1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: புதன், 2 நவம்பர் 2022 (23:00 IST)

இலங்கை: "ராஜபக்ஷ குடும்பத்துக்கு எதிரான போராட்டம் தொடரும்" - கொழும்பில் தடையை மீறி திரண்ட மக்கள்

Srilanka
இலங்கையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொழும்பு வீதியில் இன்று ஆயிரக்கணக்கில் திரண்ட பொதுமக்கள் குரல் கொடுத்துள்ளனர்.

 
இலங்கை தலைநகர் கொழும்பில் அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், வெகுஜன அமைப்புகள், மாணவர் சங்கங்கள் உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து இன்று (நவம்பர் 2) அரசுக்கு எதிராக கண்டன பேரணி ஒன்றை நடத்தினார்கள். காவல்துறை தடையை மீறி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

 
அடக்குமுறைக்கு எதிராகவும், பொருளாதார அழுத்தங்களுக்கு எதிராகவும், உரிமைகளுக்காகப் போராடுவோம்' என்ற முழக்கத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பேரணியில் பங்கெடுத்தனர்.

 
இன்று பிற்பகல் 3 மணிக்கு மருதானை எல்பின்ஸ்டன் திரையரங்கிற்கு அருகாமையில் இருந்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் அதில் பங்கெடுத்தவர்கள், பேரணியாக கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தை நோக்கி புறப்பட்டனர். இந்த போராட்டத்துக்கு காவல்துறை தடை விதித்திருந்தபோதும், பெருமளவில் திரண்ட மக்கள் கூட்டம் காரணமாக, அவர்களை காவல்துறையினர் பேரணி தொடங்கிய வேளையில் தடுத்து நிறுத்தவில்லை.

 
சஜித் பிரேமதாச தலைமையிலான எதிர்க்கட்சியான சமகி ஜன பலவேகய மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவை இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

 
இலங்கையில் ரணிலுக்கு எதிராக இன்று மீண்டும் மக்கள் போராட்டம்
ரணில் அரசாங்கம் 8 அரசியல் கைதிகளுக்கு வழங்கிய பொது மன்னிப்பு - முழு விவரம்
இலங்கை ஜனாதிபதி அதிகாரத்தை குறைக்கும் 22ஆவது திருத்தச் சட்டம் என்ன சொல்கிறது?
 
கள நிலவரம் என்ன?
 
இந்த போராட்டத்தில் பங்கெடுத்தவர்கள் நாட்டில் அடக்குமுறை போன்ற சூழலை ஆளும் ஆட்சியாளர்கள் ஏற்படுத்தி வருவதால் அந்தப்போக்கைக் கைவிடுமாறு குரல் கொடுத்து வருவதாக கொழும்பில் போராட்டக்களத்தில் பிபிசி தமிழுக்காக செய்தி சேகரித்து வரும் ரஞ்சன் அருண் பிரசாத் தெரிவித்தார்.

 
இந்த போராட்டத்தில் ஐக்கிய மக்கள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாதாலி சம்பிக்க ரணவக்க, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தயசிரி ஜயசேகர, நாடாளுமன்ற உறுப்பினர் உதயகுமார் உள்ளிட்ட பலரும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

 
இலங்கை தமிழ் போராட்டம்

 
பிபிசி தமிழிடம் பேசிய உதயகுமார், "இன்று நாடு பொருளாதார வீழ்ச்சியடைந்திருக்கும் சூழலில் மக்களின் ஆணையின்றி ரணில் விக்ரமசங்க ஜனாதிபதியாக பதவியேற்றிருக்கிறார். அவர் அடக்குமுறையைக் கையாண்டு, ஊடகம் மற்றும் கருத்து சுதந்திரத்தை முடக்கி வருகிறார்.
 
மேலும், மக்களின் அடிப்படை போராடும் உரிமையை கூட பறித்து அவர்களுக்கு எதிராக கைது பிரயோகம் செய்கிறார். பயங்கரவாத சட்டத்தைப் பயன்படுத்தி கைது நடவடிக்கை மேற்கொள்கிறார். இது ஒரு ஜனநாயக நாட்டுக்கு ஏற்புடையதல்ல, இந்த செயல்பாடுகளை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்," என்று கூறினார்.

 
எதிர்க்கட்சி முழு ஆதரவு

 
அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை சமகி ஜன பலவேக 100 சதவீதம் ஆதரிப்பதாக சஜித் பிரேமதாச கூறியுள்ளார்.

 
சமகி ஜன பலவேகய, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, முன்னிலை சோசலிசக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, 43ஆவது டிவிசன் உட்பட கிட்டத்தட்ட 20 அரசியல் கட்சிகள் மற்றும் கிட்டத்தட்ட 150 தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்கள் இன்றைய போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
 
 
இரண்டு பிரதான விடயங்களின் கீழ் அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

 
"அரசாங்கத்தின் அடக்குமுறையை முடிவுக்குக் கொண்டு வருதல் மற்றும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நீக்குதல் ஆகிய இரண்டு கோரிக்கைகள் நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடியவை" என்று அவர் தெரிவித்தார்.

 
இதேவேளை, மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) இன்றைய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. அந்த கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க, "சந்தர்ப்பவாதிகள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்" என்று கூறியிருக்கிறார்.

 
இலங்கை போராட்டம்

 
இந்த நிலையில், இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மெளலவி ஃபர்ஹான், "எங்களை ஜாதி அடையாளம் மூலமாக பிரித்து வைத்தார்கள். இந்த நாடு பெளத்தர்கள், இந்துக்கள், கிறிஸ்துவர்கள், முஸ்லிம்கள் உள்பட எல்லோருக்கும் உரியது. நாங்கள் இங்குதான் பிறந்தோம், இங்குதான் சாவோம். ஒற்றுமையோடு எங்களுடைய பிரச்னையை எதிர்கொள்வோம். ஆனால், ஆட்சியில் இருப்பவர்கள் இந்த நாட்டின் வளர்ச்சியை குட்டிச்சுவர் ஆக்கும் வகையில் செயல்படுகிறார்கள். அதற்கு எதிராக நாங்கள் போராடுகிறோம்," என்கிறார்.

 
சில வாரங்களுக்கு முன்பு காலி முகத்திடல் போராட்டத்தை முன்னெடுத்ததால் கைது நடவடிக்கைக்கு உள்ளான மெளலவி இஸ்மத் பிபிசி தமிழிடம் பேசும்போது, "மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஒருவர் ஜனாதிபதியாக இருந்தால் அவரை நாங்கள் வரவேற்போம். ஜனாதிபதி வேலையை ரணில் செய்யாமல் ராஜபக்ஷ குடும்பத்தினர் பிறப்பிக்கும் உத்தரவுகளை செயல்படுத்தி வருவதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். என்னை இரண்டு முறை சிங்கக் கொடியை வைத்திருந்ததாகக் கூறி கைது செய்தார்கள். ரணில் பதவி விலகட்டும். மக்கள் ஓட்டு போட்டு ஒருவரை ஜனாதிபதியாக தேர்வு செய்யட்டும்," என்று கூறினார்.

 
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோரை விடுதலை செய்ய வேண்டும் என்பது போராட்டக்காரர்களின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாகும்.
 
பயங்கரவாத தடைச் சட்டம் உட்பட அனைத்து அடக்குமுறைச் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என்றும், கருத்துச் சுதந்திரத்தின் மீதான அரசாங்கத்தின் அடக்குமுறையை இல்லாதொழிக்க வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
இதற்கிடையில், இலங்கை வர்த்தக சம்மேளனம் உட்பட ஆறு முக்கிய வர்த்தக சபைகள், கூட்டறிக்கையில், பேரணி குறித்து கவலைகளை எழுப்பியதுடன், திட்டமிட்ட எதிர்ப்பு அணிவகுப்பை கைவிடுமாறு அனைத்து பிரிவுகளையும் அரசியல் குழுக்களையும் கேட்டுக் கொண்டுள்ளது.
 
சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண எடுக்கப்படும் முயற்சிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இதுபோன்ற போராட்டங்களை கைவிடுமாறு அனைத்து தரப்பினரையும் கேட்டுக் கொள்வதாகவும் வர்த்தக சபைகள் கூறியுள்ளன.