திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 22 ஜூலை 2022 (22:57 IST)

இலங்கை ராணுவத்தின் தாக்குதல்: பிபிசி செய்தியாளர் நேரில் கண்டது

Srilanka
இலங்கையில் இன்று ஜுலை 21- 22க்கு இடைப்பட்ட இரவில் ஜனாதிபதி செயலகத்தில் திடீரென குவிக்கப்பட்ட ராணுவத்தினர் அங்கு முகாமிட்டிருந்த போராட்டக்காரர்களைத் தாக்கி அவர்களது முகாம்களையும் பலவந்தமாக காலி செய்தனர்.
 
அது மட்டுமில்லாமல் அப்போது அந்தக் காட்சியை ஃபேஸ்புக் நேரலை மூலம் நேயர்களுக்கு வழங்கிக் கொண்டிருந்த பிபிசி தமிழ் வீடியோ செய்தியாளர் ஜெரின் சாமுவேலையும் அவர்கள் கடுமையாகத் தாக்கினர்.
 
அப்போது அங்கே என்ன நடந்தது என்பதை ஜெரினோடு சேர்ந்து அப்போது அங்கு பணியாற்றிக்கொண்டிருந்த பிபிசி தமிழ் செய்தியாளர் எம்.மணிகண்டன் விவரிக்கிறார்:
 
கொழும்பு காலி முகத் திடலில் இருக்கும் ஜனாதிபதி செயலகத்தில் ராணுவத்தினர் குவிக்கப்படுவதாக வந்த தகவலை அடுத்து நானும் வீடியோ செய்தியாளர் ஜெரினும் அந்த இடத்திற்கு சென்றோம். முதலில் அங்கு பெரிய அளவில் கூட்டம் இல்லை. அங்கிருந்தபடி முகநூலில் ஒரு நேரலை செய்தோம். அந்த நேரலை முடிந்ததும் சுமார் 100 ராணுவ வீரர்கள் சாலையை மறித்தபடி குவிக்கப்பட்டனர்.
 
சற்று நேரத்தில் மீண்டும் நேரலையை தொடங்கி அந்த காட்சிகளை பதிவு செய்து செய்தியாக வழங்கிக் கொண்டிருந்தோம். சில வினாடிகளில் ராணுவ வீரர்கள் அங்கிருந்து அதிபர் செயலகத்தின் வாயிலை நோக்கிய சாலையில் வேகமாக முன்னேற தொடங்கினார்கள். பின்னர் பல்வேறு சாலைகளில் இருந்தும் 1000க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் அந்தப் பகுதியில் குவிந்தார்கள்.
 
அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்று கணிக்க முடியவில்லை. அனைத்து சாலைகளையும் அடைத்தபடி, செய்தி சேகரித்துக் கொண்டிருக்கும் செய்தியாளர்கள் மற்றும் போராட்டக்காரர்களை பின்னோக்கி தள்ளியபடி வந்தார்கள். திடீரென சாதாரண உடை அணிந்து இருந்த ஒருவர் ஜெரின் கன்னத்தில் இரண்டு மூன்று முறை அடித்ததும் அதிர்ச்சி அடைந்தோம்.
 
பின்னோக்கி செல்வதற்கு முயன்றோம். ஆனால் ராணுவத்தினர் எங்களை முன்னோக்கி தள்ளியபடியே வந்தார்கள். அவர்கள் கைகளில் துப்பாக்கிகளும் லத்திகளும் இருந்தன. எங்களுடன் மற்றொரு செய்தியாளர் அன்பரசனும் இருந்தார். எங்களுடைய நேரலை தொடர்ந்து சென்று கொண்டிருந்தது. அப்போது கைபேசியை பிடுங்கி தரையில் வீசி விட்டார்கள் ராணுவத்தினர்.
 
அதன் பிறகு தரையில் இருந்து செல்போனை எடுத்து மீண்டும் நேரலையை தொடங்கினோம். மீண்டும் ஒரு சில நிமிடங்களுக்குள்ளாக சீருடை அணிந்தோர், சீருடை அணியாதோர் என பத்து பதினைந்து பேர் சேர்ந்து ஜெரினை தாக்க தொடங்கினார்கள். அதில் ஒருவர் கன்னத்தில் அடித்தார். மற்றொருவர் வயிற்றில் எட்டி உதைத்தார். உடனடியாக நாங்கள் சூழ்ந்து அவரை மீட்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டோம்.
 
ஒரு ராணுவ வீரர் ஜெரினின் கையில் இருந்து தொலைபேசியை பிடுங்கி அதிலிருந்து தகவல்களை அழிக்கத் தொடங்கினார். நாங்கள் 'ஊடகம்... ஊடகம்' என்று கத்திய போதும், 'பிபிசி' என்று குரல் எழுப்பிய போதும் எதற்கும் அவர்கள் செவி சாய்க்கவில்லை. சிறிது நேரத்திற்குப் பிறகு அதில் இருந்த காட்சிகளை அழித்துவிட்டு செல்போனை திருப்பித் தந்தார்கள். அதன் பிறகு ஏராளமான ராணுவ வீரர்களை கடந்தபடி நாங்கள் தங்கி இருக்கும் இடத்துக்கு வந்து சேர்ந்தோம்.