செளதி: கார் ஓட்ட உரிமை கேட்டதால் பெண் செயற்பாட்டாளர்கள் கைதா?

Last Updated: திங்கள், 21 மே 2018 (11:43 IST)
செளதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட அனுமதி கோரும் இயக்கத்தைச் சேர்ந்த பெண் செயற்பாட்டாளர் ஒருவர், தன் மீதும் தனது சக பெண் செயற்பாட்டாளர்கள் மீதும் போலிக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதாகக் கூறியுள்ளார்.
செளதியில் பெண்கள் கார் ஓட்டுவதற்கு இருந்த தடை நீக்கப்படவுள்ள நிலையில், இணையத்தின் தனக்கு கொலை மிரட்டல்கள் வருவதாகப் பெண்  செயற்பாட்டாளர்கள் மனல் அல்-ஷரீஃப் கூறியுள்ளார்.
 
பெண்கள் கார் ஓட்டுவதற்கான தடை ஜூன் 24-ம் தேதி நீக்கப்படவுள்ளது. சில நாட்களுக்கு முன்பு செளதியில் பல பெண் செயற்பாட்டாளர்கள் கைது  செய்யப்பட்ட நிலையில், ஷரீஃப் இக்கருத்தைக் கூறியுள்ளார். ''துரோகிகள்'' என்றும், வெளிநாட்டுச் சக்திகளுடன் இணைந்து பணியாற்றுபவர்கள் என்றும் அவர்கள்  மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன. தற்போது ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் மனல் அல்-ஷரீஃப், செயற்பாட்டாளர்களை குறிவைத்து  ''ஒருங்கிணைக்கப்பட்ட அவதூறு பிரசாரம்'' நடப்பதாகக் கூறுகிறார்.
 
கடந்த வாரம் ஏழு ஆண் மற்றும் பெண் செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டனர். பெண்கள் கார் ஓட்டும் உரிமைக்காகப் பிரசாரம் செய்த லுஜெயின் அல்  ஹத்லொலும் கைது செய்யப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது. பெண்கள் உரிமை செயற்பாட்டாளர்களான ஈமான் அல்-நஃப்ஜன், அஸீஸ் அல்-யூஸெஃப், டாக்டர்  ஆயாஷா அல்-மானே, டாக்டர் இப்ராஹிம் அல்-மொடிமி மற்றும் முகமது அல் ரபியா ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளதாக நம்புவதாக அம்னெஸ்டி அமைப்பு  கூறியுள்ளது.
செளதியில் பெண்கள் எடுக்கும் பல்வேறு முடிவுகளுக்கும், செயல்படுவதற்கும் ஆண்களின் அனுமதியைப் பெற வேண்டும் என சட்டம் உள்ளது. பழமைவாத  செளதி நாட்டில், சமூக சீர்திருத்தங்களை செய்வதாக, பட்டத்து இளவரளர் சல்மான் பாராட்டப்பட்டார்.
 
''செளதி இளவரசர் சல்மான் தன்னை சீர்திருத்தவாதியாக காட்டிக்கொண்டார். ஆனால், தற்போது செளதியில் எதிர்ப்பு தெரிவிக்கும் குரல்களை அடக்க அடக்குமுறையைப் பயன்படுத்துகிறார்'' என அம்னெஸ்டி அமைப்பு கூறுகிறது.

இதில் மேலும் படிக்கவும் :