வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: சனி, 15 ஜூன் 2019 (21:28 IST)

குஜராத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த தந்தை - மகன் உள்ளிட்ட 7 பேர் பலி

குஜராத்தின் தப்ஹோய் பகுதியில், ஹோட்டல் ஒன்றின் கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்ய சென்ற ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். கால்வாயில் வெளியேறிய வாயு ஒன்றினால் ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக இவர்கள் உயிரிழந்தனர்.
இந்த ஏழு பேரில் மூன்று பேர் துப்புறவு பணியாளர்கள். மேலும் ஓட்டுநர் ஒருவரும், சம்பவம் நிகழ்ந்த ஹோட்டலில் பணிபுரிந்து வந்த மூன்று பேரும் இறந்ததாக துணை ஆய்வாளர் கே.எம் வகேலா தெரிவித்தார்.
 
கழிவுநீர் கால்வாய்க்குள் இறங்கும்போது துப்புரவு பணியாளர்கள் போதிய பாதுகாப்பு உபகரணங்களுடன் செல்லவில்லை என்று பிபிசி குஜராத்தியிடம் பேசிய அவர் கூறினார்.
 
உயிரிழந்தவர்களின் சடலங்கள் உடல்கூராய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
 
இதனை தொடர்ந்து தர்ஷன் ஹோட்டலின் உரிமையாளர் ஹசன் அப்பாஸ் போர்னையா மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
 
"கழிவுநீரை சுத்தம் செய்ய துப்புறவு பணியாளர்கள் உள்ளே சென்றார்கள். அதில் ஒருவர் முதலில் உள்ளே சென்றிருப்பார் என்று நம்புகிறோம். அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டிருக்கலாம். அவர் வெளியே வரவில்லை என்பதால் மற்றவர்கள் உள்ளே சென்றார்கள். அனைவரும் உயிரிழந்துவிட்டார்கள்" என்று தபோய் டிஎஸ்பி கல்பேஷ் சோலன்கி கூறியதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி கூறுகிறது.
 
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நான்கு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று குஜராத் முதலமைச்சர் விஜய் ருபாணி அறிவித்துள்ளார்.
 
இறந்து போன மஹேஷ்பாய் படன்வாடியா, அஷோக்பாய் ஹரிஜன், ஹிதேஷ்பாய் ஹரிஜன் மற்றும் மகேஷ்பாய் ஹரிஜன் ஆகியோர் தபோய் பகுதிக்கு அருகேயுள்ள துவாவி கிராமத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.
 
இதில் அஷோக்பாய் மற்றும் ஹிதேஷ்பாய் ஆகியோர் தந்தை - மகன் என்று துவாவி கிராமத்தின் தலைவர் சிராக் பட்டேல் உறுதிபடுத்தியுள்ளார்.
 
இதில் உயிரிழந்த விஜய் சௌத்ரி மற்றும் சஹ்தேவ் வசவா இருவரும் சூரத்தை சேர்ந்தவர்கள். மேலும் அஜய் வசவா நேத்ரங் பகுதியை சேர்ந்தவர் ஆவார்.
 
"அரசாங்கத்திற்கு எதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று தெரியவில்லை. சிலைகளுக்கும் கொண்டாட்டங்களுக்கும் பணம் செலவழிக்கிறார்கள். ஆனால் துப்புரவு பணியாளர்களுக்கு போதிய வசதிகள் செய்துத்தர செலவழிக்க மாட்டார்கள்" என்கிறார் பிபிசி குஜராத்தியிடம் பேசிய ஜிக்னேஷ் மேவானி.
 
துப்புறவு பணியாளர்கள் அதிகளவில் உயிரிழப்பதில் குஜராத் இரண்டாவது இடத்தில் உள்ளது. இது அவமானகரமானது என்றும் ஜிக்னேஷ் மேவானி தெரிவித்தார்.
 
சஃபாய் கர்மசாரி சட்டத்திற்கான தேசிய ஆணையத்தின் தரவுகள்படி 1993 - 2018ஆம் ஆண்டு வரை கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கி சுத்தம் செய்ய சென்ற 122 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தப்பட்டியலில் குஜராத் இரண்டாம் இடத்தில் உள்ளது. இதனால் அதிகம் பேர் உயிரிழந்திருக்கும் தமிழ்நாடு. இங்கு 194 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இந்தியாவில் மொத்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 676.