இரும்புத்திரை வீழ்ச்சிகண்டு கால் நூற்றாண்டு ஆகிவிட்ட பின்னரும் கூட, ஜேர்மனிக்கும், செக் குடியரசுக்கும் இடையிலான எல்லைப் பகுதியில் வாழும் மான்கள், இன்னமும் இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லையைக் கடப்பதில்லை என்று இரு நாட்டு ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.
ஒரு காலத்தில் இந்த இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லையில் மின்வேலி அமைக்கப்பட்டிருந்தது.
ஆனால், இப்போதும் கூட அந்த இரு நாடுகளின் எல்லையில் வாழும் செம்மான்கள் அந்த எல்லைப் பகுதியைக் கடப்பதில்லை என்று, அவற்றில் சுமார் 300 மான்களை பிந்தொடர்ந்து பார்த்த போது தெரியவந்திருக்கிறது.
அவற்றை கண்காணிக்கும் சில கருவிகள் மூலம் அவற்றின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டுள்ளது.
இப்போது மின்வேலி அகற்றப்பட்டு அந்தப் பகுதி ஒரு திறந்த வெளியாக இருக்கின்ற போதிலும், இரு நாடுகளிலும் பனிப்போர் காலகட்டத்துக்குப் பின்னர் பிறந்த மான்கள்கூட நாடுகளின் எல்லையைக் கடந்து செல்வதில்லையாம்.
மான் குட்டிகள் தமது முதலாவது வயதில் தமது தாய் மான்களை பிந்தொடர்ந்து பழகியதால், அவை அதனைக் கொண்டே எங்கு போவது, எங்கு போகக் கூடாது என்று வகுத்து, வாழ்கின்றனவாம்.