலங்கை கடுமையான அந்நிய செலவாணி பிரச்னையை சந்தித்து வருகிறது. இதற்கு மத்தியில் குறைந்த அளவிலான எரிபொருள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. எனவே முக்கிய பொருளாதார நடவடிக்கைகளுக்காக இந்த எரிபொருள் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள எரிபொருள் சிலோன் பெட்ரோலியம் காப்ரேஷனுக்கு வழங்கப்படும் அதை ஆற்றல் துறை கண்காணிக்கும்.

எரிபொருள் நிலையங்களில் சரியான முறையில் விநியோகம் நடைபெறுவதில்லை என புகார்கள் எழுந்த நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என ஆற்றல் துறை தெரிவித்துள்ளது.

இடைகால அரசு குறித்து ஆலோசனை

நாட்டிற்குள் ஏற்பட்டுள்ள அமைதியற்ற சூழ்நிலைக்கு மத்தியில், சர்வகட்சி இடைகால அரசாங்கமொன்றை ஸ்தாபிப்பது குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ கவனம் செலுத்தியுள்ளதாக சிங்கள பத்திரிகையான லங்காதீப செய்தி வெளியிட்டுள்ளது.

ஆளும் அரசாங்க கூட்டணியிலிருந்து விலகி, சுயாதீனமாக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நேற்றிரவு இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.

எனினும், நேற்றைய தினம் இடம்பெற்ற இந்த கலந்துரையாடல் எந்தவித இணக்கப்பாடும் இன்றி முடிவுடைந்துள்ளது.

இடைகால அரசாங்கமொன்றை ஸ்தாபிப்பது குறித்த யோசனையை, சுயாதீனமாக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களினால், ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், ஜனாதிபதி தரப்பினர் அதில் திருத்தங்களை மேற்கொண்டுள்ளனர்.

இவ்வாறான சூழ்நிலையில், இந்த இரண்டு தரப்பினரும் நாளைய தினம் (12) மீண்டும் கூடி ஆராயவுள்ளதாக அந்த பத்திரிகை செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.