வடகொரிய தலைவர் கிம்மின் சீன பயணம்: 6 சுவாரஸ்ய தகவல்கள்

c
Last Modified வியாழன், 29 மார்ச் 2018 (17:36 IST)
சீன அதிபர் ஷி ஜின்பிங் அழைப்பின் பேரில் மார்ச் 25 முதல் 28ஆம் தேதி வரை கிம் சீனாவில் இருந்தார். இருநாட்டு தலைவர்களுக்கு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் "வெற்றிகரமாக" இருந்ததாக சீனா மற்றும் வடகொரிய ஊடகங்கள் தெரிவித்தன.
 
கிம் பயணம் செய்த காலநேரம்
 
2011ஆம் ஆண்டு அதிபராக பதவி ஏற்ற பிறகு கிம்மின் முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும். மேலும், தென்கொரிய அதிபர் மூன் ஜே-இன் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்பையும், கிம் விரைவில் சந்திக்க உள்ளார்.
 
கிம், பீஜிங்கிற்கு கிளம்பிய பின்தான் அவரது விஜயத்தை இருநாடுகளும் உறுதி செய்தன. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த பயணம் ரகசியமாக வைக்கப்படும் நடைமுறையே கடைபிடிக்கப்பட்டது.
 
"எனது முதல் வெளிநாட்டு பயணம் சீன தலைநகர் பீஜிங்தான் என்பதில் சந்தேகம் இல்லை" என்று கிம் தெரிவித்திருந்தார்.
 
கிம்மின் தந்தையான கிம் ஜாங்-இல்லும், 2000ஆம் ஆண்டு சீனாவைதான் தேர்ந்தெடுத்தார்.
 
இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், தென் கொரியா மற்றும் அமெரிக்க பயணங்களை கிம் முடிவு செய்ததாக வடகொரிய ஊடகங்கள் தெரிவித்தன. ஆனால், பீஜிங்கிற்கு, சீன அதிபரே அழைப்பு விடுத்துள்ளதாக இருநாடுகள் தரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.
 
கிம் பயணித்த ரயில்
 
கிம் சீனாவுக்கு சென்றதாக வதந்திகள் பரவியதற்கான காரணம், "சிறப்பு ரயில்" ஒன்று பீஜிங்கிற்குள் நுழைந்தது தெரியவந்ததுதான்.
 
"அடர்ந்த பச்சை நிறத்தில் மஞ்சள் கோடுகள்" கொண்ட ரயில், கிம்மின் தந்தை வெளிநாடுகளுக்கு செல்ல பயன்படுத்தும் ரயில் போன்று இருந்ததை பலரும் பார்த்தனர்.
 
ஆனால் இரு ரயில்களுக்கும் குறிப்பிடப்பட்ட வித்தயாசங்கள் இருந்தன.
 
கிம் ஜாங்-உன் ரயிலின் இருக்கைகள் சிவப்பு நிறத்தில் இருந்தன. ஆனால், கிம் ஜாங் இல்-லின் ரயில் இருக்கைகள் பழுப்பு நிறத்தில் இருக்கும் என கூறப்படுகிறது.
 
"கிம் ஜாங்-உன் அந்த ரயிலை மாற்றி அமைத்துள்ளதாக தெரிகிறது என்றும் பதிவுஎண் தட்டும் சற்று மாற்றப்பட்டுள்ளது" என்றும் தென் கொரிய நாளிதழ் சோசுன் இல்போ தெரிவிக்கிறது .
 
உயரத்திற்கு அஞ்சி கிம் ஜாங்-இல் மற்றும் கிம் இரண்டாம் சங் போன்ற தலைவர்கள் விமானங்களுக்கு பதிலாக ரயில்களை தேர்ந்தெடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால், கிம் ஜாங்-உன் ரயிலை தேர்ந்தெடுத்ததற்கு முற்றிலும் மாறுபட்ட வேறு ஏதாவது காரணம் இருக்கலாம்.
 
ஐ.நா விதித்துள்ள தடைகள்படி, வடகொரியாவில் இருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் சோதனைக்கு உட்படுத்தப்படுவது கட்டாயமாகும். எனவே ரயிலில் செல்வது என்பது எளிமையான ஒன்று என்றும் சோசுன் இல்போ கூறுகிறது.
c
 
பயண முறை
 
கிம்மின் சீன பயணம், "அதிகாரபூர்வமற்றது" என கூறப்பட்டாலும், அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பில் எந்த குறையும் இல்லை என சீன மற்றும் வட கொரிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
 
பீஜிங்கில் உள்ள கிரேட் ஹால் ஆஃப் பீபில் (Great Hall of People) என்ற இடத்தில் கிம்முக்கு "பெரும் விழா" நடத்தப்பட்டது.
 
20 சொகுசு கார்கள் உள்ளடக்கிய தொடரணியில் பயணித்தார் கிம். அந்த தொடரணியில் ஒரு அவசர மருத்துவ வாகனமும் இடம்பெற்றிருந்தது.
 
வடகொரியாவின் செய்தி நிறுவனமான கே.சி.என்.ஏவும், கிம்மின் தொடரணியில் இந்த குறிப்பிட்ட 21 வாகனங்கள் எவ்வாறு சென்றன என்பதை விவரித்துள்ளன.
 
2011ஆம் ஆண்டில் கிம் ஜாங்-இல் சீனாவிற்கு வந்தபோது இருந்ததை விட பாதுகாப்பு அதிகமாக அளிக்கப்பட்டிருந்தது என்று ஹாங்காங்கை சேர்ந்த பத்திரிக்கையான ஹாங்காங் எக்கனாமிக் ஜர்னல் அறிக்கை வெளியிட்டுள்ளது.
 
பயணத்தின் தொணி
 
வடகொரிய ஊடகங்களில் ஒளிபரப்பப்பட்ட காணொளிகளைவிட, சீனாவின் ஊடகங்களால் ஒளிபரப்பப்பட்ட காணொளிகளில், கிம் மிகவும் அமைதியாக தோற்றமளித்தார்.
 
சீன ஊடகம் வெளியிட்ட புகைப்படத்தில், ஷி ஜின்பிங்கிற்கு பக்கத்தில் நின்றிருந்த கிம், மிகவும் சோகமாக தெரிந்தாலும், இரு தலைவர்களின் மனைவிகளும் சிரித்த முகத்துடன் இருந்ததை பார்க்க முடிந்தது.
 
குறிப்பாக ஒரு காணொளியில், பெரும்பாலான பகுதிகளில், ஜின்பிங் தொடர்ந்து கிம்மிடம் பேசுவதையும், அதை கூர்ந்து கவனிக்கும் அவர், சில இடங்களில் குறிப்பெடுத்துக் கொள்வதையும் பார்க்க முடிந்தது.
 
பெரும்பாலான நேரங்களில், வடகொரிய ஊடகங்கள் கிம் தன்னை சுற்றி நிற்பவர்களுக்கு வழிமுறைகள் கூறுவது போலவும், அவர்கள் கைகளில் உள்ள புத்தகங்களில் குறிப்பெடுத்துக்கொள்வது போலவுமே ஒளிபரப்பியுள்ளன.
 
குழு
 
அதிபர் கிம்மின் சீன பயணத்தின் அடுத்த முக்கிய விஷயமாக இருப்பது, அவர் மனைவி ரி சோல்-ஜீ. அவரும் இந்த பயணித்தில் பங்கெடுத்தார்.
 
தென்கொரிய செய்தி நிறுவனமான யோன்ஹாப்பின் குறிப்புகளின்படி, ஒரு வடகொரிய தலைவரின் வெளிநாட்டு பயணத்தில் அவரின் மனைவி பங்கெடுப்பது என்பது இயல்பான ஒரு விஷயமல்ல என்று குறிப்பிடப்பட்டுள்ளதோடு, கிம்மிற்கு முன்பு இருந்துள்ள தலைவர்கள் கடைபிடித்த வழிமுறையை இது `உடைக்கும்` வகையில் அமைந்துள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
 
இந்த மாத தொடக்கத்தில், தென்கொரிய அதிகாரிகளை பியாங்யாங்கில் கிம் சந்தித்தபோதும், அவரின் மனைவி ரீ உடனிருந்தார்.
 
கொரியாவை கூர்ந்துநோக்கும் நிபுணர்கள், பல சந்திப்புகளில், அதிபர் கிம்முடன் அவரின் மனைவி ரீ இருப்பது என்பது, வடகொரிய தலைவரை மிகவும் மென்மையான தலைவராக பிரதிபலிக்க செய்வதற்கான ஒரு வழிவகை என்கின்றனர்.
 
"சர்வாதிகார தலைவரின் இளம் மனைவியும், முன்னாள் பாடகியுமான ரீ சோல்-ஜூ, இந்த இரண்டு நாள் பீஜிங்கில் தங்கியதில், மூன்று வெவ்வேறு ஆடைகளை அணிந்திருந்ததை, சீன நாட்டு ஊடகங்களால் காணொளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன" என்று ஹாங்காங்கின் பத்திரிக்கையான சௌத் சைனா மார்னிங் போஸ்ட் தெரிவித்துள்ளது.
 
சீன பயணம் மேற்கொண்ட, வடகொரியாவின் முக்கிய அதிகாரிகளில், அந்நாட்டின் தொழிலாளர் கட்சியின் துணை தலைவரான சுவே ரியாங் ஹே மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சரான ரீ யோங்-ஹோ ஆகியோரும் உள்ளடங்குவர்.
 
குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளின்போது, தென்கொரியாவிற்கு பயணம் செய்து, பொதுமக்களின் கவனத்தை கவர்ந்த, அதிபர் கிம்மின் சகோதரியான கிம் யோ-ஜோங், இந்த சீன பயணத்தில் பங்கேற்கவில்லை.
 
பயண அட்டவணை
 
சீன உயரதிகாரிகளுடனான சந்திப்பிற்கு பிறகு, அந்நாட்டு அரசால் நடத்தப்படும் ஆலோசனை குழுவான சீனாவின் அறிவியல் கழகத்தின் "கண்டுபிடிப்பு சாதனைகளை காண்பிக்கும்" கண்காட்சியையும் அதிபர் கிம் பார்வையிட்டார்.
 
கழகத்தின் பார்வையாளர்கள் புத்தகத்தில் எழுதிய கிம், "அண்டை நாடான சீனாவின் வலிமையை நான் உணர்வேன். கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில், மிகவும் சிறந்த அறிவியல் சாதனைகளை சீனா சாதிக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
 
அந்நாட்டின் மிகச்சிறந்த ஆராய்ச்சி நிறுவனங்களில் ஒன்று சீன அறிவியல் கழகம். கிம் பார்வையிட இது ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டது என்று தெரியவில்லை.
 
கடந்த காலத்தில், சீன பயணத்தின் போது வட கொரிய தலைவர்கள் பல்வேறு நகரங்களை பார்வையிட்டுள்ளனர்.
 
2006ஆம் ஆண்டு ஒருவார காலம் சீனா பயணத்தின்போது, கிம் ஜாங்-இல் வுஹான், குவான்ஹோ, சுஹாய் மற்றும் ஷென்சென் ஆகிய நகரங்களுக்கு சென்றார். ஆனால், கிம் ஜாங்-உன் பயணம் தலைநகர் பீஜிங்கோடு முடிந்துவிட்டது.


இதில் மேலும் படிக்கவும் :